தலாவ பகுதியில் கோர விபத்து : கவலைக்கிடமான நிலையில் இருவர்!!

அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் திசையிலிருந்து தலாவ நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் திடீரென பிரதான வீதியில் வைத்து மீண்டும் அனுராதபுரம் நோக்கி ‘யு-டர்ன் எடுத்தபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தை செலுத்தி வந்த ஆசிரியையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

12 இலட்சம் ரூபாவை கடந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(14) சற்று அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இலங்கை மதிப்பில் 1,284,352 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 45,310 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 362,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 41,540 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 332,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 39,650 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 317,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி : அடுத்த ஆண்டு காத்திருக்கும் பெரும் சிக்கல்!!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் எதிர்பார்த்ததை விட ரூ.100 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி குழு நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், வாகன இறக்குமதி குறைவதால் அடுத்த ஆண்டு வருவாய் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த வருட இறுதி 04 மாதங்களில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனம் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் 2,50,000 வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 63,000 கோடி ரூபா வரி வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் மாத்திரம் வாகன இறக்குமதிக்காக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் (36,431 கோடி அமெரிக்க டொலர்) நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன்,

வாகன இறக்குமதிக்காக அதிக நிதி கடந்த செப்டெம்பர் மாதமே செலவிடப்பட்டுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வாகன இறக்குமதிக்காக கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த செப்டெம்பர் மாதம் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர் (8,682 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல ஹோட்டல் அறையில் வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : ஒருவர் கைது!!

கோட்டை பொலிஸ் பிரிவில் பிரபல ஹோட்டல் அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் பணப்பையை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (13) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டுப்பெண் ஹோட்டலில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் மற்றொரு பெண்ணுடன் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திர்ஹாம்கள் மற்றும் யூரோக்கள் (உள்ளூர் நாணயத்தில் 330,000 ரூபாய்) காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 41 வயதான கந்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் விசாரித்தபோது, ​​வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாதபோது திருட்டு நடந்ததாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம் ஜா-எல பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் மாற்றப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

மேலும்,கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி விபத்தில் இளைஞன் உடல் நசுங்கி பரிதாபமாக பலி!!

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளையுடன் காத்திருந்த இளம் தாய்க்கு எமனாக வந்த பேருந்து!!

நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பம் ஒன்று காயமடைந்துள்ளது. மாவனெல்ல-ஹெம்மாதகம வீதியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஓட்டுநர் தூங்கியதால் பாடசாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியது.

மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த தாய், தந்தை மற்றும் பிள்ளையை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கியது. மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மதியம் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அவரது மகள் மற்றும் மற்றொரு நபர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வேகமாகச் சென்று வீதியில் இருந்து விலகி நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீதும், அருகிலுள்ள கடையின் மீதும் மோதியது. கடையில் இருந்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அவரின் ஆறு வயது மகள் காயமடைந்துள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கத்தின் விலை!!

இன்று (13) நண்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 336,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், பிற்பகலுக்கு பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று மாத்திரம் 14,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் ஆச்சரியம் : வைத்தியர்களை வியப்பில் ஆழ்த்திய இரட்டைக் குழந்தைகள்!!

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன.

ஒரு குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம் எனவும், மொத்தமாக இரண்டு குழந்தைகளும் 4 கிலோ 400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வயிற்றுப் பகுதியால் ஒன்றிணைந்துள்ள இந்தக் குழந்தைகளைப் பிரிக்கும் சத்திரசிகிச்சை மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுவர் சீமாட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

காசல் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்புகள் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ள போதிலும், அண்மைக் காலத்தில் இவ்வாறானதொரு குழந்தை பிறப்பு இடம்பெற்றது இதுவே முதல் சந்தர்ப்பம் என மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்கப் பதக்கம்!!

இந்தியாவில் இடம்பெற்ற 23 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம் ஒன்றினையும் , இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் கடந்த 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் நடைபெற்ற போட்டிகளில் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவனான செல்வராஜா ரமணன்,

50 வயது பிரிவில் பங்குபற்றி உயரம் பாய்தலில் தங்கபதக்கமும், முப்பாச்சல் மற்றும் கோலூன்றிப்பாய்தலில் வெள்ளி பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளார் .

குறித்த போட்டியில் 22 ஆசிய நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர்கள் பங்கு பற்றியிருந்தனர் அதில் இலங்கையில் இருந்து 250 வீர வீராங்கனைகள் பங்கு பற்றியிருந்தனர்.

இந்நிலையில் 50 வயது யாழ்ப்பாண வீரன் தங்க பதக்கம் பெற்றமைக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

பேருந்தில் இருந்து விழுந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலி!!

இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்தில் இருந்து விழுந்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

4 பிள்ளைகளின் தாயான 68 வயதான கோனார முதியன்செலகே புஞ்சிமணிகே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்ற தனியார் பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.​​

பேருந்தில் இருந்து இறங்க முயன்ற போது பேருந்தில் இருந்து கீழே விழுந்து, பின்புற டயரில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கஹவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்து மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கும் இடத்தை மறந்துள்ளார்.

பின்னர் பேருந்து நிற்கும் முன்பே பேருந்தில் இருந்து இறங்கியதால் விபத்து ஏற்பட்டதாக பேருந்து ஓட்டுநர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள்!!

இலங்கையில் இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது.

