வவுனியா நெல் வயல்களில் கபில நிறத் தத்தியின் தாக்கத்தால் ஆபத்து..!

375

vavuniyaவவுனியா மாவட்டத்தில் 2013 சிறுபோக நெற்செய்கை அறுவடையானது 40% முடிவடைந்துள்ள நிலையில், சற்று தாமதமாக பயிர் ஸ்தாபிக்கப்பட்ட பாவற்குளம் பகுதியில் நெல் வயல்களில் கபில நிற தத்தியின் தாக்கம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை வவுனியா விவசாய திணக்களத்தின் பயிர் பாதுகாப்பிற்கு பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் இரா.தர்மதேவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாவற்குளம் 6 ஆம் வாய்க்கால் பகுதியில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு சரியான தடுப்பு முறைகளை கையாண்டு இத்தத்தியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 50% வரை விளச்சல் பாதிக்கப்படுவதோடு அருகாமையில் உள்ள நெல் வயல்களுக்கும் மிக விரைவாக பரவலடையும் அபாயம் காணப்படுகின்றது.

ஆசிய நாடுகளில் நெல்லை பாதிக்கும் பூச்சிகளில் பிரதான இடத்தை வகிப்பது கபில நிறத்தத்தி ஆகும். இதன் பாரிய தாக்கமாக தத்தி எரிவு விளங்குகிநது. தத்திகளினால் பாதிக்கப்பட்ட பயிர்; முதலில் மஞ்சள் நிறமாவதோடு தத்தியின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலர்ந்து இறந்துபோகும்.

கபில நிறத் தத்திகள் தண்டில் இருந்து சாற்றை உறிஞசிக்குடிப்பதனால் எரிவு ஏற்படுத்துவதோடு மேலதிகமாக புற்பறட்டை, பம்பை பறட்டை, மற்றும் வாடற்பறட்டை போன்ற வைரஸ் நோய்களை பரப்பும் காவியாக செயற்படுகின்றது. குடலை பருவத்திற்கு முன்னர் பயிரில் அதிக அளவு குட்டையான சிறகுள்ள நிரையுடலிகளே காணப்படும்.

பயிர்கள் முதிர்ச்சியடையும்போது பறந்து செல்லக்கூடிய நீண்ட சிறகுகளைக்கொண்ட தத்திகள் அதிக எண்ணிக்கையில் உருவாகும் எனவும் தெரிவித்த அவர், இதனை கட்டுப்படுத்தும் வழிகளாக எதிர்புத்தன்மை கொண்ட வர்கங்களை பயிரிடுதல் (பிஜி300, பிஜி357, பிஜி304, பிஜி352), பயிர்களை தொடர்ந்து அவதானித்து நீர் முகாமைத்துவம் வெய்தல், வாய்க்கால் மற்றும் சுற்றுபுறங்களில் களைகள் இல்லாமல் துப்பரவாக வைத்தல், தேவைப்படுமாயின் சிபாரிசு செய்யப்பட்ட பீடைநாசினி ஒன்றினை வயலில் நீரினை வடிகட்டியபின் வலு தெளிகருவி மூலம் பயிரின் அடிப்பகுதியில் படும் வகையில் பயிர்களை பிரித்து விசிறியும் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர் சிபாரிசு செய்யப்பட்ட பீடைநாசினிகளை வீசுவதனூடாகவும் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தார்.