எகிப்து ராணுவ தாக்குதலில் 525 பேர் பலி : போராட்டம் தொடர்கிறது..!!

328

egypt

எகிப்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 525 பேர் கொல்லப்பட்டபோதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி முர்ஷியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முர்ஷி அடக்குமுறையை கையாள்வதாக கூறி அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த ஜூலை 3ம் திகதி, முர்ஷியை கைது செய்த ராணுவம், அவரை தனது காவலில் வைத்துள்ளது.

இந்நிலையில் முர்ஷி தலைமையிலான முஸ்லிம் பிரதர்ஹுட் கட்சியினர் அவரை மீண்டும் பதவியில் நியமிக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கெய்ரோவின் இரு பகுதிகளில் முகாம்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களை ஒடுக்குவதற்காக தற்காலிக ஜனாதிபதி முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் ராணுவம் களத்தில் இறங்கியது. முகாம்களில் இருந்தவர்களை விரட்டியடிக்க முயன்றபோது அவர்கள் வன்முறையில் இறங்கினர். ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீச ஆரம்பித்தனர். வேறு வழியின்றி ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

இதில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உட்பட 525 பேர் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் முகாம் அமைத்திருந்த பகுதியே போர்க்களம் போல் காணப்படுகிறது. இந்த செயலை கண்டித்து நாடு முழுவதும் முர்ஷியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லா இடங்களிலும் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. எகிப்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதால் ஒரு மாதகாலம் அவசர நிலையையும் ராணுவம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி எல்பராடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சமரசம் மூலம்தான் தீர்வு காணவேண்டும். அவ்வாறில்லாமல் அடக்குமுறையை கையாள்வது சரியல்ல. மேலும் பொதுமக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடும் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை.

இம்முடிவை நிர்வாகம் என்னை ஆலோசிக்காமலேயே எடுத்துள்ளது. இதுபோன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பதவி விலகுகிறேன் என்று கூறியுள்ளார். எல் பராடியின் பதவி விலகலுக்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முஸ்லிம் பிரதர்ஹுட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெஹாத் எல் ஹதாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் எங்களில் எத்தனை பேரை ராணுவம் கொன்றாலும், தொடர்ந்து எங்கள் போராட்டம் நடக்கும். முர்ஷியை மீண்டும் பதவியில் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.