மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் காதலனின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கட்கொபர் பகுதியை சேர்ந்த கிர்திகா (22) என்ற இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிய அலி ஷேக் என்ற இளைஞருடன் கிர்திகா காதலில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அந்த உறவை முறித்ததாக கூறப்படுகிறது
ஆனால் அலி ஷேக் தன்னை மீண்டும் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், தொலைபேசி வழியாகவும் நேரிலும் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிர்திகா, கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “என் மரணத்திற்கு அலி ஷேக் தான் காரணம்” என குறிப்பிட்டிருந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கிர்திகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அலி ஷேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்,
பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஐரோப்பிய நாடுகளுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழையும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது பல்வேறு கடல் விபத்துகள் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 49 பேர் கொண்ட குழு, கடந்த 3ம் தேதி லிபியாவின் சொவரா துறைமுகம் அருகே இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது. பயணத்தின் போது கடுமையான கடல் அலைகள் காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது.
திடீர் விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களால் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 42 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன.
மீதமுள்ளவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடல் வழி சட்டவிரோத குடியேற்றம் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லிபியா அரசு சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தாலும், இந்த வகை அபாயகரமான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது.
ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
கனடா திரும்புவதற்காக, Punta Cana சர்வதேச விமான நிலையத்தில் Air Transat நிறுவனத்தின் விமானத்தில் ஏறுவதற்காக தம்பதியர் செல்ல, அங்கு அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்கள்.
பார்வதி அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட்தான் உள்ளது, கனேடிய பாஸ்போர்ட் இல்லை, தாங்கள் அதற்கென தனியான வரிசை எதிலாவது நிற்கவேண்டுமா என தனது சந்தேகத்தை வெளிப்படுத்த,
அவர்களை தனியாக நிறுத்திய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் ஒருவர், ஒரு சிவப்புக் கோட்டுக்கு பின்னால் நிற்கும்படி கூறியிருக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட பார்வதி, மிதுன் தம்பதியர் மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தாங்கள் வேண்டுமென்றே வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்த தம்பதியர், நடப்பதை வீடியோ எடுக்கத் துவங்க, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதியை திட்டியிருக்கிறார்.
தங்களிடம் பாஸ்போர்ட்டும் பயணச்சீட்டும் இருந்தும் ஏன் தங்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என தம்பதியர் கேட்க, உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவேண்டுமானால் நீங்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அலுவலர்.
வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஏர் கனடா விமானம் ஒன்றில் விலை அதிகமான பயணச்சீட்டு வாங்கி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர் தம்பதியர்.
தாங்கள் சந்தித்த மோசமான விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்த தம்பதியர், small claims court என்னும் நீதிமன்றத்தை அணுக, நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்ததற்காக Justice Marcel Mongeon என்னும் நீதிபதி அவர்களை பாராட்டியுள்ளார்.
இதுபோன்ற விடயங்களின்போது, வெறுமனே புகாரளிக்காமல், இதுபோல் வீடியோ ஆதாரங்கள் கொடுப்பதால், என்ன நடந்தது என்பதை நீதிபதி தனது கண்ணாலேயே பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் நீதிபதி.
அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதி மிதுன் தம்பதியரை நடத்திய விதத்தைக் கண்ட நீதிபதி விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, தம்பதியரால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுமென தாங்கள் எண்ணியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்படி அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால், வீட்யோவை அழித்துவிட்டால் உங்களை விமானத்தில் ஏற அனுமதிப்பேன் என அந்த, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் எப்படிக் கூறினார்? வீடியோவை அழித்துவிட்டால் பாதுகாப்பு பிரச்சினை சரியாகிவிடுமா?
அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஏர் கனடா விமானத்தில் வீடு திரும்பியுள்ளர்களே, அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால் ஏர் கனடா விமான நிறுவனம் அவர்களை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி.
ஆக, பார்வதி, மிதுன் தம்பதியருக்கு Air Transat விமான நிறுவனம் 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதோடு இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை $4.212ஐத் தாண்டியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று உடன் ஒப்பிடும்போது இன்று (13) ரூபாய் 10,000 அதிகரித்துள்ளது என சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி இன்று காலை கொழும்பு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபாய் 310.800 ஆக அதிகரித்துள்ளது. இதன் நேற்றைய விலை ரூபாய் 301.500 ஆகும்.
