யாழில் காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது!!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனார்.

இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக இளைஞனை அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடலில் தேடிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞனின் சடலம் அப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

அதனை அடுத்து மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்

பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி விபரீத முடிவெடுத்து மரணம்!!

தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெளரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை நந்தினி தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கெளரி சீரியலில் ‘கனகா’, ‘துர்கா’ ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை நந்தினி. இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

நடிகை நந்தினி ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு அவருடைய தாய்மொழி. இவருக்கு தமிழில் ‘கௌரி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையே, பெங்களூருவில் வசித்து வந்த நந்தினி, தனது வீட்டில் நேற்று(29) தற்கொலை செய்துகொண்டார். ‘கௌரி’ சீரியலின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக நந்தினியும் பெங்களூருவில் வசித்து வந்தார்.

அண்மையில் தான் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது. அவரும் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்துள்ளார். இதற்கிடையில் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட நந்தினி பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாராக இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் எழுதப்பட்டிருந்தது.

மேலும், மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவை எடுப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிங் ஓயாவில் காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு : காதலன் வைத்தியசாலையில்!!

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஜா – எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.

குறித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) தனது 18 வயதுடைய காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வென்னப்புவை பிரதேசத்திற்கு வரழைத்து காதலன் கண் முன்பு கிங் ஓயாவில் குதித்துள்ளார்.

மாணவியை காப்பாற்ற முயன்று காதலனும் கிங் ஓயாவில் குதித்துள்ள நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் மாணவி நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காணாம்போன மாணவி நேற்று திங்கட்கிழமை (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியின் குடும்பத்தில் பல தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நத்தார் தினத்தில் நேர்ந்த கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

களுத்துறை, ஹொரண பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய பசிந்து டிலான் பூர்ண மதநாயக்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

நத்தார் தினத்தன்று நண்பர்களுடன் ஹொரண மஹிபாலான பகுதிக்குச் சென்ற டிலான், மதிய உணவிற்குப் பிறகு வெற்றிலை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றுள்ளார்.

தலைக்கவசம் அணியாமல் பயணித்த டிலான், வளைவு ஒன்றில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.

தலையில் பலத்த காயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு ஹொரண ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நான்கு சகோதரர்களில் மூத்தவரான டிலான், சிறுவயதில் துறவறம் பூண்டு பின்னர் குடும்பச் சுமையைத் தாங்குவதற்காக தொழிலுக்கு சென்றுள்ளார்.

உழைக்கும் பணத்தை தம்பிகளின் கல்விக்கும், பெற்றோரின் மருத்துவத்திற்கும் செலவிட்ட ஒரு தியாக உணர்வுள்ள இளைஞனை இழந்துள்ளதாக நண்பர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் உடல் நேற்று பெலவத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை இளம் கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ மரணம்!!

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) காலமானார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ,விளையாடி இருந்தார்.

2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இலங்கை வைத்தியசாலையில் மற்றுமொரு சோகம் : பல் பிடுங்கிய யுவதி மரணம்!!

தென்னிலங்கையில் பல் பிடுங்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவு குறித்த யுவதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரஹேன, பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 20 வயதான தேவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், அந்த இளம் பெண் கடந்த 14 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் பல் பிடுங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்ந்து வாந்தி எடுத்து வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு, மறுநாள் சிகிச்சைக்காக தனியார் நிறுவனத்திற்குச் சென்றார்.

இதன்போது ​​அவரது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், யுவதி உயிரிழந்துள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், ஹொரணை மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன இந்த மரணம் குறித்து ஒரு திறந்த தீர்ப்பை வெளியிட்டு, மரணம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

எதிர்காலத்தில் வாகன சந்தை நிலையான நிலையில் காணப்படும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஓடர் செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது திட்டமிட்டபடி வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டு வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வாகன சந்தையில் சில விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் நிலைமை நிலைபெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே ஆர்டர் செய்யப்படுகின்றன. அவை வழக்கம் போல் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மழைக்காலத்தில் சுமார் 2 வாரங்களாக சிக்கல் நிலைமை காணப்பட்ட நிலையில், அரசாங்கம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டமையினால் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் வாகன விற்பனை குறைந்த மட்டத்தில் இருந்த நிலையில்,புத்தாண்டில் பலர் வாகனங்களை வாங்குவதனால் வாகன விற்பனை அதிகரித்துள்ளன.

மேலும், பலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்தனர். அவர்கள் வரி செலுத்தவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் தவிர்க்கப்படும். “எதிர்காலத்தில் நியாயமான விலையில் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி வந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தையொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த வையாபுரி சந்திரன் (வயது 69) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.

அவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பப்டிருந்தார். மகனை தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 10ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை : நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

நாட்டில் நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 370,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று (30.12.2025) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 333,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பிலுள்ள ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம் : கடுமையாக தாக்கப்பட்ட பெண்!!

