செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!!

338

moon

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும் என சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே சில நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளன. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த செவ்வாய் கிரகப் பயணத் திட்ட நிறுவனத்தின் தலைவர் பாஸ் லேன்ஸ்டார்ப் இது தொடர்பில் தெரிவித்ததாவது,

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள், ஒன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்துவதற்குரிய சூழல் உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் அங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு பலரும் விரும்புகின்றனர்.

இந்தப் பயணத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இளைஞர்களாகவும் இருக்கலாம் முதியவர்களாகவும் இருக்கலாம். பயணம் செய்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து அவர்களிடம் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்.

எதிர்வரும் 2022ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. இதற்காக 40 விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு எட்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப மாட்டார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் பயண நடைமுறையை வகுத்துள்ளோம்.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் அங்கு காய்கறிகளை விளைவிப்பது மருத்துவ சிகிச்சையை அளிப்பது போன்ற பணிகளைக் கவனிப்பார்கள் எனவும் லேன்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார்.