முகநூல் ஊடாக 450 லட்சம் ரூபாய் மோசடி : பெண் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!!

சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் மூலம் கவர்ச்சிகரமான வட்டி தருவதாக விளம்பரம் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி,

சுமார் 450 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை கைது செய்து சந்தேக நபர் , ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்திய பின்னர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் பதுளை கண்தேகெதர பகுதியைச் சேர்ந்த திலினி ஷாமீன் சோக்மன் (31) என்ற மூன்று குழந்தைகளின் தாயாகும். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதேபோல் 5 லட்சம் ரூபாய் பெற்று, அந்த பணத்திற்கு வட்டியோ அல்லது வாங்கிய பணத்தையோ திருப்பித் தராதது தொடர்பாக , பணம் கொடுத்த பெண் ஹட்டன் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், பெண்ணை ஹட்டன் காவல் துறையினர் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆனால், அவர் கையெழுத்திடாமல் ஐந்து மாதங்களாக ஏமாற்றியதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து பதுங்கியிருந்த அந்த சந்தேக நபர், தனது தோழியைச் சந்திக்க ரயில் மூலம் , 09ம் திகதி மாலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹட்டன், கம்பொல, வெலிகட, வெல்லவாய, தம்புள்ளை, கண்டி, புத்தல உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இதேபோல் ஏமாற்றி பணம் பெற்றதாகவும், பணம் கொடுத்தவர்கள் தொலைபேசி மூலம் ஹட்டன் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்ற பணத்திற்கு நம்பிக்கையை உறுதி செய்வதற்காக சில மாதங்கள் உறுதியளித்த வட்டியையும் செலுத்தியுள்ளார்.

மேலும், இவ்வாறு மோசடி செய்த பணத்தை வைத்து நகை வியாபாரம் செய்வதற்காக சந்தேக நபர் இந்தியா சென்றதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடா துப்பாக்கி சூட்டில் யாழ் யுவதி உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

கடந்த 7 ஆம் திகதி கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொழில்போட்டி காரணமாக இக் கொலை சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா அல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமயனுக்கு வைத்த இலக்கிலேயே தங்கை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொலை சம்பவத்திற்கான காரணத்தை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சோலஸ் ரோட் பகுதியின் கேஸ்டில்மோர் அவென்யூ மற்றும் ஸ்வான் பார்க் ரோட் அருகே இந்த வீடு அமைந்துள்ளது.

பொலிஸார் சென்றபோது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் , சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயையும் கண்டுள்ளனர்.

இதனையடுத்து உடனே இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் 20 வயதான மார்க்கம் பகுதியைச் சேர்ந்த யுவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸார் கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தாலும், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இந்த வீடு பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றவாளிகள் திட்டமிட்டு இந்த வீட்டிற்கு வந்து இந்த கொடூரச் செயல்களைச் செய்துள்ளனர். இதுவே ஒரு இலக்கு தாக்குதல் என்பதற்கு இது சான்றாகும், என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் ஆனது கனடாவாழ் தமிழர்களிடையே பேரதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பெண்!!

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின்(Spain) பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க இளைஞன் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த பையை பெண் ஒருவர் எடுத்து செல்ல முயற்சித்ததனை அவதானித்த ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் பூ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் பணப்பையை வெளிநாட்டுப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்தப் பணப்பையில் 810 யூரோக்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஸ்பெயின் பெண்ணுக்கு சொந்தமான பல வங்கி அட்டைகளும் அதில் காணப்பட்டுள்ளன.

பெண்ணின் பணப்பை

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள பூக்கடை அருகே வெளிநாட்டுக் குழு பயணித்து கொண்டிருந்தபோது, ​​அந்தப் பெண்ணின் பணப்பை தரையில் விழுந்துள்ளது., அதை அறியாமல், அந்தப் பெண் குழுவுடன் பேருந்தை நோக்கி பயணித்துள்ளார்.

