
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில், விரிவுரையாளர் அவரது வீட்டிலேயே வைத்து கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (3) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிவான் எஸ். லெனின்குமார் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விரிவுரையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தையும் ஜூன் 16 ஆம் திகதி வரை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.
முதலாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.
அதேவேளை, இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் (வயது 54) மார்ச் 2026-ல் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


























