பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14.01.2026) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரிக்கை மேலும் கூறுகின்றது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பயணியிடமிருந்து 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேலில் குழந்தை சுகாதார ஆலோசகராக பணி புரியும் போரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயது இலங்கைப் பெண்ணின் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை சீன நாட்டவர் திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் நேற்று காலை 08.15 மணிக்கு ப்ளைடுபாய் FZ விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணின் வேண்டுகோளின் பேரில் அந்தப் பெண் கொண்டு வந்த கைப்பை விமானத்தில் அவரது இருக்கைக்கு மேலே உள்ள பொதி வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் அவர் விமானத்திலிருந்து வெளியே வந்து விமான நிலைய வாடகை வாகனத்திற்கு பணம் செலுத்தவிருந்தபோது, 3,660 அமெரிக்க டொலர்கள், 500 யூரோக்கள் மற்றும் அவரது கைப்பையில் இருந்த இலங்கை பணம் காணாமல் போனமை தெரிய வந்துள்ளது.
அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அந்த பெண்ணுடன் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்தனர்.
அந்த கண்காணிப்புகளின் போது, அந்தப் பெண்ணின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு சீன நாட்டவரை பொலிஸார் அடையாளம் காண முடிந்தது. பின்னர், அவரைப் பற்றிய விபரங்களைக் கண்டறிந்த பொலிஸார்.
அந்த நேரத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதனை அவதானித்துள்ளனர். சந்தேக நபர் கிம்புலப்பிட்டி பகுதியில் ஒரு சீனப் பெண் நடத்தும் விடுதியில் மறைந்திருந்தபோது, அவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
25 வயதான சீன நாட்டவர் இந்த வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை அவர் தூங்கிக் கொண்டிருந்த தலையணை உறையில் மறைத்து வைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
தனது 6 வயதிலேயே பாம்பு விஷம் நீக்கும் பாரம்பரிய மருத்துவ முறையைத் தொடங்கி, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தனது தாத்தாவிடம் இருந்து இக்கலையைக் கற்றுக்கொண்ட சந்துனி, தந்தையை விடவும் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.
புகையை சுவாசிக்கச் செய்தல், மந்திரங்கள் மற்றும் விரல் நுனியால் தரையைத் தட்டி விஷத்தை வெளியேற்றும் அபூர்வ முறைகளைக் கையாண்டு இவர் சிகிச்சை அளித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நள்ளிரவில் வரும் நோயாளிகளுக்குக் கூட, விடியற்காலை வரை விழித்திருந்து எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகவே மருத்துவம் செய்து வந்தார்.
கல்வித் துறையிலும் சிறந்து விளங்கிய அவர், கெவிட்டியகல மகா வித்தியாலயம் மற்றும் மத்துகம புனித மேரி கல்லூரியில் பயின்று, கலைப் பிரிவில் உயர்தரக் கல்வியை முடித்திருந்தார்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்துனி, உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, தான் மறைந்தாலும் தம்பி தாயை கவனித்துக் கொள்வார் என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
கண்பார்வை பாதிப்பில் தொடங்கிய இவரது நோய், பின்னர் இதயம் 20 சதவீதம் மட்டுமே வேலை செய்யும் நிலைக்குச் சென்றது. இதன் போதும், அவர் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதியாக எதிர்கொண்டார்.
ஒரு மாத காலமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய சந்துனி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (13.01.2026) காலை இடம்பெற்றுள்ளது. வெதுப்பக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியின் முன்சக்கரம் உடைந்து தடம் புரண்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானியல் தரவுகளின்படி, மார்ச் நிகழ்வில் இந்த முழுமை நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கிழக்காசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காண முடியும் என்றும்,
ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள், அந்தந்த ஊர் உள்ளூர் நேரத்தைப் பொறுத்தும், வானில் நிலவு இருக்கும் நிலையைப் பொறுத்தும் இந்த கிரகணத்தை ஓரளவிற்குத் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு கிரகணம் கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் மார்ச் 3 அன்று இரவு நேரத்தில் இந்த கிரகணம் தெரியும். வட அமெரிக்காவில் மார்ச் 3 அன்று அதிகாலையில் இது நிகழும்.
இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மார்ச் 3 அன்று மாலை சுமார் 02:14 மணிக்கு தொடங்கி இரவு 07:53 மணி வரை நீடிக்கும்.
மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் வலை பயிற்சிகளுக்கான பந்துவீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அபிஷேக் தற்பொழுது இலங்கை மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அணியின் வீரர்களுக்கு பந்து வீசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழகத்தின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் மாணவர் என்பதுடன் குறித்த மாணவர் வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்துவீச்சாளராகவும் சகல துறை வீரராகவும் திகழ்ந்து வருகின்றார்.
அண்மை காலமாக நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் போட்டி தொடர்களில் அபிஷேக் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அணிகள் அல்லது முனன்ணி கழகங்களின் துடுப்பாட்ட வீரர்களின் வலைப் பயிற்சியின் போது திறமையான பந்து வீச்சாளர்களை கொண்டு பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறு பந்து வீசக் கூடிய வீரர்களே வலைப்பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக பயணித்த வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அண்மித்த சந்தி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிலைய கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவத்திடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் , விபத்துக்கு உள்ளான வாகனத்தினையும் மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர். வாகனம் தொடர்பிலும் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருமண விழாவிற்குப் பின் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்ததில் புது மணமக்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் என மேலும் அறுவர் அந்த வெடிப்பில் உயிரிழந்ததுடன் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் துயரம் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (11.01.2026) இடம்பெற்றது. வெடிப்பு காரணமாக வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர்.
மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்டு தூக்குப் படுக்கைகளில் கொண்டுசென்றனர். எரிவாயுக்கசிவு காரணமாக வெடிப்பு நேர்ந்ததாக அவசரகால உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த வெடிப்பில் அருகிலிருந்த மூன்று வீடுகளும் சேதமடைந்தன.
முதல்நாளான சனிக்கிழமைதான் தம் மகனின் திருமணம் நடந்ததாக ஹனிஃப் மசிஹ் கூறினார். வெடிப்பு நேர்ந்தபோது புது மணமக்கள், குடும்பத்தினர், விருந்தினர்கள் ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
இந்நிலையில் திருமண “கொண்டாட்ட நிகழ்வு துயரத்தில் முடிந்தது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது,” என்று பாகிஸ்தான் மேலவைத் தலைவர் யூசுஃப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாய், மகன் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதிவேகமாக வந்த உந்துருளியும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் உயிரிழந்திருந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வீட்டுப்பணிப்பெண்ணும் அடங்குவதாகவும், அவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 61 வயதான ஹேமா பரணகம, அவரது மகன் லஹிரு ஷெஹான் டி கோஸ்டா, 26, மற்றும் அவர்களது உறவினர் மேரி தெரசா கோஸ்டா 84 உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞர் பிரபல ஹோட்டலில் சமையல்காரர் எனவும், அதே நேரத்தில் உயிரிழந்தவரின் அத்தை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற தலைமை செவிலியர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நடந்த நேரத்தில் தாய், மகன்,அத்தை மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோர் அனுராதபுரத்திற்கு யாத்திரைக்காக காரில் பயணம் சென்றதாக கூறப்படுகிறது.
இதன்போது வானில் பயணித்த 6 வயது சிறுவன், நான்கு பெண்கள் மற்றும் சாரதி உட்பட ஏழு பேர் புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த மூவரின் பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டுக்குள் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் புகையால் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பார் என கருதப்பட்ட நிலையில், பின்னர் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 3ஆம் திகதி, பெங்களூருவிலுள்ள ராமமூர்த்தி நகர் என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தீயணைப்புத்துறையினருடன் அங்கு விரைந்த பொலிசார், அந்த வீட்டுக்குள் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிப்பதைக் கண்டுள்ளார்கள். விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷர்மிளா (32) என தெரியவந்தது.
அவர் புகையில் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், தடயவியல் நிபுணர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையில், ஷர்மிளாவும் அவரது வீட்டுக்கு எதிரே குடியிருக்கும் கிருஷ்ணய்யா (18) என்னும் இளைஞரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து கிருஷ்ணய்யாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள, அதிரவைக்கும் உண்மை ஒன்று வெளியானது.
ஆம், கிருஷ்ணய்யா ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பால்கனியிலுள்ள ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணய்யா, ஷர்மிளாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.
ஷர்மிளா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கிருஷ்ணய்யா ஷர்மிளாவின் கழுத்தில் தாக்கியதுடன், அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
அது கொலை என தெரியவராமல் இருப்பதற்காக, கட்டிலின்மேல் துணிகளைப் போட்டு கிருஷ்ணய்யா தீவைத்துவிட்டு வெளியேற, தீ வீடு முழுவதும் பரவியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணய்யாவிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் மாயமான வழக்கில் அவரது புடவை அவரது உடலை அடையாளம் காண உதவியுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்பட்ட அந்த எலும்புக்கூடு யாருக்கு சொந்தமானது என அடையாளம் காணுவது அதிகாரிகளுக்கு கடினமான விடயமாக இருந்துள்ளது.
இந்நிலையில், அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புடவையால், அந்த உடல் அந்தப் பகுதியில் வாழும் பீதாம்பர் என்னும் நபரின் மனைவியான பூனம் (30) என்னும் பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.
என்றாலும், அடையாளம் காண்பதில் எந்த தவறும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த உடல் பாகங்கள் DNA பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பூனமுக்கும் அவரது கணவரான பீதாம்பருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,
தன் மனைவி காணாமல் போனதாக அவர் பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
கடுவலை – கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த சம்பவம் நேற்று (12.01.2026) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் இன்று செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை கால முற்பணங்களை செலுத்துவது தொடர்பான விதிகளின்படி, தைப்பொங்கல், ரமலான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) அரச அதிகாரி ரூ.10,000/- முற்பணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றினை வட்டி இல்லாமல் 08 மாதாந்திர தவணைகளில் அல்லது தேவைப்பட்டால் முன்னதாகவே மேற்படி முற்பணத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.
நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
52 வயது மதிக்கத்தக்க தோதல்ல தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் நாளாந்த வேலை அடிப்படையில் பணிபுரிந்து வந்த பெண் இவ்வாறு தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகின்றது.
கிடைக்கபெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று(12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.