நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் : உறங்கிய எம்.பி (வீடியோ)..

386

நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்லான் அன்று கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

இதற்கு முதலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும் பேசினார்.

இப்படியாக தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், ப.சிதம்பரத்திற்கு பின்னால் அமர்ந்திருந்த ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி பால்வை கோவர்த்தன் ரெட்டி நன்கு உறங்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.