அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தை, மகள், தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய், இரண்டு பிள்ளைகளும் மற்றும் பாட்டி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த தந்தைக்கு 43 வயது என்றும், மகளுக்கு 13 வயது என்றும் தாய்க்கு 36 வயது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 15 வயது மகள் மற்றும் 20 வயது மகன், 66 வயது பாட்டி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக இவர்களுக்கு இடையே குடும்ப தகராறுகள் இருந்ததாக காவல்துறையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன்,
கணவர் அடிக்கடி மது அருந்துவது மற்றும் மனைவியைத் தாக்குவது தொடர்பாக காவல்துறையினருக்கு பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பனம்பட்டியில் சோகமான சம்பவம் நடந்தது. அண்ணாதுரை (55) என்பவரின் மகள் தனலட்சுமி (19), குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.
இதைக் கண்ட தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்ற உடனே கிணற்றில் குதித்தார். மது போதையில் இருந்ததாக கூறப்படும் அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த குளித்தலை தீயணைப்புத் துறையினர் நள்ளிரவில் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றின் சுவரைப் பிடித்து தத்தளித்த தனலட்சுமி உயிருடன் மீட்கப்பட்டார். அண்ணாதுரை சடலமாக மீட்கப்பட்டார். போலீஸார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், பெற்றோருடன் செல்போனில் பேசியபடியே தகவல் கூறிவிட்டு, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த அம்ப்ரோஸின் மகள் பிரியங்கா (27). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் டேவிட்சனுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தம்பதிக்கு 5 வயது மகனும், 9 மாத குழந்தையும் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மனைவி மீது சந்தேகப்பட்டு, ஜெப்ரின் டேவிட்சன் தொடர்ந்து பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வருவதாக பிரியங்கா குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவில்லை, கணவருடன் சண்டை என பெற்றோரிடம் போனில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், கணவர் வீட்டில் பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.
தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விவாகரத்தான இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், குழந்தையைப் பிரிந்து வர மறுத்த காதலியை நடுரோட்டில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, காதலன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் எல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (30). இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்த காலகட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவருடன் ரஞ்சிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. ரஃபிக் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். குழந்தையை விட்டு வரச் சொன்னதால் ரஞ்சிதா காதலை முற்றிலும் மறுத்து பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரஃபிக், கடந்த ஜனவரி 2ம் தேதி வேலை முடிந்து வந்த ரஞ்சிதாவை வழிமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறு வலுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதாவின் கழுத்தை அறுத்தார்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ரஞ்சிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான ரஃபிக், காட்டில் தூக்கிட்ட சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த இரட்டை மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்த நபர், குறும்படம் பார்த்த பின்னர் அந்த பெண்ணை தனது 65 வயதில் திருமணம் செய்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். தற்போது 65 வயதான இவர், தன்னுடைய இளம் வயதில், ராஷ்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் பயத்தின் காரணமாக இருவரும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில், ராஷ்மியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் வேலைக்காக வெளிநாடு சென்ற ஜெய பிரகாஷும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்ட இருவரும், குழந்தைகள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக திருமண வாழ்வை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் ராஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதே போல், ஜெயபிரகாஷின் மனைவியும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக, ரஷ்மி குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது மகள்களின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய ஒப்புக்கொண்ட ஜெயபிரகாஷ், அதற்காக பெண் பார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையே அவர், ராஷ்மி நடித்த குறும்படம் ஒன்றை பார்த்துள்ளார். தனது முன்னாள் காதலி குறும்படத்தில் நடிப்பதை பார்த்து உற்சாகமடைந்த ஜெயபிரகாஷ் உடனடியாக குறும்பட இயக்குநரிடம் ராஷ்மியுடைய மகளின் செல்போன் எண்ணை வாங்கி ராஷ்மி உடன் பேசியுள்ளார்.
இருவரும் தங்களது துணையை இழந்த விவரங்களை அறிந்த பின்னர், தான் மறுமணத்திற்கு பெண் தேடி வருவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
இது குறித்து, ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் ஆலோசனை நடத்திய நிலையில், அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, ஜெயபிரகாஷ் மற்றும் ராஷ்மியின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பங்குபெற்ற அவர்களின் திருமணம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் எளிய முறையில் நடைபெற்றது.
ஜெயபிரகாஷ் மற்றும் ரஷ்மியின் திருமணப் படத்தை, சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ராஷ்மியின் மகள், “எந்தக் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்?” என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது தந்தை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமான நிலையில், அர்ஜூன் ஷர்மா என்னும் நபர், ஜனவரி மாதம் 2ஆம் திகதி, நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், நிகிதாவைக் காணவில்லை என புகாரளித்த அர்ஜூன் தலைமறைவாகிவிட்டார்.
