மழையுடனான வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

568

Rain Affect

மழையுடனான வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,96,000 இற்கும் அதிகமானோர் தற்காலிக இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரநாயக்க சிரிபுர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் இதுவரை 134 பேர் காணாமல் போயுள்ளதாக மேல் மாகாண பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

மண்சரிவினால் 66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கட்டளை தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட 14 சடலங்களில் 8 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 11 சடலங்கள் முழைமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் 3 சடலங்களில் உடல் பகுதிகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மழையுடனான வானிலைக் காரணமாக மீட்பு பணிகள் நேற்று மாலை ஆறு மணியுடன் நிறுதப்பட்டுள்ளதாகவும் இன்று காலை தொடக்கம் மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேல் மாகாண பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கேகாலை புலாத்கொஹூபிட்டிய களுபஹனவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மண்சரிவில் சிக்கி காணமல் போன மேலும் 11 பேரின் சடலங்கள் தேடப்பட்டு வருவதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கடுகண்ணாவையில் மண்சரிவில் சிக்கி காணமல் போன 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மண்சரிவி்ல் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அத்தோடு அதிக மழையுடனானவானிலைக் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்திள்ளார். 21 பேர் இதுவரை காணமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் யட்டியந்தோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையினால் அங்கிருந்து சுமார் 50 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.