2014ல் வட பகுதிக்கு 100 வீதம் மின் விநியோகம் – மின்சக்தி அமைச்சர் பவித்ரா..!

282

elec2014 ம் ஆண்டில் வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்க உள்ளதாக இலங்கையின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திற்கு தடையின்றி சீராக மின்சாரம் வழங்குவதற்காக 3300 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகத்தில் உப மின் நிலையமென்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் திறந்து வைக்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வோல்ட் கொண்ட அதி உயர் மின் அழுத்த மின் விநியோக மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு ஏற்கெனவே வழங்கப்படும் மின் விநியோகம் அதி உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டதாக மாற்றப்பட உள்ளது.

நேற்று புதிய மின் விநியோக மார்க்கத்தினூடாக பரீட்சார்த்தமான மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

இதேவேளை யுத்தம் காரணமாக வடக்கின் அநேக பகுதிகளின் மின் விநியோக கட்டமைப்பு முழுமையாக சேதமடைந்தன. மின்சாரத்தை என்றும் கண்டிராத பல பகுதிகளுக்கு புதிதாக மின்சார வசதி அளிக்கப்பட்டு வருகிறது. யுத்தம் முடிவடைந்த பின் முதலில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை மின் விநியோக மார்க்கம் அமைக்கப்பட்டது.

தற்பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள சகல நகரங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பவற்றுக்கு 100 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பகுதிக்கு 67 வீதமும் யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு தலா 90 வீதமும் மன்னார் மாவட்டத்திற்கு 80 வீதமும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 50 வீதமும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. என்றார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.