12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி தடையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை!!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்த அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.

ஒரு முடிவு எடுப்பதற்கு முன் குறிப்பிடத்தக்க விவாதங்கள் தேவைப்படும் என அவர் மேலும் கூறினார். “நாங்கள் இன்னும் எதையும் விவாதிக்கவில்லை. இது ஒரு கருத்து மட்டுமே.

இதைச் செய்ய வேண்டுமானால், நீதி அமைச்சு போன்ற பிற அமைச்சுக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன.

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆலோசனை நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசிகளை வைத்திருப்பதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுக்கும் தடையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வரலாற்று வெற்றி : நகரசபை உறுப்பினரான யாழ்ப்பாணத்துப் பெண்!!

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ள நிலையில், இவ்வெற்றியுடன் கியூபெக், நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

‘அன்சாம்பில் மொன்ட்ரியல்’ (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரசாரத்தில் இறங்கினார்.

கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர். தனது வெற்றியையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, “இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம்.

டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன்.

நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல்.

வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடன்பிறந்த சகோதரனை அச்சுறுத்தி முறைகேடான உறவு : கர்ப்பமான சகோதரி!!

சம்மாந்துறை- கல்லரைச்சல் பகுதியில் உடன்பிறந்த சகோதரனை தொடர்ச்சியாக அச்சுறுத்தி தவறான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இருவருக்கும் இடையிலான தவறான உறவு 4 வருடங்களாக இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இந்த சம்பவம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த செயலுக்கு உடன்பிறந்த தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களினால் மிரட்டி இந்த செயலை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக உடன்பிறந்த சகோதரி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 22 வயதான குறித்த சகோதரி வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், இன்று (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் எளிய வழிமுறைகள்!!

சிறுநீரக கற்கள் என்பவை நம் உடலில் சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான தாது மற்றும் உப்புப் படிகங்களாகும். இவை சிறுநீரில் அதிகப்படியான தாதுக்கள் சேர்வதால் அல்லது போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படலாம்.

பொதுவாக சிறு கற்கள் தானாக வெளியேறும், ஆனால் பெரிய கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்களின் பொதுவான அறிகுறிகள், முதுகு, வயிறு அல்லது பக்கவாட்டில் கடுமையான வலி, குமட்டல், வாந்தி மற்றும் சிறுநீரில் இரத்தம் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால், சிறுநீரக கற்கள் கரைய உதவும்.

தடுக்கும் வழிமுறைகள்

பார்லித் தண்ணீர்: இது சிறுநீரக நச்சுகளை நீக்கி, கற்களின் அடர்த்தியைக் குறைத்து அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகிறது.

எலுமிச்சை சாறு: இதில் உள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே உள்ள கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது.

இளநீர்: இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்து, சிறுநீரகப் பாதையில் தேவையற்ற தாதுக்கள் படிவதைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

மாதுளை: மாதுளையில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் இயற்கை அமிலங்கள், கற்கள் உருவாகக் காரணமான தாதுக்கள் படிவதைத் தடுக்கின்றன.

அதுமட்டுமல்லாது தினமும் அதிக தண்ணீர் குடிப்பதும், உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க அத்தியாவசியமாகும்.

விளம்பரத்தில் நடித்ததால் துல்கர் சல்மானுக்கு வந்த சிக்கல்!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரும், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமானவரும், பிரபல நடிகர் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான், விளம்பரம் ஒன்றில் நடித்ததால தற்போது ஒரு எதிர்பாராத சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.

துல்கர் சல்மான், விளம்பரத் தூதராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பிரியாணி அரிசி நிறுவனம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், துல்கர் சல்மான், நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம், சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக, துல்கர் சல்மான் விளம்பரப்படுத்தும் அந்தப் பிரபல பிரியாணி அரிசியை வாங்கியுள்ளது.

அவர்கள் வாங்கிய அரிசியில் சமைக்கப்பட்ட பிரியாணியைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தக் கேட்டரிங் நிறுவனம் சம்பந்தப்பட்ட அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகிய இருவர் மீதும் நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அரிசி நிறுவனத்தின் உரிமையாளருக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சம்பமானது , விளம்பரத் தூதர்களாக இருக்கும் பிரபலங்கள், தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து முறையாகச் சோதித்து உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாது மாபெரும் வசூலை கொடுத்த லோகா திரைப்பட்டத்திலும் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

வவுனியாவில் மாணவர்களின் மாபெரும் ஓவியக் கண்காட்சி!!

வவுனியா கிட்ஸ் கிரியேட்டிவ் ஆட்ஸ் சென்டர் வவுனியாவில் முதல் முறையாக நடாத்தும் மாணவர்களுக்கான மாபெரும் ஓவியக் கண்காட்சி நவம்பர் 08ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை வவுனியா மாநகரசபை உள்ளக அரங்கில் இடம்பெற்றவுள்ளது.

மாணவர்களின் ஓவியத் திறமையை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கும் ஓவியம் வரைவதில் மாணவர்களின் நாட்டத்தை ஊக்குவிப்பதற்கும் இவ் ஓவியக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இவ் ஓவியக் கண்காட்சியில் பெற்றோர் உட்பட அனைவரும் வருகைதந்து மாணவர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு 0773414343

வவுனியாவில் மனைவி கொலை : மாயமான கணவன் ஏறாவூர் பொலிஸில் குழந்தையுடன் சரண்

வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று(04.11.2025) பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது உடைய ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகி இருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பூம்புகார் பகுதியில் மனைவியை கழுத்து வெட்டிக்கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் நேற்று (04.11) மாலை ஏறாவூர் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (04.11.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : முக்கிய சந்தேக நபர் கைது!!

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கடலுக்குள் வீசப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்த்து.

சடலமாக மீட்கப்பட்டவர் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா ஆவார்.

அதேவேளை பெண் கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே யாழ்ப்பாண மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியா செல்வதாக கணவரிடம் பெண் கூறிசென்ற நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மரணத்திலும் பிரியாத தம்பதி : மனைவியின் இறுதிச்சடங்கில் மாரடைப்பு!!

கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி என்ற கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர்.

மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் திரும்பினர். எனினும் கடந்த 31ஆம் திகதி மனைவி உயிரிழந்தார். 2 ஆம் திகதி மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டபோது, ​​கணவரு்ககு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

மனைவியின் பிரிவால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, மதச் சடங்குகளை முடித்துவிட்டு தகனத்திற்கு செல்லாமல் வீடு திரும்பினார்.

அவரது மனைவியின் உடல் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​திடீர் மாரடைப்பு காரணமாக கணவரும் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு நேற்று கேகாலை நடைபெற்றது.

யாழில் கோர விபத்து : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!!

 

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் நேற்றிரவு(03.11.2025) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து கீரிமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேனை கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவத்தில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி கனரக வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!

புத்தளம் – கல்லடி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04.11.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயம்!!

தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை தோட்டப்பகுதியை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் முன் சில்லு திடீரென கழன்று விழுந்ததில், முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலைப் பகுதியில் உள்ள புத்த சிலைக்கு அருகில், நேற்று (03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியின் முன் சில்லில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறே விபத்திற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார்.

வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் : உடனடியாக வைத்தியரை நாடவும்!!

டெங்கு நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் 11 மாவட்டங்களில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பதிவான கனமழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நுளம்புகளின் பெருக்கம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.