அப்துல் கலாம் எழுதி ‘மை ஜர்னி: டிரான்ஸ்பார்மிங்க் ட்ரீம்ஸ் இன்டூ ஆக்ஷன்ஸ்’ (‘எனது பயணம்: கனவுகளை செயல்களாக மாற்றுதல்’) என்று தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்திய காலகட்டத்தில் அறிவி யல் ஆலோசகராக பணியாற்றியபோது தான் சந்தித்த எண்ணற்ற சவால்கள், கற்றுக்கொண்ட விஷய ங்கள், ஓய்வு பெற்றது, அதன்பின்னர் கற்பித்தலில் தன்னை அர்ப்பணித்தது, ஜனாதிபதி பதவியில் அமர்ந்தது தொடர்பான சம்பவங்களை சுவைபட மனம் திறந்து எழுதி இருக்கிறார். அதில்தான் தன் நிறைவேறாத கனவு பற்றி அப்துல் கலாம் கூறி இருக்கிறார்.
போர் விமானத்தின் விமானி ஆவதற்குத்தான் அப்துல் கலாம் கனவு கண்டிருக்கிறார். இந்த கனவை அவர் வெகு காலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் போய் விட்டது என இனம்புரியாத ஒரு வருத்தத்துடன் அப்துல் கலாம் குறிப்பிட்டிருக்கிறார்.
டேராடூனில் இந்திய விமானப்படையில் இருந்து அப்துல் கலாமுக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பும் வந்து இருக்கிறது. 25 பேர் அதில் பங்கேற்றிருக்கின்றனர். 8 விமானிகள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு அது. ஆனால் அதில் அப்துல் கலாம் 9–வதாக வந்துள்ளார். இதனால் அவர் தேர்வு பெற முடியவில்லை.





