முச்சக்கர வண்டியில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன்!!

மொனராகல, தனமல்வில – வெல்லவாய வீதியில் நிறுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன், மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தனமல்வில-வெல்லவாய வீதியில் தேநீர் அருந்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது, ​​அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த எதிலிவெவ வெஹெரய பகுதியைச் சேர்ந்த 23 வயதான நதுன் தீக்ஷன ஹேரத் என்ற இளைஞன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்று!!

நாட்டில் வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் கே.வி.சி. ஜனக தெரிவித்துள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பரவல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் சிக்குன்குனியா வழக்குகளின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ஒன்பது நாட்களில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2,170 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு விருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி : கருப்பையை பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சி!!

புத்தளத்தில் வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்து 2 கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும். கடந்த 9 ஆம் திகதி 1990 அம்பியுலன்ஸ் சேவையால் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்ய வைத்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் அவரை ஸ்கேன் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நோயாளியை விசாரித்த போது, ​​அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி முதலாம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார்.

விருந்தின் போது, ​​நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்தபோது, ​​அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட நோய்க்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் – வேன் மோதி விபத்து : மூவர் பலி : பலர் காயம்!!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஊடான யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

குருநாகல் – மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடக்கு தொடருந்து மார்க்கத்தில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மஹோ சந்தி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிகள் மூலம், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த தொடருந்து மார்க்கங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் இன்று (11) காலை மோட்டார்சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரொருவர் குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறி மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மன்னாரில் இளம் குடும்பபெண் மாயம் : துயரில் உறவுகள்!!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய கீர்த்தனா என்ற 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான இந்தப் பெண்ணை, அவரது கணவர் நேற்று(10) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பற்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

சிகிச்சைக்காக அவரை வைத்தியசாலையில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த கணவன் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது அவருடைய மனைவியை காணவில்லை.

அங்கிருந்தவர்களிடம் விசாரித்த பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து கணவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனதாக கூறப்படும் அப்பெண், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஊடாக மன்னார் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வவனியா பேருந்தில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை இரவுவரை கடும் மின்னல் தாக்க ‘அம்பர்’ எச்சரிக்கை!!

பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான ‘அம்பர்’ எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, இன்று (12) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

எனவே , மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2026 இல் இது நடந்தே தீரும் : அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் கணிப்பு!!

​​’பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ எனகுறிப்பிடப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா , 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற முக்கிய உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்ததாக நம்பப்படுகிறது.

பாபா வங்கா 1996-ஆம் ஆண்டு 85 வயதில் இறந்தபோதிலும், அவரது தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து ஒரு மர்மத்தின் ஆதாரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது, ​​நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி , பாபா வங்கா 2026-ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்றும், மனிதகுலம் வேற்று கிரகவாசிகளை முதன்முதலில் சந்திக்கும் என்றும் கணித்ததாகக் கூறப்படுகிறது.

“மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளும், இது ஒருவேளை உலகளாவிய நெருக்கடி அல்லது பேரழிவுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் எச்சரித்திருந்தார்.

சிலர் இதை, கடந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வந்த 3I/ATLAS என்ற மர்மமான பொருளின் கண்டுபிடிப்புடன் தொடர்புபடுத்துகின்றனர்.

சீனா தைவான் மீது தொடர்ந்து இராணுவ அழுத்தத்தைக் கொடுப்பது மற்றும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், மூன்றாம் உலகப் போர் குறித்த பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டு தொடங்கும் என்று பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் கூறினாலும், அது மனிதகுலத்தை அழித்துவிடும் என்பது சாத்தியமில்லை.

அவரது முந்தைய கணிப்புகள், மனிதகுலத்தின் வீழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கியது என்றும், உலகம் அதிகாரப்பூர்வமாக 5079-ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் கூறின.

2025-ஆம் ஆண்டில், பாபா வங்காவின் கணிப்புகளில், மனிதகுலத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்துடன், பேரழிவு தரும் நிலநடுக்கங்கள், ஐரோப்பாவில் ஒரு போர் மற்றும் ஒரு உலகளாவிய பொருளாதாரப் பேரழிவு ஆகியவை அடங்கும்.

பாபா வங்காவின் கணிப்புகளைத் தவிர, 1500-களில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸின் (Michel de Nostredame) தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

இவர் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சிக்கு வருதல், செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற நவீன காலத்தின் சில முக்கிய தருணங்களைக் கணித்தவர்.

நாஸ்ட்ராடாமஸின் தெளிவற்ற எழுத்துக்களின்படி, இந்த ஆண்டு ஒரு முக்கிய ஆளுமை படுகொலை செய்யப்படுவதையோ அல்லது ஒரு அரசியல் ஆட்சியை உலுக்கக்கூடிய அரசியல் சதியையோ காணக்கூடும்.

அதோடு அவரது எழுத்துக்களில் உள்ள மற்றொரு செய்யுள், இந்த ஆண்டு ஏழு மாத கால பெரும் போர் ஒன்று வரவிருப்பதாக எச்சரித்த்துள்ளது.

சிறுமிக்கு காதலனால் நேர்ந்த கதி : இளைஞன் மற்றும் தம்பதி கைது!!

மொனராகல, வெல்லவாய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞனும், அவருக்கு ஆதரவளித்த தம்பதியும் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், கடந்த வருடம் 7ஆம் மாதம் சிறுமியை அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று விடுதியொன்றில் தங்க வைத்துள்ளார்.

இதன்போது கணவன்-மனைவி போல நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் இருந்து சிறுமியை தனது பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளார்.

அவர்கள் வீட்டிலும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டனர். இதற்கு அந்தப் பகுதியிலுள்ள தம்பதியின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 7ஆம் திகதியன்று இரவு சிறுமி தனது வீட்டிற்குத் திரும்பினார். அங்கு சிறுமியின் தாய் சிறுமியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, சந்தேக நபரையும் முறையற்ற உறவுக்கு ஆதரவளித்து தங்கவைத்த தம்பதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பூந்தோட்டம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று (10.01.2026) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயமடைந்தனர்.

பூந்தோட்டம் பகுதியில் இருந்து நகர் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற காருடன் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவர் சிறுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.

 

வவுனியா – பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 3 வான்கதவுகளில் ஒரு வான் கதவு ஒரு அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் விபத்துக்குள்ளான சோளம் ஏற்றிச் சென்ற லொறி!!

மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவெல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று சனிக்கிழமை (10.01.2026) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா – பட்டிபொல பிரதான வீதியில் ரூவான் எலிய பகுதியில் குறித்த லொறி எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பிரதான வீதியில் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லொறி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த பகுதிக்கான போக்குவரத்து தற்போது ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர.

லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் இருந்த சோள செடிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு பாரவூர்திக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் விபத்து : அறுவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.

கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.

ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

புதுக்குடியிருப்பில் நோயாளர் காவு வண்டி விபத்து : இருவர் காயம்!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளனதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் விபத்து இடம்பெற்ற பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

உயிரைத் தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம் : ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!!

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், அந்த மக்களை 2048 ஆம் ஆண்டு வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை இழந்த குருநாகல் மாவட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பேரழிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தாலும், தற்போது கணிசமான அளவுக்கு நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் மீட்டெடுக்க அரசுக்கு முடிந்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அனர்த்தத்தையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்த நாட்டுப் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.