பணப்பையை எடுத்த ஒரு பெண் அதை எடுத்துக்கொண்டு ஓட முயன்ற போது, ​​பூ விற்கும் தினேஷ் குமார என்ற இளைஞன் அவரை துரத்திச் சென்று பிடித்துள்ளார்.

பணப்பையை பெற்ற பிறகு, அவர் ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸ் தலைமை ஆய்வாளரிடம் அதை ஒப்படைத்தார்.

உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள் குயின் ஹோட்டலுக்கு அருகில் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியுடன், குறித்த வெளிநாட்டுக் குழுவை அடையாளம் கண்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் : சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்கள்!!

காலியில் கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை, பாடசாலை மாணவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பிரதேசத்தில் தாயார் தனது 3 வயது மகளை கிணற்றில் வீசிய கொலை செய்ய முயற்சித்த நிலையில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய கிரினுவில் பகுதியில் வசிக்கும் குஷினி ஷெஹாரா என்ற 3 வயது சிறுமியே காப்பாற்றப்பட்டுள்ளார்.

கிணற்றில் விழுந்த பின்னர் உயிர் பிழைத்த சிறுமி தற்போது எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளால் கோபமடைந்த தாய், தனது மகளை கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றில் சிறுயின் அலறல் சத்தம் கேட்ட சாமிக லக்ஷான் மற்றும் ரோஷன் குமார ஆகிய இரண்டு மாணவர்கள் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த 2 மாணவர்களும் கரந்தெனியவில் உள்ள பந்துல சேனாதீர வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல் : வெளியான காணொளியால் அதிர்ச்சியில் பெற்றோர்!!

கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து,

அவர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, அதே வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து தாக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த ஆசிரியர் தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன் சிறிது காலமாக மிக மோசமாக நடந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களுடன் தனக்கு தொடர்புகள் இருப்பதாக கூறும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இந்த நபர்,

அரசியல் ரீதியாக அவதூறு பரப்புவதன் மூலம் தனது பயிற்சி வகுப்புகளில் நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இளம் மாணவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய ஆசிரியர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்,

இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.

எனினும் மாணவர்களை மண்டியிட்டு அடிக்க கட்டாயப்படுத்திய இந்த ஆசிரியர் செய்த வன்முறைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலையானது இன்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் (11.03) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,968 ரூபாவாக காணப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,270 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 242,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 222,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,490 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 211,900 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

சிறுவன் ஹம்தியின் மரணம் : தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம்!!

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி ஃபஸ்லிம் என்ற மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் தீர்ப்பை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவல, பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதைத் தொடர்ந்து சிறுநீர் வடிகட்டுதல் செயல்முறை முழுமையாக தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் சிறுவனின் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சிறுவனின் மரணம் வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டால், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேலதிக நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைத்திய ஊழியர்களின் அலட்சியத்தால் தங்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, சிறுவனின் பெற்றோர் பொரளை பொலிஸில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மகனுக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட தந்தை கைது!!

வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க முற்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(09.03) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போதைப் பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இளைஞர் ஒருவர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தற்கு 6 மாத புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது 4 மாதங்கள் நிறைவடையில் நிலையில் குறித்த இளைஞரை பார்வையிடுவதற்காக குருநாகல் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் குற்றத்தடுப்பு பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் தந்தையும், பொலிசாராக கடமையாற்றும் தாயும் வருகை தந்துள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்திறகுள் சென்று தமது மகனை பார்வையிட்ட போது அவர்கள் இருந்த இடத்தை நோக்கி பொலிஸ் மேப்ப நாய் வந்ததை அவதானித்த அவர்கள் தமது பையில் இருந்த பொதி ஒன்றை எடுத்து வெளியே வீசியுள்ளனர்.

