பெண்களின் தலைமுடியை திருடும் விசித்திர கும்பல்..!

325

hairஒரு நாட்டின் அதிபர் தீர்க்கவேண்டிய அத்தியாவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோ முன் ஒரு வித்தியாசமான பிரச்சினை வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி தொடர்ந்து திருடப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் கத்தி முனையில் பெண்களை மிரட்டும் திருடர்கள், அவர்களின் கூந்தலைக் கத்தரித்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் இதனை செயற்கை முடி தயாரிப்பவர்களிடம் விற்று பணமாக்கி விடுகின்றார்கள்.

இத்தகைய திருட்டு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மரகைபோவில் இத்தகைய திருடர்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

இதில் விசித்திரம் என்னவென்றால், முடி வளர்க்கும் பல்வேறு பெண்களிடம், அவர்களின் முடியை குதிரைவால் போல் கட்டிக்கொண்டு வரும்படி திருடர்கள் கூறுகிறார்களாம். அப்போதுதான் அவர்களுக்கு கத்தரிக்க எளிதாக இருக்குமாம். எனினும், இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை.

காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து ஒரு பெண்ணிடம் கேட்டபோது, தன்னை கேலி செய்வார்கள் என்ற காரணத்தினால் தான் புகார் தர மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் காரகாசில் நேற்று ஒரு ரெயில் நிலையத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க அதிபர் மதுரோ வந்திருந்தார். அவர் தனது சிறப்புரையில், இந்த முடித் திருடர்களை பெண்களின் முடியைக் கத்தரிக்கும் மாபியா கும்பல் என்று குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.