இதற்கிடையில் நேற்று (12) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 326.000 ஆக இருந்த நிலை இன்று ரூபாய் 336.000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் நேற்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும்,
பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில், ஒரு சிறுமி குப்பையில் கிடந்த உணவைச் சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சாலையோர குப்பை பொட்டலத்தில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அந்தச் சிறுமியின் வீடியோவை ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் பகிர்ந்ததுடன், அரசு நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டது.
நகராட்சி, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மூன்று துறை குழுக்கள் சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
விதிஷா பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் நடைபெற்றும், இதுவரை சிறுமியை அடையாளம் காண முடியவில்லை.
உள்ளூர் கடைக்காரர்கள், அந்தச் சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்சென் மாவட்டத்திலிருந்து வந்த பேருந்தில் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜீது பட்வாரி, “விதிஷாவில் இருந்து வந்த இந்த மனதை பிழியும் வீடியோ, பாஜகவின் பத்தாண்டுகால தோல்வியடைந்த ஆட்சிக்குச் சான்றாகும்.
ஏழைகளுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் பயன்கள் மக்களை அடையாமல் போவதால் பசியால் வாடும் மக்கள் குப்பையில் உணவைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்று (12.11.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.
அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதிய நிலையில் வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான விசாரணையில், டெல்லியில் 25/11 பாணியில் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்களும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அன்று நடந்த தாக்குதல்களில், தாஜ் மஹால் ஹோட்டல், ஓபராய் டிரிடென்ட் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், மற்றும் லியோபோல்ட் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடும், குண்டுவெடிப்புகளும் நடந்தன.
இதைத்தான் 26/11 தாக்குதல் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோன்ற ஒரு தாக்குதல் சம்பவத்தை பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். டெல்லியில் நடந்த இந்தச் சதித் திட்டம் ஜனவரி மாதத்திலிருந்தே திட்டமிடப்பட்டு வந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய இந்தத் தீவிரவாதக் குழு பல மாதங்களாக இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்தது என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த பயங்கரவாதிகள் டெல்லி மட்டுமல்லாமல், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த 200 சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்து வந்திருக்கின்றனர்.
மதத் தலங்களைத் தாக்கி சமூக பதற்றத்தை தூண்டுவதே பயங்கரவாதிகள் சதி செயலின் நோக்கம். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, சோபியான் மற்றும் அனந்தநாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில மருத்துவர்கள் இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஃபரிதாபாத்தில் தங்கள் தளத்தை அமைத்துள்ளனர்.
மருத்துவர்களாக இருந்ததால், இவர்கள் டெல்லி என்சிஆர் முழுவதும் சந்தேகம் எழாமல் எளிதாக நடமாட முடிந்தது. பிறகு, தௌஜ் மற்றும் ஃபதேபூர் தாகா பகுதிகளில் வெடி பொருட்களை சேமிக்க அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
கார் வெடிப்பு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் கணாலே மற்றும் ஆதீல் ரதர் என 3 பேர் மருத்துவர்கள். டாக்டர் உமர் நபி என்பவர் நவம்பர் 10 அன்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலை படையை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.
தனது பெயருக்கும் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் கருத்து தெரிவித்த நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அவரிடம் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளேன்.
எனது அரசியல் நடவடிக்கையை ஆதாள பாதாளத்திற்குள் கொண்டு செல்கின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் இதற்கு ஆதாரத்துடன் பதில் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்.
அவரது குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.அந்த வகையில் என் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
மேலும் இதுவரை இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களில் எனக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் அல்லது விசாரணைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் மன உளைச்சலையும்,கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை அவர் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜலட்சுமி யார்லகட்டா (23) என்ற ராஜி, சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், இருமல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் வசித்த குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அலாரம் அடித்தும் எழவில்லை என நண்பர்கள் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் கூறினாலும், உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜலட்சுமியின் மரணம் குறித்து தெரிந்த அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக உறவினரான சைதன்யா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆந்திராவின் பபட்லா மாவட்டம், கார்மிசெடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த இளம் மகளின் இழப்பு, குடும்பத்தினரை உலுக்கி விட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே சுவர் இடிந்ததில் இரு சிறுவர்கள் பலியான துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கருவாரா பகுதியைச் சேர்ந்த அஜய்–தேவி தம்பதியரின் மகன்கள் ஆதிஅஜய் (7) மற்றும் அஜினேஷ் அஜய் (4) ஆகியோர் முறையே 2ம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி.யில் பயின்று வந்தனர்.
நேற்று முன்தினம், தங்கள் தங்கை மகனுடன் சேர்ந்து வீட்டின் மேல்தளத்தில் உள்ள சன் ஷைடில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது.
