இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வாய்ப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (15.11.2025) தங்கத்தின் விலை ரூ.10,000 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (15) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச் சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.305,200 ஆக குறைந்துள்ளது. நேற்று, ரூ.315,500 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று (14.11.2025) ரூ.340,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.330,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா கல்வியற் கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் : சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர விசாரணை!!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு பகுதி ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றயதினம் காலை முதல் மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து 7 மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்த சில மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்ப்பட்ட நிலையில் தனியார் மருத்துவ நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். கல்லூரிநிர்வாகம் கூறியே தனியார் மருந்தகங்களுக்கு சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுகவீனம் தொடர்பாக மாணவர்களால் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை அழைத்துச்செல்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு,திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் சிலர் வருகைதந்திருந்தனர்.

இருப்பினும் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை மூன்று மணி நேரமாக அவர்கள் பிரதான வாயிலில் காக்க வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் அவர்களாக உள்ளே சென்று உப பீடாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தனர்.
பிள்ளைகளை தங்களுடன் அனுப்புமாறு கோரியிருந்தனர்.

காய்ச்சல் ஏற்ப்பட்டதாக கூறும் மாணவர்கள் தமது சொந்த விடுமுறையில் வீடு செல்ல முடியும்என நிர்வாகத்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களிடம் கடிதம் பெறப்பட்ட பின்னர் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவ் விடயம் தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் கேட்டபோது சுகவீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்கள் பரிந்துரைத்தால் மாத்திரமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியும் என தெரிவித்திருந்ததுடன்,

பெற்றோர்களின் கோரிக்கையின் பிரகாரம் அனுப்ப முடியாது என தெரிவித்தார். அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கினால் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்றையதினம் கல்வியற்கல்லூரிக்கு வருகைதந்த வவுனியா சுகாதார பரிசோதகர்கள் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்ப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல சைவ உணவகங்களுக்கு பூட்டு!!

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு பிரபல சைவ உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது.

குறித்த இரு உணவங்களும் சுகாதார பரிசோதகர்களால், நேற்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இரு உணவகங்களையும் எதிர்வரும் 14நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே கண்டனகம் பகுதியில் நடந்த தாய்–மகள் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு வசித்து வந்த அனிதா குமாரி (57), கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரை உடல்நலக்குறைவால் இழந்திருந்தார்.

கணவர் இறந்ததையடுத்து மகள் அஞ்சனா (27) உடல்நிலை மோசமடைந்து படுக்கையிலேயே இருந்தார். முதுகுத் தண்டுவட நோயால் அஞ்சனா நடமாட முடியாத நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளும் திடீரென அனிதா குமாரியிடம் திரண்டிருந்த நிலையில், நாள் முழுவதும் மகளை கவனிப்பது அவரது வாழ்க்கையின் அத்தியாவசியமான கடமையாக மாறியிருந்தது.

நேற்று, வழக்கம்போல் அனிதா குமாரியின் மகன் வேலைக்குச் சென்றபோது, வீட்டில் தாய்–மகள் மட்டும் இருந்தனர்.

மகளின் நிலைவும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களும் காரணமாக மன அமைதி குலைந்த அனிதா குமாரி, தீவிர மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்தார் என விசாரணையில் தென்பட்டுள்ளது.

மன அழுத்தத்தினால் தவறான முடிவெடுத்த அவர், மகள் அஞ்சனாவை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி மூச்சுத் திணறடித்து கொலை செய்தார்.

பின்னர், அதே வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் எடப்பால் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு,

பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆரம்ப விசாரணையில், நோயால் அவதிப்பட்டிருந்த மகளை காப்பாற்ற முடியாத மன வேதனையில் தாய் இந்த கொடூர முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

கறிவேப்பிலையை தூக்கி எறிபவரா நீங்கள் : இதைப் படியுங்கள்!!

நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவர்கள் கறிவேப்பிலை சாப்பிடும்போது ஒதுக்கி எறிந்து விடுகின்றோம்.

ஆனால் நாம் தூக்கி வீசும் கறிவேப்பிலையில் ஆரோக்கிய பலன்கள் ஏராளம் உள்ளது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பது என்பது சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் மிக அவசியம்.

கறிவேப்பிலையில் உள்ள ஃபைபர் மற்றும் பிற சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது செரிமான நொதிகளை தூண்டி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி அடர்த்தியாக வளர உதவுகின்றன. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது.

இது இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து இதில் இருப்பதால், கண் பார்வை குறைபாடுகளைத் தடுக்கவும், கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.

எனவே, கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல், தினமும் உணவில் சேர்த்து அதன் முழு பலனையும் பெறுவது அவசியம்.

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம் : கதறும் உறவுகள்!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13.11.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.

அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன’ சிறிது நேரத்திற்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குறித்த இளைஞனைக் காணாததால், ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்த நிலையில் இளைஞனைக் காணவில்லை.

