சிறப்பாக விளையாடத் தவறினால் நீக்கப்படுவீர்கள் -ஆஸி. வீரர்களுக்கு எச்சரிக்கை..!

369

aus‘சிறப்பாக விளையாடத் தவறினால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களை, பயிற்சியாளர் டேரன் லீமேன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், செஸ்டர் லி ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில், ஆஸி. அணி வகையில் தோல்வியைத் தழுவியது.

இரண்டாவது இன்னிங்சில் 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதல் விக்கெட்டுக்கு 109 ஓட்டங்களை சேர்த்ததுடன் ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸ்டூவர்ட் பிராடின் அபாரமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸி. அணி 224 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

வார்னர் அதிகபட்சமாக 71 ஓட்டங்களை எடுத்தார். ரோஜர்ஸ் 49, கவாஜா, கிளார்க் தலா 21, சிடில் 23 ஓட்டங்களுடன் வெளியேற,மற்ற வீரர்கள் எதிர்ப்பின்றி சரணடைந்தனர்.

ஆஸி. அணி 56 ஓட்டங்களுக்கு கடைசி 8 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டூவர்ட் பிராடு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் வீழ்த்திய அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அணி 3,0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வசப்படுத்தியது.

வெற்றியை தாரை வார்த்த ஆஸி. அணி வீரர்களை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில், ஒழுங்காக விளையாடாத துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர் டேரன் லீமேன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக விளையாடத் தவறுபவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதிலாக திறமையான வீரர்களை தேர்வு செய்ய தயங்கமாட்டோம்’ என்றார்.

இங்கிலாந்து ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் 21ம் திகதி தொடங்குகிறது.