கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனை : தொடர்ச்சியாக 8 சிக்ஸ்!!

உலக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனையை செய்துள்ளார் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி, படைத்துள்ளார்.

அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக எட்டு சிக்ஸர்களை அடித்து, முதல் தர கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அதிலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார். சூரத்தின் பித்வாலா மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிரொபி பிளேட் குரூப் போட்டியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே அணி 576 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என வலுவான நிலையில் இருந்த நிலையில், 8ஆவது வீரராகக் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி களமிறங்கியுள்ளார்.

ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்ட அவர், அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி, தொடர்ச்சியாக எட்டு பந்துகளில் எட்டு சிக்ஸர்களை விளாசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வெறும் ஒன்பது நிமிடங்கள் மற்றும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டியதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

அரைசதம் கடந்த பிறகு அவர் சந்தித்த மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காத நிலையில், மேகாலயா அணி 628 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

இந்த மைல்கல்லின் மூலம், ரஞ்சி டிரொபி வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரவி சாஸ்திரியுடன் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆகாஷ் குமாரின் ஆதிக்கம் துடுப்பாட்டத்துடன் முடிவடையவில்லை; பந்துவீச்சிலும் புதிய பந்தை எடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றி, அந்த நாளை தனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிக்கொண்டார்.

இந்த சாதனையின் மூலம், 2012ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக வெய்ன் வைட் 12 பந்துகளில் அரைசதம் அடித்த 13 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி டிரொபியைப் பொறுத்தவரை, 2015ஆம் ஆண்டு திரிபுராவுக்கு எதிராக ஜம்மு & காஷ்மீர் வீரர் பன்தீப் சிங் 15 பந்துகளில் அடித்த அரைசதமே முந்தைய சாதனையாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் (21 பந்துகள்) வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல் நீரை உறிஞ்சும் வானம் சமூக வலைதளங்களில் பரவலாகும் காணொளி!!

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமான வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் பாம்பன் வடகடல் பகுதியில் திடீரென மேக கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த கடற்றொழிலார்கள் கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு கண்டுக்களித்தோடு அதனை எடுத்து காணொளி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து தற்போது வேகமாக பரவி வருகின்றது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் (10.11.2025) தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,235,455 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 43,580 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 348,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 39,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 319,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 38,140 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 305,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம் : கிரிக்கட் மைதானத்தில் நடந்த சோகம்!!

இலங்கையில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஓருவர் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று(9) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை ஓருவருடன் ஒருவர் மோதிக் கொண்டுள்ளனர். இவ்வாறு மோதிக் கொண்டதில் பளுகஹாவெல கெட்டுவெல்கம பகுதியைச் சேர்ந்த இஹலகே தனுஷ்க தேவிந்த பெரேரா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தினைத் தொடர்ந்து மினுவன்கொட ஆதார வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிடியெடுப்பதற்காக முயற்சித்த போது மோதிக்கொண்ட மற்றைய வீரருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. டென்னிஸ் பந்தின் மூலம் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டியொன்றின் போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார்.

7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச் சேர்ந்தவர்.

19 வயதான இவர், ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் “உலகின் உயரமான இளைஞர்” என்ற பெருமை பெற்றவர்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.

மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.

அண்மைக்காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகவும் கூறி,

பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். எனவே வடக்கு கிழக்கு மக்கள் இணைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் தூக்கத்திலேயே மரணம் : திரைத்துறையினர் இரங்கல்!!

நடிகர் அபிநய் இன்று (10) காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகர் அபிநய் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அபிநய் கடந்த 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அத்துடன் சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ ஆகிய திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களுக்குப் பின்னணி குரல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் நடிகர் அபிநய்யின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த நபர்!!

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இவர் திருடியுள்ளார்.

தொடர்பாக, கிட்டத்தட்ட 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட தீவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 60 வயதுடையவர் என்றும், அவர் 1993 ஆம் ஆண்டு நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொரள்ளையில் உள்ள சிறிசாத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிப்பறை கிண்ணத்தில் ஒரு பவுண்டு எடையுள்ள கிட்டத்தட்ட 3 கிலோ கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடையின் இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையிலிருந்து கடந்த மாதம் 25 ஆம் திகதி, இரவில் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர்,

அலமாரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட சடலத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

தென்னிலங்கை கடற்கரையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தை பல மணி நேரங்களாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்துள்ளனர். இந்த நிலையில், கட்டுகொட இறுதிச் சடங்கு சேவையினர் வந்து உதவியுள்ளனர்.