பின்னர் ஏனையவர்களின் உதவியுடன் தோட்டக் கிணற்றில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றம் : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இன்று (14.11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் : எடுத்துச் செல்ல வந்தவர்கள் அதிர்ச்சி!!

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட, புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

இளைஞர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். இளைஞன் ஈஸி கேஷ் அமைப்பு மூலம் ரூ. 6,000 செலுத்தி போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து,

சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்வதற்காக இளைஞனின் தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தங்கநகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி : தங்கத்தின் விலை மேலும் உயர்வு!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் சற்று அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி குண்டுவெடிப்பு : மருத்துவர் உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!!

இந்தியாவின் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறிய சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்வலைகளை ஏற்​படுத்​தி​யது.

காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது.

வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் உறுதியானது.

இந்தச் சூழலில் இன்று (14) புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில் அங்கு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மூவர் மருத்துவர் உமர் நபியின் உறவினர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கைது படலத்தை விசாரணை அமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

சந்தேக நபர்கள் மூவரும் சுவிட்​சர்​லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்​படுத்தி சதி திட்​டம் தீட்டியதாகவும், சுமார் 26 லட்சம் ரூபாயை இதற்காக அவர்கள் நிதியாக திரட்டி உள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முட்டாள் என திட்டிய தவிசாளர் : பதவி விலக தீர்மானித்துள்ள பெண் பிரதேச சபை உறுப்பினர்!!

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா (21), பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர தன்னைத் திட்டி, முட்டாள் என்று கூறி, சபைக்கு மீண்டும் வர வேண்டாம் என அச்சுறுத்தியதாகக் கூறி, நிகினி அயோத்யா நேற்று  முன்தினம் (12.11.2025) பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

சிலாபத்தில் நேற்று (13.11.2025) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தமது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.

இங்கு பேசிய உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், ஒரு பெண்ணை இழிவுபடுத்திய தவிசாளரை கடுமையாகக் கண்டித்ததுடன், அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், அந்த நேரத்தில் சில பிரச்சினைகள் மற்றும் வரவு செலவு திட்ட அமர்வில் எதிர்க்கட்சியின் நடத்தை காரணமாக தான் மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அந்தப் பெண் உறுப்பினரை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாகவும் ஏற்றுக்கொண்ட போதும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆராச்சிகட்டுப் பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையர்கள் பலர் கண்பார்வை இழக்கும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கண் தொடர்பான சிக்கல்கள் உருவாகும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வயது வந்தோரிடையே நீரிழிவு நோயின் பரவல் 23% முதல் 30% வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, சுமார் ஐந்தில் ஒருவரை இது பாதிக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, பொது நீரிழிவு நோய் பாதிப்பு 73% அதிகரித்துள்ளது. உலகளவில், ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கண் நோய்களை உருவாக்குகிறது. மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் 11% பேருக்கு கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

நீரிழிவு நோய் குறிப்பாக உழைக்கும் வயதுடைய மக்களிடையே பார்வையை கணிசமாகப் பாதிக்கிறது. இதனால், ஆண்டுதோறும் சுமார் ரூ. 923 மில்லியன் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையின் நீரிழிவு கண் சிகிச்சைப்பிரிவுக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் முதியவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று மருத்துவர் பந்துதிலக மேலும் தெரிவித்தார்.

“இந்த நபர்கள் பார்வையிழக்க எந்த காரணமும் இல்லை. ஆரம்பத்திலேயே கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான சிகிச்சையின் மூலம்,

இந்த நிலையை நிர்வகிக்கலாம் அல்லது தடுக்கலாம். தடுப்பு தோல்வியடைந்தாலும், ஆரம்ப கட்ட சிகிச்சைகள் கிடைக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கிய அதிபர் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள பாடசாலை அதிபர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் (5) கைது செய்யப்பட்டிருந்தார்.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல.

அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார்.

‘அதிபர்’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு ‘அதிபர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறித்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை வெளியிடும்போது, ​​அவரை “இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி” என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்!!

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறப்பு விடயம் எனவும், இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்கு பின்னர் வாழ்க்கைத் துணைவருக்கும், வாழ்க்கைத் துணையின் மரணத்திற்குப் பிறகு 26 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தற்போது ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேனா நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சந்தன அபயரத்ன இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்!!

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக இஸ்ரேலுக்கு சென்ற 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையரின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய பொலிஸாரின் இன்டர்போல் பிரிவு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணி விசா மூலம் இஸ்ரேல் சென்றவர் என தெரியவந்துள்ளது. தெரிவிக்கப்படுகின்றது.

காதலுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தாயை நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற மகள்!!

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 11 ஆம் திகதி மாலை சந்தேக நபரான சிறுமியை கைது செய்தனர். பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் படிக்கும் சிறுமி, ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

இதை அறிந்ததும், அவரது தாயார், நன்கு படித்து வேலை கிடைத்த பின்னர் பொருத்தமான துணையை தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மகள், தாயின் படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சந்தேக நபரான சிறுமி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

காதலுக்கு தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.