கிளிநொச்சி வரலாற்றில் அதி கூடிய மழை வீழ்ச்சி : ஒரே நாளில் 380 மி.மீற்றராக பதிவு!!

780

Kilinichchi

இதுவரை காலமும் கிளிநொச்சியின் மழை வீழ்ச்சி ஆண்டுக்கு சாரசரியாக 1250 மி.மீற்றராக இருந்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று பெய்த ஒரு நாள் மழைவீழ்ச்சி மட்டும் 380 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.

இதுவே கிளிநொச்சி வரலாற்றில் அதி கூடிய மழை வீழ்ச்சியாகும் என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரோ நாளில் அதிக கூடிய மழையும், வரலாற்றில் என்றும் வெள்ளம் ஏற்படாத பிரதேசங்களில் எல்லாம் அதிக வெள்ளப்பெருக்கும், நீண்ட காலத்திற்கு பின்னர் கோடை மழையில் கிளிநொச்சியின் அனைத்து பெரிய நீர்ப்பாசன குளங்களும் வான் பாயும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் 17.05.2016 அன்று மதியம் ஒரு மணி வரையான தகவலின் படி இரணைமடுகுளம் 25 அடியாகவும், அக்கராயன்குளம் 26.8 அடியாகவும், கரியாலைநாகபடுவான்குளம் 10.5 அடியாகவும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

அத்துடன், கல்மடுகுளம் 25.1 அடியாகவும், கனகாம்பிகைகுளம் 11 அடியாகவும், வன்னேரிக்குளம் 10.2 அடியாகவும், புதுமுறிப்பு 20.2 அடியாகவும், பிரமந்தனாறு 13.11 அடியாகவும், குடமுருட்டி 9.9 அடியாகவும் நீர் மட்டம் காணப்படுகிறது.

இதில் இரணைமடு குளத்தை தவிர ஏனைய அனைத்துக் குளங்களும் வான் பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.