ஜா கோட்டை கடற்கரையில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முடித்த போதிலும், உடலைக் கொண்டு செல்வதற்குத் தகுந்த வாகனம் கிடைக்காமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகர சபை மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை.

இதனால், சடலத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கட்டுகொட இறுதிச் சடங்கு சேவைக்குத் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களால் சடலத்தை காலி தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 65 வயது இருக்கலாம் எனவும் அவரது அடையாளம் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் கொடூரம் : மனைவியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த கணவன்!!

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று கிராமமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியரான வீரசிங்கம் (75) மற்றும் அவரது மனைவி வீ.அழகம்மா (73) ஆகியோருக்கு இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது.

கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், நேற்று(07.11.2025) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் விழித்து, கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகள் மேற்கொண்டதனையடுத்து உடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

OTP குறியீடுகளை பகிர வேண்டாம் : இணைய பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இணைய நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக டெலிகிராம் / வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி இந்த நிதி மோசடிகள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் தனிநபர்களை ஏமாற்றி அவர்களின் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் (பயனர் பெயர் / கடவுச்சொல்), QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களை பெறுவது கவனிக்கப்பட்டுள்ளது.

இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அல்லது பிற கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பதன் மூலம் அவர்கள் பெரும்பாலும் மோசடிகளைச் செய்வதைக் கவனித்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி இணையத்தில் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

பணியகம் போன்ற அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வேலைவாய்ப்பு அல்லது கல்வி வாய்ப்புகளைப் பெறவும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது.

இணையத்தைப் பயன்படுத்தும் போது, ​​பிற வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகக் கணக்குகளில் (டெலிகிராம் / வாட்ஸ்அப் அல்லது பிற) தெரியாத நபர்கள் அல்லது தெரியாத சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி அறிக்கைகள் அல்லது செயல்களால் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெரியாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் இடுகையிடும் இணைய நீட்டிப்புகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகின்றது.

தெரியாத நபர்களின் கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பது, அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மற்றும் ஒருவரின் வங்கிக் கணக்கை மற்றவர்களுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்குவதைத் தவிர்க்குமாறு சுட்டிக்காட்டப்படுகின்றது.

எந்த சூழ்நிலையிலும் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP குறியீடுகளை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதும் முக்கியம்.

மொபைல் பயன்பாடுகளை நிறுவும் போதும், தெரியாத நபர்களால் வழங்கப்படும் இணைய நீட்டிப்புகளைப் பயன்படுத்தும் போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சையிக்கிளில் பயணித்த சிறுவனின் உயிரைப் பறித்த லொறி!!

காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.

காலி்யிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அச்சிறுவன் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் 11 வயதுடையவன் எனவும், கட்டுக்குறுந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு களுத்துறை தெற்குப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமியாருடன் சண்டை : ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

பின்னர் மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பெற, லேகா கணவரின் வீட்டில் தங்கி அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் கணவரின் தாயாரும் வசித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்ற காரணத்தால் மாமியார் லேகாவை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட லேகா, நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிலேயே சேலையால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார்.

தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எறும்புகளுடன் வாழ முடியாது : எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண், ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 3 வயது மகள் ஒருவர் உள்ளார்.

சிறுவயது முதல் மனிஷாவுக்கு எறும்புகளைப் பற்றிய அச்சம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக “மிர்மெகோஃபோபியா” என அழைக்கின்றனர்.

இதற்காக மனிஷா தனது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஆலோசனைகள் பெற்று வந்துள்ளார். சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும் பயம் குறையாததால் மனஅழுத்தம் அடைந்திருந்ததாகவும் தெரிகிறது.

கடந்த நவம்பர் 4 ம் தேதி தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டு வேலை செய்யப்போவதாக கூறிய மனிஷா, வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

மாலை வீட்டிற்கு திரும்பிய கணவர் ஸ்ரீகாந்த், கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த துயரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் கிடைத்த கடிதத்தில் “என்னை மன்னித்துவிடு ஸ்ரீ… என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது” என எழுதியிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் : இளம் தம்பதியினர் அதிரடியாக கைது!!

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபடும் போது ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து மு்ன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட ஆண் இன்று (08) மினுவாங்கொட நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார்.

குறித்த பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (08.11.2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய உதயகுமார் சாருஜன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞரும், அவரது நண்பரும் கொழும்பில் இருந்து ஓட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்போது மற்றைய இளைஞர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.