வவுனியாவில் தேர்தல் வன்முறைகள் இல்லை: பொலிஸ்..!

567

votingவவுனியா மாவட்டம் தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுமின்றி அமைதியாக இருக்கிறது, இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறவில்லை என்று வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சி.டி.கே.சன்ன அபேரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் ஆகக் கூடுதலாக 1700 பொலிஸாரைத் தன்னகத்தே கொண்டு இயங்கும் வவுனியா பொலிஸ் நிர்வாகப் பிரிவில் இதுவரை தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுவும் எந்தத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது பதவிக் காலத்தில் தான் உள்ளூராட்சி, மாகாண சபை, பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட 13 தேர்தல்களை நாட்டின் பல்வேறு பாகங்களில் சந்தித்திருப்பதாகவும் அவற்றைச் பாரிய தேர்தல் வன்முறைகளின்றி சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு தான் சட்டமும் ஒழுங்கையும் கடுமையாக அமுல்படுத்தி அர்ப்பணிப்போடு கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா நகரத்தில் அபேட்சகர்கள் கட்அவுட்கள் எதனையும் பொருத்துவதற்கு தான் அனுமதியளிக்கவில்லை. ஏற்கெனவே வவுனியா நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரால் பொருத்தப்பட்டிருந்த கட்அவுட் ஒன்று தனது உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.

வடமாகாண மக்கள் சந்திக்கும் முதலாவது மாகாண சபைத் தேர்தல் இதுவென்பதால் தான் மிகவும் கடமைப் பொறுப்புடன் தேர்தல் சட்ட விதிமுறைகளையும், நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்துவதற்கும் தான் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏற்படக் கூடிய எந்தக் கட்சியினரின் குறைநிறைகளையும் செவிசாய்த்துக் கேட்பதற்கும் அதற்குரிய பரிகாரங்களைக் காண்பதற்கும் தான் எந்நேரமும் தயாராக இருப்பதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் சொன்னார்.