இதனை காவல் கடமையில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் அவதானித்துள்ளனர். உடனடியாக மோப்ப நாயின் உதவியுடன் அதனை சோதனையிட்ட போது அதில் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மோப்ப நாய் அதனை வீசிய இளைஞரின் தந்தையான உப பொலிஸ் பரிசோதகரையும் அடையாளம் காட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உப பொலிஸ் பரிசோதகரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுத்தமான இலங்கை என்ற எண்ணக்கருவுடன் பால்நிலை சமத்துவத்தினை அடைந்து கொள்வோம் – சுபாசினி சிவதர்சன்

சுத்தமான இலங்கை என்ற எண்ணக்கருவுடன் பால்நிலை சமத்துவத்தினை அடைந்து கொள்வோம் – சுபாசினி சிவதர்சன்

சுத்தமான இலங்கையின் பிரதான தூண்களான சுற்றுச்சூழல், சமூகம், நெறிமுறை என்பவற்றுடன் பால்நிலை சமத்துவத்தின் தேவையை உணர்த்துவதாக இக்கட்டுரை அமைகின்றது. என்ன வளம் இல்லை நம் தாய்த்திருநாட்டில் நம் நாடு இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடாக அமைந்திருந்தாலும் அதன் வளங்கள் அளப்பரியன. இயங்கைவளம், கலாச்சார வளம் , மனிதவளம் எனப் பல்வேறு அம்சங்களால் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது.

இயற்கை வளமாக தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன. அரியவகை மூலிகைகள், வனஉயிரினங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ஆறுகள் , குளங்கள், நீர்வீழ்ச்சிகள், என்பவற்றால் ஓர் நீர்வளம் நிறைந்த நாடு நம் தாய்த்திருநாடு. மகாவலிகங்கை போன்ற ஆறுகள் விவசாயத்திற்கும் நீர்மின்சார உற்பத்திக்கும் உதவுகின்றன. கிராஃபைட், இரத்தினக்கற்கள், தங்கம் போன்ற கனிம வளங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன.

எம்மைச் சுற்றியுள்ள கடல் பல்வகையான மீன்வகைகள், கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளது. இதனால் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியமான ஆதாரமாக விளங்குகின்றது. கலாச்சார வளமாக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் போன்ற பல்லின சமூகத்தின் கலாச்சாரங்களைக் கொண்டுள்ளதுடன் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான கலாச்சார, பாரம்பரிய கலை வடிவங்கள் உள்ளன.

புராதன நகரங்கள், கோட்டைகள் மற்றும் கோயில்கள் பல வரலாற்றுச் சின்னங்களாக நம் வளமான வரலாற்றை பறைசாற்றுகின்றன. கைவினைப் பொருட்கள், நடனம்,இசை மற்றும் நாடகம் போன்றன கலை மற்றும் கைவினை வடிவங்களில் சிறந்து விளங்குகின்றது. மனித வளமாக அதிக எண்ணிக்கையில் இளைஞர் யுவதிகளைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றனர். கல்வியறிவு விகிதத்தில் வளமான வாய்ப்புக்களை கொண்டிருக்கின்றன.இந்த வளங்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் கிடைத்த ஆதாரங்கள் அல்லவா!

இவ்வளங்களைக் கொண்டு இன்று பல்துறைகளில் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி வருகின்றார்கள். ஆடை உற்பத்தி, விவசாயம், சுற்றுளா, தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் அவர்கள் தடம் பதித்து விட்டார்கள். பல பெண்கள் தமது சொந்த தொழில்களாக சிறுவணிகங்கள,; கைவினைப் பொருட்கள் உற்பத்தி, உணவுபதப்படுத்தல் தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள். நிறுவனங்களில் உயர் நிர்வாக பதவிகளை வகித்து சிறந்த தலைமைத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு செயற்படுகின்றார்கள். வீட்டுப்பணி செவிலியர்பணி என வெளிநாடுகளில் குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு கனிசமான பங்களிப்பை வளங்கி வருகின்றார்கள். எனினும் பால்நிலை சமத்துவம் சார்ந்து அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றார்கள்.