நாய்களின் அதிகரிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 தெரு நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண் நாய்கள் வருடத்துக்கு இரண்டு முறைகள் குட்டி ஈனுவதால் தற்போது இலங்கையில் எட்டு மனிதர்களுக்கு ஒரு தெருநாய் என்ற சதவீதத்தில் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான விசேட அறிவிப்பு!!

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மீண்டும் 4 இலட்சத்தை நோக்கி கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 310,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 336,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இவேளை நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுண் 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 326,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கும் போது நேற்றை விட இன்று தங்கத்தின் விலை சுமார் பத்தாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி உலக தங்கத்தின் விலை 4,212 டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த முறை நான்கு இலட்சம் ரூபா வரையில் தங்க விலை அதிகரித்த போதும் தொடர் சரிவை சந்தித்து மீண்டும் 3 இலட்சம் என்ற இடத்திலேயே வந்து நின்றிருந்தது தங்க விலை.

இவ்வாறிருக்கையில் இம்முறை மீண்டும் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரிப்பதானது எதிர்காலத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது.

8 வயது இலங்கைச் சிறுவனுடன் கடவுச்சீட்டு அலுவலகத்தில் சிக்கிய வெளிநாட்டுப் பெண்!!

மலேசிய குடிவரவு அலுவலகத்தில் 8 வயது இலங்கை சிறுவனுக்கு மலேசிய கடவுச்சீட்டை சட்டவிரோதமாகப் பெற முயன்றதற்காக 30 வயது மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில், அந்தப் பெண் சிறுவனுடன் கடவுச்சீட்டு கவுண்டருக்குச் சென்று கடவுச்சீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நேர்காணல் செயல்பாட்டின் போது, ​​சிறுவனின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவரது பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் குறித்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதால் குடிவரவு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

அதிகாரிகளின் தொடர் கேள்விகளுக்கு, சிறுவன் தொடர்ந்து தவறான பதில்களை அளித்ததால், சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

குடிவரவுத் துறையின் அறிக்கைக்கமைய, கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் நோக்கம் குறித்து அந்தப் பெண் முரண்பாடான மற்றும் சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணும் சிறுவனும் மேலதிக விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

விசாரணைகளில் பின்னர் அந்தப் பெண்ணுக்கு சிறுவனுக்கு குடும்ப உறவு இல்லை என்பதும், கடவுச்சீட்டு விண்ணப்ப முயற்சிக்கு தயாராவதற்காக அவருடன் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது.

அந்தப் பெண் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க அல்லது பயண ஆவணங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பது மலேசிய சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காரை ஏற்றி மனைவியை கொலை செய்ய முயன்ற ஐரோப்பா வாழ் கணவன்!!

மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் தனது இலங்கை மனைவியை காரில் ஏற்றிச் செல்ல முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பெண் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், மனைவி மீது காரை ஏற்றி கணவன் கொல்ல முயன்றது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தம்பதி திக்வெல்ல பகுதியில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

இது இலங்கை மனைவிக்குச் சொந்தமானது. இத்தாலிய நாட்டவர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில் அந்த பெண்ணைச் சந்தித்தார். அந்த அறிமுகம் காதல் உறவாக வளர்ந்த பிறகு, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

எனினும் தம்பதியினர் இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்து வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபர்கள் காரை ஓட்டி மனைவியை கொலை செய்ய முயன்றதாக மிரட்டல் விடுத்ததுடன், கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இத்தாலிய நாட்டவரும் அவரது ஓட்டுநரும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கனடா செல்ல புதிய மாற்றம் : சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளை பெரும் முறையை கனடா இலகுவாக்க உள்ளது. இதற்கமைய, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு இனி மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதம் தேவையில்லை.

இந்த மாற்றம் செயன்முறையை விரைவுபடுத்துவதோடு காகித வேலைகளையும் குறைக்கின்றது.

இதன்படி, முனைவர் பட்ட மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழக ஏற்பு கடிதம் மற்றும் உயிரியளவியல் (biometrics) சோதனை ஆகியவற்றை சரிபார்த்த பிறகும் இரண்டு வார விரைவான செயலாக்கத்திலிருந்து பயனடையலாம்.

புதிய அமைப்பில் எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. உலகில் எங்கிருந்தும் தகுதியுள்ள எந்த முதுகலை அல்லது முனைவர் பட்ட மாணவரும் இந்த திட்டம் மூலம் பயனடையலாம்.

புதிய முறையை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்களும் ஒருசேர விண்ணப்பிக்கலாம்.

வாழ்க்கைத் துணைவர்கள் திறந்த வேலை அனுமதிகளைப் பெறலாம். மேலும், குழந்தைகள் கல்வி அனுமதிகள் அல்லது பார்வையாளர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது நீண்ட தாமதங்கள் இல்லாமல் குடும்பங்கள் ஒன்றாகச் செல்ல அனுமதிக்கிறது.

இதற்கு விண்ணப்பிக்க, கடவுச்சீட்டு, பல்கலைக்கழக ஏற்பு கடிதம், நிதிச் சான்று மற்றும் பிற துணை ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களும் தேவை.

விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உயிரியளவியல் (biometrics) சோதனை முடிவுகள் 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்வது தாமதங்களை தவிர்க்க உதவுகிறது. இதேவேளை, பட்டப்படிப்புக்குப் பிறகு, மாணவர்கள் கனடாவில் பணிபுரிய முதுகலை பணி அனுமதிக்கு (PGWP) விண்ணப்பிக்கலாம்.

இந்த அனுபவம் பின்னர் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.