கைவிரல்கள் இல்லாத சிறுமி : ஆனால் விருது அழகான கையெழுத்துக்காக!!

435

12

தலையெழுத்து சரியில்ல, நேரம் நல்லா இல்லை என்று வழக்கமான வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிலர் விதி மீது பழிபோடுவார்கள். ஆனால் தடைகள் பல இருப்பினும் தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வெர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya Ellick) இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.

உடல் குறைபாட்டுடன் பிறந்த அனையா எல்லிக், தன் மன உறுதியை விடாமல், ஜெயித்துக் காட்டி, பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மணிக்கட்டுக்குக் கீழே விரல்கள் இல்லாமல் பிறந்த அனையா, பிறரை எதிர்பார்க்காமல் தானாகவே தன் வேலைகளைச் செய்துகொள்ளப் பழகிக் கொண்டார்.

இரண்டு கைகளுக்கு நடுவே பேனாவை வைத்துக்கொண்டு எழுதப் பழகினார். கைகள் இரண்டும் நன்றாக இருப்பவர்களிலேயே, பலரது எழுத்துக்கள் படிக்கவே முடியாத அளவுக்கு கிறுக்கல்களாக இருக்கும். ஆனால் விரல்கள் இல்லாமல் எழுதிய அனையா எல்லிக்கின் அழகான கையெழுத்திற்காக, 2016ம் ஆண்டுக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது (Nicholas Maxim Special Award) கிடைத்துள்ளது அந்நாட்டவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

வெர்ஜீனியாவில் உள்ள ‘க்ரீன்பேரியர் க்ரிஸ்டியன் அகடமியில் (Greenbrier Christian Academy) முதல் கிரேடு படித்துவருகிறார் அனையா. அழகான கையெழுத்துப் போட்டியை Zaner-Bloser என்ற கல்வி நிறுவனம், உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு இடையே, ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

13

இந்த போட்டியில், முதல் வகுப்பு தொடங்கி 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில், சுமார் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அனையாவின் முத்து முத்தான கையெழுத்தைக் கண்ட நடுவர்கள், ”இரண்டு கைகளும் இருப்பவர்கள்கூட இவ்வளவு அழகாக எழுதமாட்டார்கள்” என பிரமித்துப்போனார்கள்.

இதுகுறித்து அனையாவின் பெற்றோர்கள், ‘அனையா கைவிரல்கள் இல்லாமல் பிறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். கவலையோடு இருந்த நாங்கள், இவளது சுறுசுறுப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாவற்றையும் உடனே கற்றுக்கொள்கிறாள். டிரெஸ் போட்டுக்கொள்வது, ஷூவுக்கு லேஸ் கட்டிக்கொள்வது என எல்லாவற்றையும் தானாகவே செய்துகொண்டு பள்ளிக்கு ரெடி ஆகிவிடுகிறாள். பியானோ நன்றாக வாசிக்கிறாள். அழகான கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், முதல் பரிசாக 1,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. தற்போது உலம் முழுவதிலும் இருந்து, அனையாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்கின்றனர் பெருமிதத்துடன்.

வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம் எப்படித் தோன்றியது என கேட்டதற்கு, ” எனக்கு ரோல்மொடல் 30 வயது ஜெசிக்கா காக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கும் இரண்டு கைகள் இல்லை. ஆனாலும், தன்னுடைய விடா முயற்சியால் தற்போது விமானம், கார் ஓட்டுவது என்று எல்லா வேலைகளையும் கால்களாலேயே செய்வதைக் கண்டேன். நானும் அவரைப் போல எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன். இதுவே என் வெற்றிக்குக் காரணம்” என்கிறார், அனையா எல்லிக்.