பால்நிலை சமத்துவம் என்பது அனைத்து பாலினத்திற்கும் சமமான உரிமைகள், வாய்ப்புக்கள் மற்றும் சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற கருத்தை குறிக்கின்றது. ஒருவரின் பாலினத்தை அடிப்படையாக வைத்து எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது. இது கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை உட்பட அனைத்து துறைகளிலும் சமத்துவத்தை உள்ளடக்கியது. இது ஒரு அடிப்படை மனித உரிமை, நீடித்த நிலையான சமூகத்திற்கு அவசியமானது. சமமான உரிமைகள் , சமமான வாய்ப்புக்கள், சமூக நீதி, பொருளாதார மேம்பாடு, அரசியல் பங்கேற்பு அனைத்து பாலினத்திற்கும் கிடைக்க வேண்டும் .

சுத்தமான இலங்கை என்ற எண்ணக்கருவானது சுத்தம், அழகு, சுகாதாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்புடையதாக அமைகின்றது. தூய்மையான இலங்கையின் நிலையான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றுபடும் இத்தருணத்தில் பாலின சமத்துவம் என்பதனைக் கருத்தில் கொள்வது ஒரு சமூக கட்டாயம் மட்டுமல்ல சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகவும் ஒழுக்கநெறி மேம்பாடாகவும் அமைகின்றது. இவற்றில் பங்கேற்க பெண்களுக்கு அதிகாரமளிப்பது நிலையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்கள்

பாரம்பரிய பாலின பாத்திரங்களிலிருந்து அவர்கள் வெளிவந்து கல்வி, பொருளாதாரம், அரசியல் வாய்ப்புக்களைப் பெற்று முடிவெடுக்கும் சக்தியுடையவர்களாக அவர்களுக்கு சமவாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பொறுப்பாளர்களாக அவர்களின் திறன்களை வெளிப்படுத்த முடியும். பெண்கள் இயற்கையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். பூஞ்செடிகளை நாட்டி வீட்டை அலங்கரிக்கும் பெண்கள் பயன்தரு மரங்களை நாட்டி சுற்றுச்சூழலுக்கு பசுமையான காற்றுச் சூழலை அதிகரிக்கலாம். தமது உற்பத்திப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகளை சரியான முறையில் முகாமை செய்ய பழக வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிவதைத் தடுத்து குப்பைகளை முறையாக நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குடிக்கும் நீர் மற்றும் ஏனைய நீர்நிலைகளைப் பாதுகாக்க சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எம் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து உலகிற்கு வெளிப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பால்நிலை சமத்துவம் மேம்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னேற்றம் ஏற்படும். சுற்றுச்சூழலை பாதுகாத்து நோயற்ற சமூகமாக எம்மக்களை ஆரோக்கியமாக வாழவைக்க ஒவ்வொரு பெண்களும் சிந்திக்க வேண்டும்.

சமூக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பில் பெண்கள் – கல்வி

அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கான திறன் அபிவிருத்தி விடயங்கள் மேம்பாடடைய வேண்டும். பெண்கள் உரிய வயதில் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்த விருப்பத்துடன் முன்வர வேண்டும்.
சுகாதாரம்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல் மற்றும் மனநலத்திற்கான சேவைகள் கிடைக்க வேண்டும். இனவிருத்திச் சுகாதாரம் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட்டு வேண்டாத கர்ப்பங்களை தவிர்க்க வேண்டும். சுத்தமான பொதுக்கழிப்பிடங்கள் அணுகக்கூடியதாக அமைய வேண்டும். நோயற்ற சமூகமாக உருவாக வேண்டும். அவர்களின் உள ஆரோக்கியம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதாரம்

பெண்கள் சமமான வாய்ப்புக்களைப் பெறும்போது நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அவர்களின் அனைத்து திறமைகளும் பயன்படுத்தப்படும்போது நாடு முன்னேறும்.
வேலைவாய்ப்பு

பாலின பாகுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அவர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். கொள்கை வகுப்பிலும் முடிவெடுக்கும் நிலையிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் தங்களின் சிறுவர் உரிமைகளை அனுபவிக்கும் சூழல்கள் உருவாக வேண்டும். இன்னும் சில இடங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வது, விரும்பிய தொழிலை தொடங்குவது என்பதற்கு பல்வேறு சமூக தடைகள் உள்ளன.

