யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ வைத்து உயிரைமாய்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று (02.07.2026) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.
“வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால்..” இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நகரை உற்சாகத்தில் ஆழ்த்திய மகாவித்தியன்ஸ் பழைய மாணவர்களின் பிரம்மாண்ட நடைபவனி நேற்று (01.08.2026)கோலாகலமாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக முன்னேறியது.
பாடசாலையின் பெருமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில், மகாவித்தியன்ஸ் மாணவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இசைக்குழுக்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இந்த நடைபவனி காரணமாக வவுனியா நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டதுடன், பொதுமக்களும் வீதியோரங்களில் திரண்டு நின்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் இன்று (01.08.2026) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே, கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
“இன்னும் எத்தனை உயிர்களை வீதி விபத்துக்களுக்கு பலி கொடுக்கப் போகிறோமோ?” என அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இன்று (31.07.206) இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக, பொலிஸார் அவரைக் கைவிலங்கிட்டு விபத்து நடந்த இடத்திலேயே கைது செய்தனர்.
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா மண்ணில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக ஒரு பாடசாலை வளாகத்தில் மிக பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள “சேமமடு முத்தமிழ் விளையாட்டு விழா 2026” எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
வவுனியா, ஓமந்தை சேமமடு முத்தமிழ் விளையாட்டுக்கழகத்தின் பிரத்யேக ஏற்பாட்டில், சேமமடு பழையமாணவர்கள் சங்கம் மற்றும் ஓமந்தை பழைய மாணவர்கள் சங்கம் (UK) ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன் இவ்விளையாட்டுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி அன்று காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை நாள் முழுதும் திருவிழாப்போல விழாக்கோலம் பூணவுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிப்பதுடன், நமது பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல சுவாரசியமான போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
துடுப்பாட்டம் (Cricket), கரப்பந்தாட்டம் (Volleyball), தடையோட்டம், சாக்கோட்டம், குண்டெறிதல், அஞ்சல் ஓட்டம் மற்றும் மரதன் ஓட்டம் , கிளித்தட்டு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல்,
வினோத உடைப் போட்டி மற்றும் மெதுவாக சைக்கிள் ஓடுதல், பாடசாலை மதில் சுவரில் வண்ணமிகு ஓவியம் வரைதல், மேடை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு விளையாட்டுகள் என பல வகையான விளையாட்டு நிகழ்வுகளுடன்,
மேலும், விழாவின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் (Raffle Draw) வெற்றிபெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக ரூ. 200,000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 100,000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 50,000 ரூபாவும் 10பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்கள், பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் அனுமதி முற்றிலும் இலவசமாகும்.
அத்துடன், விழாவிற்கு வருகை தரும் 1500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மிகச் சுவையான பிரியாணி விருந்து, காலை உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கி உபசரிக்கப்படவுள்ளமை இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக பாடசாலை ஒன்றில் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் இந்த முத்தமிழ் விளையாட்டுத் திருவிழாவில் பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் அனைவரும் குடும்ப சமேதராக திரளாகப் பங்கேற்று விழாவை வெற்றிபெறச் செய்யுமாறு வவுனியா ஓமந்தை சேமமடு முத்தமிழ் விளையாட்டுக்கழகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலப்புளியங்குளம் பகுதியில் சுமார் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் இன்று (31.07.2026) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா – ஏ9 வீதியில் வீதி விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (31.07.2026) இடம்பெற்ற மற்றொரு சோகச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழத்துள்ளார். இன்று (31.07.2026) மதியம் ஏ9 வீதியின் புளியங்குளம் பகுதியில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதிக்கொண்டதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில்,மோட்டார் சைக்கிலின் சாரதியான மதவுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவராவார்.
ஏ9 வீதியின் வவுனியா முதல் கனகராயன்குளம் வரையிலான வீதிப் பகுதி அண்மைக்காலமாக கடும் அபாயகரமான மண்டலமாக மாறிவருகிறது.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இவ்வீதிப் பகுதியில் இடம்பெற்ற தொடர் விபத்துகளில் 5 பேர் வரை தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிவேகப் பயணம் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்றாமையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றது எனச் சுட்டிக்காட்டும் சுற்றாடல்வாசிகளும் சமூக ஆர்வலர்களும், இவ்வீதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில்,
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை செய்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாவை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் தண்டப்பணமாக விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அநுராதபுரம் மாவட்டப் புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 06 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனையின் போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகபட்ச சில்லறை விலையாக ரூ. 120 எனக் குறிப்பிடப்பட்ட 1,000 மில்லி (1 லீட்டர்) குடிநீர் போத்தல் ஒன்று, புகையிரத்தில் ரூ. 150-க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 96 ஆம் இலக்க உத்தரவை மீறியதற்காகக் குறித்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 500,000 அபராதம் விதித்தது.
புகையிரதங்களின் நடமாடும் சிற்றுண்டிச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகையிரத திணைக்களத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முறைப்படியாக அறிவித்துள்ளது.
நுகர்வோர் சட்டங்களை மீறியதற்காக இந்த நிறுவனத்திற்கு எதிராக முன்னரும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் குறித்த நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், மீண்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்து்ளளது.
சென்னையில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல், அவர் இறந்த மூன்றாவது நாளிலேயே பெயிண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி அரிகிருஷ்ணாபுரம் அம்மன் நகர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (43). கட்டிடப் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுந்தரி (37).
இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி சுந்தரி திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மனைவி மறைந்த சோகத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர், வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மணலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த 3-வது நாளிலேயே கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால், உதவிக்கு உடனடியாக மாநில உதவி எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் (044-24640050) ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.
பீகார் மாநிலத்தில் சமையல் செய்யத் தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மனைவியைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த நபரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் ஜெஹானாபாத் பகுதியைச் சேர்ந்தவர் குணால் குமார். வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தனது மனைவி அன்ஷு தேவியுடன் (25) அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குடும்பத்தினர் விவசாய நிலத்திற்குச் சென்றிருந்த நேரத்தில், குணால் குமார் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த மனைவியிடம் உடனடியாக உணவு வழங்குமாறு கேட்டுள்ளார்.
உணவு தயாராகச் சிறிது நேரமாகும் என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த குணால் குமார், வீட்டில் இருந்த கோடாரியால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அன்ஷு தேவியின் தலை துண்டிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். கொலையைச் செய்த பிறகு, துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையைக் கயிற்றில் கட்டி வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்டு, தப்பிச் செல்லாமல் மரத்தின் அடியிலேயே அமர்ந்திருந்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அன்ஷு தேவியின் உடலையும் தலையையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடூரக் கொலையில் ஈடுபட்ட குணால் குமாரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இளம் ஆசிரியை ஸ்ருஷ்டி கந்தாரி என்பவர் வசித்து வந்தார். இவருக்குத் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில்,இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து மாண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகத் தனது கணவர் குடும்பத்தினர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பதிவு செய்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காணொளியில் கண்ணீர் மல்கப் பேசியுள்ள ஸ்ருஷ்டி கந்தாரி, திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் தந்தைக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு ஜோதிடர் ஒருவரை அணுகி ஆலோசித்த போது, மருமகள் வீட்டிற்குள் வந்த நேரமே உங்களுக்கான கஷ்டகாலம் தொடங்கியது எனக் கூறியுள்ளார்.
ஜோதிடரின் இந்தக் கூற்றை முழுமையாக நம்பிய கணவர் வீட்டினர், தன்னைத் தொடர்ச்சியாக மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தி வந்ததாக அவர் அந்தப் பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஜோதிட நம்பிக்கையின் பெயரால் தனக்கு நேர்ந்த இந்தத் தொடர் கொடுமைகளைத் தாங்க முடியாமலே இந்த முடிவை எடுப்பதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துக் தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தற்கொலைக்குக் காரணமான கணவர் குடும்பத்தினர் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான சொரூபம், பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டது. 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின், வெண் இரும்பினால் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கத்தோலிக்கக் குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஏராளமான கத்தோலிக்க பக்தர்கள் மட்டுமன்றி, பௌத்த மதகுருமார்களும் கலந்துகொண்டு மத நல்லிணக்கத்தைச் சிறப்பித்தனர்.
இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஹரியானாவில் வசித்து வந்தவர் குட்டி தேவி(42). இவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
எனவே பானிபட்டியில் உள்ள பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவர்கள் குட்டி தேவியின் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததில் குட்டி தேவி மரணமடைந்தார்.
இதைய்டுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென குட்டிதேவியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலிகளும் எலி ஒன்று கொள்ளையிட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நகையகத்தின் பூட்டுகள் உடைக்கப்படாததுடன்,
நகையகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஆரம்பத்தில் அதன் உரிமையாளர் ஊழியர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.
இதையடுத்து, நகையகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, இரவு நேரத்தில் அங்கு சுற்றித்திரிந்த எலி ஒன்று,
வைர மோதிரங்களையும் தங்கச் சங்கிலிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தமை தெரியவந்தது. இதையடுத்து, மர அலுமாரிகளும் அவற்றின் பின்புறப் பகுதிகளும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன.
சுமார் 13 மணி நேர தேடுதலின் பின்னர், மரப் பலகையின் பின்புறத்தில் இருந்த துளையொன்றிலிருந்து காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நகைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த விலைப் பட்டியல்கள் மட்டுமே சேதமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக மீளக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகையக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் , இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடிமையாக அடைக்கப்பட்டிருந்த ஒருவர், இறுதியாகத் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் பூமலைப்பட்டி அணைக்களம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி – சுந்தரி தம்பதியருக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரகாஷ், கடந்த 2003-ஆம் ஆண்டு பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி, பத்திரிகையாளர் ஒருவர் சுந்தரியைக் கண்டறிந்து, அவரது மகன் பிரகாஷ் பஞ்சாபில் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
இறந்துவிட்டதாகக் கருதிய மகன் உயிருடன் இருப்பதை அறிந்து நெகிழ்ந்த சுந்தரி, பிரகாஷைக் கோயம்புத்தூருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து, பிரகாஷின் சகோதரர் பிரபுவும் உறவினர்களும் உடனடியாக பஞ்சாப் சென்று பிரகாஷை மீட்டு அழைத்து வந்தனர்.
இந் நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனைப் பார்த்த தாய் சுந்தரி, கண்ணீ ர்விட்டு அழுத காணொளி சமூகவலைத்தளங்க்களில் வரலாகி வருகின்றது.
பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.
நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், “யாரடி நீ மோகினி”, “குங்குமப் பூவே” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பல தலைமுறை ரசிகர்களை தனது இனிமையான குரலால் கவர்ந்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.