14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு : 390 கோடி கேட்டும் உரிமையை விற்க மறுப்பு!!

413

medical_atm4

மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் உருவாக்கிய இயந்திரத்தில் தீக்காயம் உள்ளிட்ட காயங்களுக்கான முதலுதவி மருந்து, பிளாஸ்திரி, பேண்டேஜ் துணி, இறப்பர் கையுறை ஆகியவற்றை பணம் செலுத்திப் பெறலாம்.

பேஸ்போல் விளையாட்டின்போது தனது நண்பர்கள் காயமடைவதைப் பார்த்ததும் இது போன்ற இயந்திரத்தை உருவாக்கி, விளையாட்டு மைதானங்களில் வைப்பது குறித்த யோசனை அச்சிறுவனுக்கு எழுந்தது.

காசு போட்டால் முதலுதவி சாதனங்கள் அளிக்கும் இயந்திரத்துக்கான வடிவத்தை தனது வகுப்பில் செயல்முறைப் பாடத்தின் கீழ் அளித்தான். பின்னர், முழு அளவில் ஒரு இயந்திரத்தை அவன் உருவாக்கினான். அந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையையும் அவன் பெற்றுள்ளான்.

இந்த நிலையில், மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனம் அந்த இயந்திரத்துக்கான உரிமையை வாங்க முன்வந்தது.

அதற்காக 3 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) வரை அளிப்பதாகக் கூறியது. ஆனால் அந்த இயந்திரத்துக்கான உரிமையைப் பெரு நிறுவனத்துக்கு விற்க ரெய்லர் ரோஸன்தால் மறுத்துவிட்டான்.

இதுவரையில் தனிப்பட்ட முறையில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் திரட்டியுள்ள இந்தச் சிறுவன், அந்த இயந்திரத்துக்கான காப்புரிமையை யாருக்கும் அளிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளான்.

விளையாட்டுத் திடல்கள், பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்கள், கல்விக் கூடங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தனது கண்டுபிடிப்பைத் தானே நேரடியாக நிறுவத் திட்டமிட்டுள்ளான். ஸிக்ஸ் ஃபிளாக்ஸ் என்னும் கேளிக்கைப் பூங்கா 100 இயந்திரங்களுக்காக முற்பணம் அளித்துள்ளது.