வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் தனது 110ஆவது ஆண்டு நிறைவு விழாவை இன்றையதினம் (03.08.2026) பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடியது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேடமாக 110ஆவது ஆண்டுநிறைவை நினைவுகூரும் வகையில், 110பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
விருந்தினர்கள் மங்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டதுடன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
110 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் இந்நிகழ்வு, பாடசாலையின் வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
செட்டிகுளம் மகாவித்தியாலம் 1916ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 110 ஆண்டுகளாக அந்தபகுதி மக்களின் கல்வி, பண்பாடு, ஒழுக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை இப்பாடசாலை வழங்கி வருவதுடன் பல ஆளுமைகளையும் உருவாக்கியுள்ளது.
குறித்த நிகழ்வில்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அழைப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று.
எனினும், பல ஊட்டச்சத்துக்கள் உள்ள இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. சில குறிப்பிட்ட உடல நல பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்க்க வேண்டும்.
குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் : கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது,
வயிறு உப்பசம் ஏற்படும். பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடல் அதனை கிரகிக்க முடியாத காரணத்தால்,
வயிறு உப்பிசம் அதிகரிக்கும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்குகிறது,
ஆனால் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
உடலில் வீக்கம் உள்ளவர்கள் : கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
மேலும், உடலில் வைட்டமின் சி அதிகமாக உறிஞ்சப்படுவது கடினம். எனவே, கொய்யாவை அதிக அளவில் சாப்பிடுவது உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யா சாப்பிட்ட உடனே தூங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் வீக்கம் அதிகரிக்கும்.
சளி இருமல் உள்ளவர்கள் : சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும்.
குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகள் : கொய்யா ஒரு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பழமாகும், இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கொய்யாவில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது.
100 கிராம் கொய்யா பழத்தில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், கொய்யாவை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (01.08.2026) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர்.
அவ்வாறு மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை அவர் தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது, வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
குறித்த கார் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் , ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின்படி, “பாபு” என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
வாத்துவவைச் சேர்ந்த அப்பெண், கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 62 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும் இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 30,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேல் மாகாணமே டெங்குவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (45,675) இங்குதான் பதிவாகியுள்ளன. இதில் கம்பஹா (18,321) மற்றும் கொழும்பு (17,101) மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. தென் மாகாணத்தில் 12,969 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 7,567 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய இணைப்பு : அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மழை தொடர்வதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றுப்பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, களனி ஆற்றில் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு : தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு : கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அரிதாக பார்க்கப்படுவது உண்டு. ஆனால், இரட்டை இரட்டையர்களை மணந்து, அதனை இரட்டையர்கள் நடத்தி வைத்த அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கேரளாவின் சங்கனாச்சேரி வெட்டுபரம்பிலை சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் – ஜோமோல் தம்பதியினரின் இரட்டை மகன்கள் அகில் மற்றும் நிகில். பத்தனம்திட்டா மாவட்டம் குளத்தூர் கும்புலுவேலியைச் சேர்ந்த டோமிச்சன், மேரிக்குட்டி தம்பதியரின் இரட்டை மகள்கள் மகி, மரியா.
கடந்த வியாழக்கிழமை, சங்கனாசேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் அகில் மேகியை திருமணம் செய்துள்ளார். அகிலின் இரட்டை சகோதரரான நிகில், மேகியின் இரட்டை சகோதரியான மரியாவை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்தை காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் இரட்டைப் பாதிரியார்களான அருட்தந்தை ஆன்டோ பேழும்கட்டில் மற்றும் அருட்தந்தை அஜோ பேழும்கட்டில் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு, பாலாவைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோஹன் ஜேம்ஸ் பலிபீடத்தில் உதவியுள்ளனர். இரு சகோதரர்களும் வணிகக் கப்பலிலும், சகோதரிகள் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பணிபுரிகின்றனர்.
