பல சாதனைகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது உலக தடகள சாம்பியன்ஷிப்..!

391

athleticதடகள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 14-வது உலக தடகள சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டி ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று கோலகலமாக முடிந்தது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டன.

இந்தப் போட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே குடும்பத்தைப் போல மாஸ்கோவில் ஒன்று கூடி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இவர்களில் சிலர் தங்களின் கடந்த உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். பலர் புதிய உலக சாம்பியன்களாக உருவெடுத்தனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை மற்றும் இந்தியா சார்பில் பல வீரர்கள் இடம்பெற்றிருந்த போதும்  யாரும் பதக்கம் வெல்லவில்லை.

தடகளப் போட்டிகளில் 100, 200 மற்றும் 4×100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் ஜமைக்கா வீரர், வீராங்கனைகளே எப்போதும் ஆதிக்கம் செலுத்துவர். அது, இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் நடந்துள்ளது.

100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் உசேன் போல்டும், மகளிர் பிரிவில் ஃப்ரேஸர்-பிரைஸம் தங்கம் வென்றிருந்தனர்.

இந்த நிலையில், 4ஷx100 மீட்டர் ஓட்டப் பந்தயம் கடைசி நாளான நேற்று நடைபெற்றது.

மகளிர் பிரிவில் ஜமைக்கா வீராங்கனைகள் தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனைகளையும் படைத்தனர். அவர்கள் 41.29 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து சாதனை புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பதித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற இப்பிரிவின் ஆடவர் ஓட்டப் பந்தயப் போட்டியிலும் உசேன் போல்ட் அடங்கிய ஜமைக்கா அணி தங்கம் வென்றது.

அந்த அணியினர் 37.36 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றனர். அவர்களைத் தொடர்ந்து வந்த அமெரிக்க அணி 37.66 விநாடிகளில் வெள்ளியும், பிரிட்டன் அணியினர் 37.92 விநாடிகளில் வெண்கலமும் வென்றனர்.

இந்த சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 மீட்டர் போட்டியில் ஜமைக்காவின் ஃப்ரேஸர்-பிரைஸ் தங்கம் வென்றார். 3 விதப் போட்டிகளிலும் தங்கம் வென்ற முதல் ஜமைக்கா பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஓபர்க்ஃபால் 69.05 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றனர். அவுஸ்திரேலிய வீராங்கனை மிக்லி வெள்ளிப் பதக்கமும், ரஷ்ய வீராங்கனை அபகுமோவா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கென்யாவின் ஜோப்கோச் ஜம் 1 நிமிடம் 57.38 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ரஷ்ய வீராங்கனை சவிநோவா வெள்ளியும், அமெரிக்க வீராங்கனை மார்ட்டின்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆடவர் பிரிவு 1500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் கென்யாவின் கிப்ரோப் தங்கம் வென்றார். அவர், 3 நிமிடம் 36.28 விநாடிகளில் இலக்கை எட்டினார். இவர் இப்போட்டியின் மற்றொரு ஓட்டப் பந்தயத்திலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் பிரான்ஸ் வீரர் டாம்கோ 18.04 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். கியூபாவின் பிச்சார்டோ (17.68 மீ.) வெள்ளியும், அமெரிக்காவின் கிளேய் (17.52 மீ.) வெண்கலமும் வென்றனர்.

புதிய உலக சாதனை

ஒவ்வொரு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும், தங்கப் பதக்கம் வெல்லும் லட்சியத்துடன், புதிய உலக சாதனை படைக்க வேண்டும் என்று வீரர்கள் செயல்படுவர். அதன்படி 2013 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உயரம் தாண்டுதல் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த போடன் பான்டரென்கோ 2.41 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார்.

சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் ரஷ்ய வீராங்கனை டட்யனா இùஸன்கோ 78.80 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்துள்ளார்.

4×100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் மகளிர் அணியினர் 41.29 விநாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தனர்.

இதேபோல், 2011-ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 உலக சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த உலக சாம்பியன்ஷிப்

15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் (22-30 தேதி) நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் பெய்ஜிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.