மீண்டும் அணியில் இடம் பிடிக்க போராடும் தமிழக வீரர் பத்ரிநாத்!!

386

bathrinath

உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் பத்ரிநாத் தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கடந்த 2008ல் இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.

இவர், 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கெதிரான நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கினார். 32 வயதான இவர் இதுவரை, 2 டெஸ்ட் (63 ஓட்டங்கள்), 7 ஒருநாள் (79 ஓட்டங்கள்), ஒரே ஒரு சர்வதேச T20 (43 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தவிர இவர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக 2011ல் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர், தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இருப்பினும் இவர் ரஞ்சி கிண்ண உள்ளிட்ட உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இது குறித்து பத்ரிநாத் கூறுகையில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். இதற்காக தெரிவுக்குழுவினரிடம் கேட்கப் போவதில்லை. மாறாக, அடுத்து வரவுள்ள உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தெரிவுக்குழுவினரை என் மீது திசை திருப்ப செய்வேன்.

மூத்த வீரர் லட்சுமணின் ஓய்வுக்கு பின்னர், நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அடுத்து நடந்த தொடரில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பின் ஒரு முறை கூட இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதற்காக யார் மீது குறை கூற விரும்பவில்லை.

T20 போட்டியில் மட்டும் விளையாடுவது எனது இலக்கு அல்ல. டெஸ்ட், ஒருநாள் என்று அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டிக்கேற்ப ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது.

அணியின் வெற்றியில் எனது பங்களிப்பு எவ்வளவு என்பதை மட்டுமே பார்ப்பேன். நான் ஒன்றும் சுரேஷ் ரெய்னாவோ, டோனியோ கிடையாது. இதுவரை குறைந்த எண்ணிக்கையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

ஆனால் நிறைய முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளேன். இந்த அனுபவம் அனைத்து விதமான போட்டியிலும் சாதிக்க உதவும் என்றும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை இக்கட்டான நிலையில் வெற்றி பெற செய்துள்ளேன் எனவும் கூறினார்.