ஆஸஷ் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி : அவுஸ்திரேலியா பரிதாபத் தோல்வி!!

632

Ashesseries

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியகள் மோதும் ஆஸஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 270 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதையடுத்து 32 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கண்டாலும், இயன்பெல், டிம் பிரிஸ்னன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

3வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை எடுத்திருந்தது. இயன்பெல் 105 ஓட்டங்களுடனும், டிம் பிரிஸ்னன் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் ஆரம்பமானது. இயன்பெல், டிம் பிரிஸ்னன் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்கள். நிலைத்து நின்று ஆடிய இயன்பெல், ரையான் ஹாரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 95.1 ஓவர்களில் 330 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

ஆஸி. அணி தரப்பில் ரையான் ஹாரிஸ் 7 விக்கெட்டுக்களையும், நதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்ஸ், டேவிட் வோனர் ஆகியோர் களம் கண்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 109 ஓட்டங்களை குவித்தது.

ரோஜர் 49 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த உஸ்மான் கவாஜா 21 ஓட்டங்களில் வெளியேறினார்.பின்னர் வோனருடன் இணைந்தார் கிளார்க். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வோனர் 71 ஓட்டங்களிலும், கிளார்க் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததானது.

இறுதியில் அந்த அணி 68.3 ஓவர்களில் 224 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஸ்வர்ட் பிராட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21ம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.