சட்டம்

பால்நிலைப் பாகுபாட்டை எதிர்க்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இருக்கும் சட்டங்கள் பெண்கள் சிறுமிகளைப் பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் கிடைக்கப்பெற வேண்டும்.

நெறிமுறைப் பார்வையில் அவள்

நெறிமுறை என்பது ஒழுக்கம் குறித்த கண்ணோட்டத்தைக் குறிக்கின்றது. ஒரு நல்லொழுக்கமுள்ள நபர் சரியான செயலை முன்னெடுப்பார். சரியான செயல் என்பது அதிக எண்ணிக்கையில் மக்களுக்கு மிகவும் நன்மையை விளைவிக்கும் . ஒழுக்க நெறியின் தூண்களாக ஒன்றுபட்டிருத்தல், சுயமரியாதை, பொறுப்புக்கூறல், நம்பிக்கை, உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, சமத்துவம், இணக்கத்தன்மை, விசுவாசம் எனும் பண்புகளைக் கொண்டிருக்கும். மற்றோரை மரியாதை செய்து கழிவிரக்கத்தோடு அவர்களை நேசிப்பவர்களாக மக்கள் மாற வேண்டும். மனித நடத்தை மாற்றம் என்பது தனிநபரின் அறிவு, திறன், மனப்பாங்கு, பழக்க வழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். சாதி, மத, இன பால்நிலை பாரபட்சமின்றி அனைவரையும் நேசிக்க பழக வேண்டும். இந்த மாற்றம் ஒருவருக்கொருவர் நண்பர்களாகி குடும்பம் சமூக வலையமைப்பை ஆரோக்கியமாக கட்டியமைக்கும். இது சமூக நிறுவனங்கள் பாடசாலைகள், பணியிடங்களில் நல்ல புரிதல்களை உருவாக்கும். இதனால் வளமான சமூகங்கள், நகரங்கள், உருவாகும். இங்கு சட்டங்கள், கொள்கைகள் மக்களைப் பாதுகாக்கும். பெண்கள் தேசம் புன்னகைப்பூக்களால் நிறைந்திருக்கும். அனைத்து மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமை. பால்நிலை சமத்துவம் நிலைநாட்டப்படும் போது சமூகத்தில் நீதியும் நியாயமும் அதிகரிக்கும். வன்முறையற்ற சமூக நல்லிணக்கம் வலுப்பெறும். ஊழலற்ற சமூக நோக்கில் மக்கள் நடத்தை மாற்றங்களில் விழிப்புணர்வடைவார்கள்.

சுத்தமான இலங்கை என்பது சமூகத்தில் நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு நிலையைக் குறிக்கின்றது.

பாரதியார் கூறியது போல் ‘பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீராது” இவ்வரிகள் பெண்களின் விடுதலை நாட்டின் விடுதலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்த்துகின்றது.
‘ஆணும் பெண்ணும் சமம்’- என அன்றே பாரதி பால்நிலை சமத்துவத்தை ஆதரித்துதிருந்தார்.

‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என சாதி வேறுபாடுகளை ஒழித்து சுத்தமான சமூகத்தை உருவாக்க அன்றே குரலெழுப்பப்பட்டு விட்டது. எனவே அன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வதன் மூலம் சுத்தமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

சுபாசினி சிவதர்சன்,
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம்,
வவுனியா தெற்கு.