அதில் சிக்கிய இரு சிறுவர்களும் கடுமையாக காயமடைந்தனர். குடும்பத்தினர் அவசரமாக அவர்களை கோட்டத்தரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இரு சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சுவர் இடிந்து சகோதரர்கள் பலியான இந்த சம்பவம் அட்டப்பாடி முழுவதும் துயரநிலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹொசகெரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய 31 வயதான ககன் ராவ், தனது மனைவி மேகனாவின் துன்புறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துக்கொண்டார்.
ககன் ராவ், சாமராஜநகரைச் சேர்ந்த இறுதி ஆண்டு BCA மாணவி மேகனாவை 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார்.
போலீஸ் தகவலின்படி, திருமணத்திற்கு பின் மேகனா அடிக்கடி கணவர் மீது முறைகேடான உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, இடையறாது சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனவேதனைக்குள்ளான ககன் ராவ் அறைக்குச் சென்று சேலையைக் கட்டி சீலிங் ஃபேனில் தூக்கிட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து ககன் ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மனைவி மேகனாவுக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பும் மேகனா பெண்கள் காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்திருந்ததாகவும், சமீபத்தில் சமாதானம் ஆன பிறகும் சண்டைகள் தொடர்ந்ததாகவும் போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அழகான பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்யப்படுதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க உத்தரவிட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவாரா என்பதை விசாரித்து, நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேக நபர் பேஸ்புக்கில் பெண்களால் பகிரப்படும் அழகான புகைப்படங்களைப் பயன்படுத்தி வேறு பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் பெரும்பாலான சமூக ஊடக பயனர்கள் ஈர்க்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் பல்வேறு நபர்களுக்கு பேஸ்புக் பக்கங்களை விற்று பணம் பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
“என் நிலவு நீ” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியதாகவும், புகைப்படங்களுக்கு சொந்தக்காரர்களான பெண்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் அவர் இந்த மோசடிச் செயலைச் செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
மோசடி தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பெண்களின் முகங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர் 10க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை மோசடியாக உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் 20 பேருடன் சென்ற துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம், அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 சரக்கு விமானம் விபத்துக்குள்ளான காரணம் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம், விமானக் குழுவினர் உட்பட 20 துருக்கி பணியாளர்கள் C-130 விமானத்தில் இருந்ததாகக் கூறியது, ஆனால் பிற நாட்டினரைச் சேர்ந்த பயணிகள் தொடர்பில் குறிப்பிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது விபத்துக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.
துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம், விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 துருக்கிய இராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தற்போது, துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், அதிகாரிகள் இன்னும் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் எண்ணிக்கையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறைவுக்கு, நாடு கடத்தப்பட வேண்டிய தமது பிரஜைகளைத் திரும்பிப் பெறுவதில் இலங்கை ஒத்துழைக்கத் தவறியது முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசியம் மற்றும் எல்லைகள் சட்டம் மீதான விவாதத்தின்போது, உள்துறை அலுவலகத்திற்கான நிழல் அமைச்சர் லோர்ட் டேவிஸ் ஒப் கோவர் பிரித்தானியாவின் இடப்பெயர்வுக் கண்காணிப்பகத்தின் தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய அரசாங்கம், விசா காலம் முடிவடைந்த, தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பி அனுப்புகிறது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வீதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது பிரித்தானியா இலங்கைக்குத் நாடு கடத்தும் மக்களின் எண்ணிக்கை 97 சதவீதம் குறைந்துவிட்டது .
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள், திருப்பி அனுப்பப்பட வேண்டிய தமது குடிமக்களின் அடையாளத்தை உறுதி செய்வதில் ஒத்துழைக்க மறுக்கின்றன அல்லது தாமதப்படுத்துவதாக பிரித்தானியா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
விசா அபராதங்களை விதிக்கும் நடைமுறை
அத்தகைய நாடுகளுக்கு விசா அபராதங்களை விதிக்கும் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என கோரும் சட்டத் திருத்தம் 71யை லோர்ட் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாடு அடையாளத்தை அல்லது நிலையைச் சரிபார்க்க மறுக்கும் போதோ அல்லது தாமதப்படுத்தும் போதோ, அவர்களை வெளியேற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட திருத்தம், அத்தகைய சந்தர்ப்பங்களில் உள்துறைச் செயலாளர் கட்டாயம் செயல்பட வேண்டியிருப்பதை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.