அர்ஜூன் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என நம்பும் அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளார்கள்.
தந்தை தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், நிகிதாவின் தந்தையான ஆனந்த் (Anand Godishala), ஊடகங்கள் குறிப்பிடுவது போல, அர்ஜூன் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்று கூறியுள்ளார்.
அர்ஜூனும் வேறு இரண்டுபேரும், நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஆனந்த், அர்ஜூன் தன் மகளுடைய அறையில் தங்கியிருந்தவர் மட்டுமே என்றும், அவர் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அர்ஜூன் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தது குறித்தும், அவர் இந்தியாவுக்குத் திரும்ப திட்டமிட்டுவந்தது குறித்தும் தன் மகளான நிகிதா சமீபத்தில் அறிந்துகொண்டதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது.
எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.
தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
மிக முக்கியமாக இது தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும்.
ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை – அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து, இன்று (05.01.2026) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் நடமாடும் பஞ்சர் ஒட்டும் சேவை வழங்கி வருபவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முச்சக்கர வண்டி விபத்து தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை தான் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து தங்கம், வெள்ளி மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (05.01.2025) காலை உலக சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1.8 சதவீதம் அதிகரித்து $4,408 (£3,282) ஆக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி விலையும் 3.5% உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் 2025 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அளவை எட்டியதாக கூறப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக இருந்த நிலையில் இன்று (05) 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதற்கமைய, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 332,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 314,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
இதனுடன் ஒப்பிடும்போது தாவர எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சந்தையில் தேங்காய்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காயின் விலை ரூ. 122 – 124 வரை இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு தேங்காயை ரூ. 180 முதல் 200 வரை விற்பனை செய்கின்றமை குறிபிபிடத்தக்கது.
காலியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல, கட்டுவில, அஹுங்கல்ல-உரகஸ்மன்ஹந்திய வீதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அஹுங்கல்ல, பதிராஜகம பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சமத் தேஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மூன்று நாட்களுக்கு முன்பு தான் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் இருந்து தனது சம்பளத்தை பெற்று, மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்.
நேற்று முன்தின இரவு, தான் வாங்கிய மோட்டார் சைக்கிளில் பயிற்சி செய்ய சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பங்களாதேஸ் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றையதினம்(5) தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மானை நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த முடிவிற்கு எந்த நியாயமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் பங்களாதேஸ் மக்கள் “மிகவும் காயமடைந்து, அதிர்ச்சி அடைந்து, கோபமடைந்துள்ளனர்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்புகளை நிறுத்தும் உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் (இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ள) பங்கேற்க பங்களாதேஸ் அணியை அனுப்ப முடியாது என பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை (BCB) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விளையாடுவதில் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைப்பாட்டை பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை நேற்றையதினம்(4) அனுப்பிய மின்னஞ்சல் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு பயணம் செய்வது சாத்தியமில்லை என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பங்களாதேஸ்அணியின் போட்டிகளை வேறு ஒரு நாட்டிற்கு மாற்றுமாறும் பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்தளாய் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், விளையாட்டாக கழுத்தில் கத்தி வைக்கப்பட்டதில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (04.01.2026) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து சூரியபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆறு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து கந்தளாய் பேருந்து நிலையத்திற்கு மேலுள்ள சிகையலங்கார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு ஒருவருக்கு முடி வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சிகையலங்காரக் கருவிகளைக் கொண்டு ஏனைய இருவர் விளையாடியுள்ளனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக 15 வயதுடைய அசேன் சாருக்க சூரியதாச என்ற சிறுவனின் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். களுத்துறை, துவா கோயில் வீதியை சேர்ந்த 16 வயது மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் கடந்த இரண்டாம் திகதி அவரின் வீட்டில் நடந்துள்ளது. பிரபல பாடசாலை மாணவியான அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எதிர்கொள்ள அச்ச நிலைமை காரணமாக விபரீத முடிவை எடுப்பதாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (4) குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 46 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேற்படி பெண்ணின் கணவர் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் அந்தப் பெண் வீட்டில் தனது பிள்ளைகளுடன் இருந்துள்ளார்.
மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் அந்தப் பெண்ணுடன் முரண்பட்டுள்ளார்.
இறுதியில் அவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அயலவர்கள் பெண்ணை உடனே வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகின்றது.
கொலையாளியான 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னடுத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.