25 ஏக்கர் நிலம் : சர்ச்சையில் சிக்கிய முத்தையா முரளிதரன்!!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமான சிலோன் பெவரேஜஸுக்கு 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சர்ச்சையை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பஞ்சாப்பை ஒட்டிய கத்துவா மாவட்டத்தில் உள்ள பக்தாலி தொழில்துறை பூங்காவில் அலுமினியம் கேன் உற்பத்தி மற்றும் பானங்கள் நிரப்பும் பிரிவை அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரூ.1,642 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நில ஒப்பந்தம் குறித்து விளக்கம் கேட்டு சிபிஎம் எம்எல்ஏ முகமது யூசுப் தாரிகமி சட்டசபையில் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த பிரச்னை எழுந்தது.

இருப்பினும், விவசாய அமைச்சர் ஜாவீத் அகமது தார் கேள்வி எழுப்பியபோது, முரளிதரனின் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியது பற்றி தனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார்.

370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் தொழில்துறை கொள்கையின் ஒரு பகுதியாக சிலோன் பெவரேஜஸுக்கு 25 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

குறிப்பாக நிலத்திற்கு உரிமை கோருபவர்கள் மற்றும் திட்டத்திற்காக இடம் ஒதுக்குவதற்காக வெளியேற்றப்பட்டவர்கள் மத்தியில் நில ஒதுக்கீடு உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை முரளிதரனின் நிறுவனம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையை நடத்தி வரும் நிலையில் நிறுவனத்தை ஜம்மு காஷ்மீருக்கு விரிவுபடுத்த முயற்சிக்கிறது.

நிலத்திற்கான குத்தகை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது. சிலோன் பெவரேஜஸ் இலங்கையின் மிகப்பெரிய பானங்கள் பதப்படுத்தும்,

நிரப்பும் மற்றும் ஏற்றுமதி நிறுவனமாகும், இது கோகோ கோலா மற்றும் நெஸ்லே போன்ற முக்கிய சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்த நிரப்புதல் சேவைகளை வழங்குகிறது.

2021 ஏப்ரல் 1 ஆம் திகதி தொடங்கப்பட்ட ஜே&கே தொழில்துறை கொள்கை, மூலதன முதலீடுகளுக்கான மானியங்கள்,

ஆலைகள் மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கான ஜிஎஸ்டி சலுகைகள் மற்றும் செயல்பாட்டு மூலதன கடன்களுக்கான நிதி உதவி போன்ற சலுகைகளை வழங்குகிறது.

இந்த கொள்கை பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதையும் பிராந்தியத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துபாய் தலைமையிலான எமார் குழுமம் மற்றும் இந்தியாவின் கந்தாரி பெவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து யுடி நிர்வாகம் தொடக்கத்திலிருந்தே ஆர்வத்தைப் பெற்றுள்ளது, இதற்காக ரூ.1.23 லட்சத்துக்கும் அதிகமான திட்டமிடப்பட்ட முதலீடுகள் உள்ளன.

இந்த நிலையில் கத்துவா மாவட்டம் பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு அருகில் இருப்பதால், பல தொழில்துறை திட்டங்களுக்கு மையமாக மாறியுள்ளது.

யூனியன் பிரதேசம் முழுவதும் வளர்ந்து வரும் சந்திரிகா நகரங்கள் பற்றிய விவாதத்தின் போது தாரிகமி இந்த பிரச்சினையை எழுப்பியதுடன் , “இந்த நகரங்கள் என்ன? அங்கு யார் வசிக்கிறார்கள்?

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பைசா கூட வாங்காமல் நிலம் வழங்கப்பட்டுள்ளது,” என்றும் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

E-சிகரெட் பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை!!

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.  வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற நிதிக்குழுவில் தெரிய வந்துள்ளது.

இந்த விடயத்தினை கருத்திற் கொண்டு ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கினார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு பெண் பலி!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பகுதியில் தவறான பாதையில் பயணித்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் ஒரு பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:45 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையர் கைது

68 வயதான பெண், நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.  ஆபத்தான நிலையில் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சம்பத் ஜயசுந்தர என்ற இலங்கையர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!

