மிஸ்கோலால் சீரழிந்த இளம் பெண்ணின் வாழ்க்கை..!

522

missedcallதன் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் (Missed call) இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே தொலைத்துள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரு இளம்பெண் அனாதையாக சுற்றிக் கொண்டிருந்தார். ரோந்து பொலிசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர், தனது ஊர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் என்று கூறினார். பொலிசார் ஆற்றிங்கல் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

அங்குள்ள பொலிசார் இதுபற்றி விசாரித்தபோது, அந்த பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்த விவரத்தை தெரிவித்ததோடு அந்த பெண்ணை ஆற்றிங்கல் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த பெண் கூறியதாவது…

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு மிஸ்கோல் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசியபோது, திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த ஷானு (வயது 20) என்பவர் பேசினார்.

அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தேன்.

அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி 2 நாட்களுக்கு முன்பு அவரோடு சென்றேன். ஒரு காரில் என்னை அழைத்துச்சென்ற ஷானு திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிந்தார்.

பின்னர் நாங்கள் கோவளம் கடற்கரைக்கு வந்து தங்கினோம். அங்கு ஷானு என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு செலவுக்கு பணம் இல்லை என்று கூறி எனது 4 பவுன் செயினையும் வாங்கிக் கொண்டார்.

அதை பணமாக்கி வருவதாக கூறி சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடி அலைந்த போது, என்னை ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது.

இவ்வாறு பொலிசாரிடம் தெரிவித்தார்.

பொலிசார் அந்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த இலக்கத்தை கொண்டு ஷானுவின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். நேற்று ஷானு கைது செய்யப்பட்டார். அவரை ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.