கொழும்பில் மொடலிங் துறையில் ஈடுபடும் பெண் ஒருவருக்கு அவரது காதலன் கொலை அச்சுறுத்தல் விடுத்து பெருந்தொகை பணத்தை பறித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மொடலிங் பெண்ணான சாரங்கி சங்கீதா, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், 6 மில்லியன் ரூபாய் பணம் பறித்ததாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இரவு தன்னுடைய காதலனுடன் குறித்த ஹோட்டலுக்கு வந்ததாக அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் அறையில் இருந்தபோது, ​​தனது காதலன் தன்னை மிரட்டி, தனது கையடக்க தொலைபேசி ஊடாக வங்கியிலிருந்து 6 மில்லியன் ரூபாவை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து, ஹோட்டல் அறையில் விட்டுச் சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தமை காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் லலித் சிலோகமவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அடுத்து வரப்போகும் 24 மணி நேரம் : காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நாளை (30) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சுமார் 40 மைல் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ 500 முதல் 1,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 

காதலன் முன்னிலையில் காதலி செய்த அதிர்ச்சி செயல்!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள நைனமடம பாலத்தில் உள்ள ஜின் ஓயாவில் குதித்து பதின்ம வயது யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன யுவதி பொருத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போன யுவதி காதல் உறவில் இருந்த இளைஞனை சம்பவ இடத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், அவரது காதலன் மற்றொரு நண்பருடன் நைனமடம பாலத்திற்கு அருகில் வந்தபோது, ​​அந்த யுவதி ஜின் ஓயாவில் குதித்ததாகவும், அவரைக் காப்பாற்ற அந்த இளைஞனும் ஜின் ஓயாவில் குதித்ததாகவும், தெரியவந்துள்ளது.

எனினும் அந்த இளைஞனை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். யுவதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவனின் நெகிழ்ச்சி செயல்!!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவர் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பெர்விக் நகரில் உள்ள செயிண்ட் கேத்தரின் ஆரம்ப பாடசாலையில் 9 வயதான யெவின் கரியவாசம் கல்வி கற்று வருகிறார்.

அவர் தன் தலைமுடியை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானம் செய்து வருகிறார். அத்துடன் விக்டோரியாவின் புற்றுநோய் கவுன்சிலுக்கு நிதி திரட்டுகிறார்.

நன்கொடை

புற்றுநோய் கவுன்சிலுக்கு எப்படி பயனுள்ள நன்கொடை அளிக்க முடியும் என்பதை தன் பெற்றோர் தனக்கு வழிகாட்டியதாக யெவின் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்காக புற்றுநோய் கவுன்சிலை ஆதரிக்க தனது தலைமுடியை தானம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது இரண்டு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, யெவின் தனது தலைமுடியை வெட்டி தேவைப்படும் சிறுவர்களுக்கு தானம் செய்வதாகவும், அவர்களுக்காக நிதி திரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிக்கவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் இந்த நிதியில் சேரவும் மக்களிடம் அவர் உதவி கோரியுள்ளார்.

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு : துயரத்தில் உறவினர்கள்!!

இலங்கையில் தேனி​ல​வை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிய ஜோடி, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணை கொடுமையால் பெங்களூருவில் இளம்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கணவரும் நாக்பூரில் தன்னுயி​ரை மாய்த்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் மிக விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் தேனிலவுக்காக இலங்கை வந்து தங்கியிருந்தபோது, பெண்ணின் பழைய காதல் விவகாரம் கணவருக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21-ம் திகதி அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்ப கௌரவம் கருதி பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். . தகவலறிந்து பெண்ணின் உறவினர்கள் கணவர் வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினர்.

பெண்ணின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குத் தப்பிச் சென்றார்.

அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை அன்று அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

மகனுடன் தாயாரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் தாய் இது குறித்துக் கூறுகையில், “அவர்கள் செய்த தவற்றை உணர்ந்துவிட்டார்கள். என் மகள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். அவள் இல்லாமல் அவரால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த மரணங்கள் குறித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலப் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சிறிய தகராறு மற்றும் குடும்பப் பிரச்சனை இவ்வளவு பெரிய உயிர் இழப்புகளுக்கு இட்டுச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் கரையொதுங்கிய மர்மப் பொருள் : மக்கள் செல்லத் தடை!!

திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் பாரிய அளவிலான மர்மப் பொருள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் ஒரு பகுதி என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக திருகோணமலை ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் இந்த உலோகப் பாகம், நீரோட்டத்தின் காரணமாக சம்பூர் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

அதனை அவதானித்த மீனவர்கள் உடனடியாகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர். கரை ஒதுங்கியுள்ள பாகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, சம்பூர் பொலிஸ் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் கடற்படை வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் அருகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரொக்கட்டுகள் விண்ணை நோக்கிப் பாயும்போது, புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்வதற்காகப் பல்வேறு நிலைகளில் அதன் பாகங்கள் கழன்று விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டின் ‘ஹீட் ஷீல்ட்’ (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதியே இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

​அதேவேளை முன்னதாக இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுகளின் சிதைவுகள் அவ்வப்போது இலங்கை மற்றும் மாலைத்தீவு கடற்பரப்புகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.