பியகம வீதியில் பட்டிவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சக்கரம் கழன்று விழுந்ததால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

யாழ். யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!!

யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யூடியூபர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் ஒரு வீட்டிற்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் நேற்றையதினம் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமையை விற்கும் குட்டித் தீவு நாடு : யார் வேண்டுமானாலும் வாங்கலாம்!!

  

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெறும் எட்டு சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான நவ்ரூவின் குடியுரிமையை இப்போது குறைந்தபட்சம் $105,000 ( இந்திய ரூ.91.38 லட்சம்) கொடுத்து யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக் கொள்ளலாமாம்.

நவ்ரூ தீவின் கடல்மட்ட உயர்வு, புயல் அலைகள் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, காலநிலை நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு “தங்க பாஸ்போர்ட்” என்ற முயற்சியை நவ்ரூ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

உலகின் மிகவும் மோசமாக காலநிலை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றான நவ்ரு நாடு உள்ளது.

நவ்ரூ தீவில் உள்ள 12,500 பேர் கொண்ட மக்கள்தொகையில் 90 சதவீதத்தை உயர்ந்த நிலங்களுக்கு மாற்றுவதற்கும், புதிய சமூகத்தை உருவாக்குவதற்கும் தேவைப்படும் நிதிக்காக தங்கள் நாட்டின் குடியுரிமையை விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நவ்ரூ தீவின் கடற்கரையில் வசிக்கும் பலர் நிலத்தை ஏற்கனவே இழந்துவிட்டனர். சிலரது வீடுகள் பெரும் அலைகளில் முழுவதும் மூழ்கிப்போனது.

அவர்களிடம் இழக்க இப்போது ஒன்றுமே இல்லை” என நவ்ரூ பிரஜையான , ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் வணிகப் பள்ளியின் ஆராய்ச்சியாளருமான டைரோன் டீயே கூறுகிறார்.

அதேவேளை கடந்த காலங்களில் நவ்ரூ தீவின் தங்க பாஸ்போர்ட் திட்டங்களில் பெரும் ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும், காலநிலை நிதியைப் பெற போராடும் வளரும் நாடுகளுக்கு, இத்தகைய முயற்சிகள் ஒரு சாத்தியமான உயிர்நாடியை வழங்குகின்றன.

நவ்ரூ தீவின் பாஸ்போர்ட் இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது என இதன் சாதகங்களை பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் நவ்ரூ தீவின் குடியுரிமை விற்பனையானது நவ்ரூ போன்ற சிறிய நாடுகளுக்கு “மிகப்பெரிய” பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்திலிருந்து முதல் ஆண்டில் $5.6 மில்லியன் ஈட்ட முடியும் என நவ்ரூ அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மொத்த அரசாங்க வருவாயில் 19% பங்களிப்பதே இதன் இலக்காகும். கடந்த 1990 ஆண்டின் நடுப்பகுதியில், இதுபோன்று செயல்படுத்தப்பட்ட திட்டம் ஊழலால் பாதிக்கப்பட்டது.

முக்கியமாக 2003-ம் ஆண்டு மலேசியாவில் நவ்ரூ பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த காலம் போல் பிரச்சினைகள் ஏதும் நிகழாமல் தடுக்க, அரசாங்கம் கடுமையான சோதனை நடைமுறைகளை உறுதியளித்துள்ளது.

அதேசமயம் இந்த முறை திட்டத்தின் சோதனை கடுமையானதாக இருக்கும் என்றும், ரஷ்யா மற்றும் வட கொரியா உட்பட ஐக்கிய நாடுகள் சபையால் அதிக ஆபத்துக்குரியது என நியமிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நவ்ரூ குடியுரிமை பெறுவது சிரமம் என்றும் தெரிவித்துள்ளது.