“இரட்டைக் குழந்தைகள் சூழ திருமணம் செய்துகொள்வது சிறுவயதிலிருந்தே எங்கள் கனவாக இருந்தது. எங்கள் பெற்றோரும் குடும்பத்தினரும் கூட அதை விரும்பினார்கள்” என அந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
“இரட்டைக் குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது மிகவும் சிறப்பானது. இது வாழ்நாள் முழுவதும் நினைவுகளைத் தரும் ஓர் அனுபவம். அவர்கள் ஒன்றாகப் பிறந்தார்கள், ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நாங்களும் ஒன்றாகவே பாதிரியார் ஆனோம். இவை அழகான நினைவுகள்” என்று பாதிரியார்கள் கூறினார்கள்.
மைசூரில் சிப்ஸ் பாக்கெட்டில் இலவசமாக வழங்கப்பட்ட சிறிய பொம்மை தொண்டையில் சிக்கி, மூச்சுத் திணறலால் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
மைசூரைச் சேர்ந்த தம்பதியின் ஒரே மகனான முகுந்த் மயூர் (5) என்ற சிறுவன் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். அந்தச் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் இருந்த சிறிய கிஃப்ட் பொம்மையைச் சிறுவன் தெரியாமல் வாயில் போட்டபோது,
அது அவனது தொண்டையில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டது. உடனடியாக తీవ్ర மூச்சுத் திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற தொடர் விபத்துகளைத் தவிர்க்க மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
சிறிய பொம்மைகள் (Toys) மற்றும் இலவசப் பரிசுகளுடன் வரும் சிற்றுண்டிப் பாக்கெட்டுகளைச் சிறிய குழந்தைகளிடம் கொடுக்கும்போது பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பொம்மைகளை வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், உணவுப் பொருட்களுடன் வரும் சிறிய பிளாஸ்டிக் பாகங்களை உடனடியாக அகற்றுவது அவசியம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இளம் காதல் ஜோடி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும், அருகில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் கூறிச் சம்மதம் வாங்கி, விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர். ஆனால், இருவீட்டுப் பெற்றோரும் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் சம்மதிக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இருவரும், தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். “சேர்ந்து வாழ முடியாத சூழலில், ஒன்றாகவே உயிரை விட்டுவிடலாம்” என முடிவெடுத்து இருவரும் விஷம் அருந்தியுள்ளனர்.
இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) 3 மணியளவில் வெளியாகியுள்ளது. இதற்கமைய, மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு இன்று மாலை, இரவு என மழை தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்துடன், நாட்டில் உள்ள பல ஆறுகள் வெள்ள மட்டத்தை அடைந்துள்ள நிலையில், மகாவலி, களுகங்கை, களனி கங்கை போன்றன பல இடங்களில் பெருக்கெடுத்துள்ளன.
இதனால் ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள், மற்றும் தாழ்நிலப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (3) காலை 6:15 மணியளவில் கேகாலை – கரடுபன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர், 59ஆம் கட்டை பகுதியில் நேற்று (02.08.2026) மாலை ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞரும் என தெரிவிக்கப்படுகிறது. விபத்தையடுத்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாவலப்பிட்டிய – சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
இதன்படி, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 65 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலையகத்தில் வாழும் மக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பிரதேசத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திரு.பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா A9 பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில், பூநாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகப் பயணித்த கார் வவுனியா நகரின் எல்லையில் அமைந்துள்ள “வவுனியா உங்களை வரவேற்கிறது” வரவேற்புப் பலகைக்கு அருகிலுள்ள மதகில் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இந்த மோதலின் வேகம் காரணமாக கார் மிக மோசமாக விபத்துக்குள்ளானது. விபத்தின் கோரத் தாண்டவத்தை பறைசாற்றும் வகையில், காரின் பின்பகுதி முற்றாக உருக்குலைந்துள்ளது.
புகைப்படங்களில் காணப்படுவது போல், காரின் பின்பக்க கதவு, விளக்குகள் மற்றும் அடிப்பகுதி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
விபத்தின்போது காரை ஓட்டிச் சென்ற சாரதி இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயங்களுக்குள்ளானார்.
அருகில் இருந்தவர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் மற்றும் வாகனத்தின் அதிவேகமுமே இந்த கோர விபத்துக்குக் காரணம் என சம்பவ இடத்தில் முதற்கட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார் மதகில் மோதி, பின்னர் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ஏ9 வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.