
மன்னார் மடு மாத தேவாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, கத்தோலிக்க பக்தர்கள் அங்கு செல்ல வசதியாக கொழும்பு – மடு இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த போர் காலத்தில் சேதமடைந்த மதவாச்சி – மடு இடையிலான ரயில் பாதை இந்தியாவின் உதவியுடன் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டு முடிக்கப்பட்டது. மதவாச்சியை ரயில் நிலையத்தை அடுத்து, நெல்லிக்குளம், செட்டிக்குளம், மடு ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மடு மாத தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு இந்த ரயில் பாதை பேருதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இலங்கை ரயில் திணைக்களம் கொழும்பு – மதவாச்சி இடையில் 8 மேலதிக ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் தினமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ, அலுத்கம, கொழும்பு கோட்டை ஆகிய ரயில் பாதைகளில் இருந்து 12ம், 13ம், 14ம் திகதி வரை மடுவுக்கான ரயில் சேவைகள் நடத்தப்பட உள்ளன. இதனிடையே இலங்கை போக்குவரத்துச் சபையும் மடுவுக்கான விசேட பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.





