இலங்கையில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை 22,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி, கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்றையதினம்(27) 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கரட் தங்கம் பவுண் 335,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று(26) 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்றைய நாளில் 362,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று 6000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் நேற்றையதினம் (26) பிற்பகல் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்டுள்ளது. இருப்பினும் பிற்பகலுக்குப் பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபா அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – காத்தான்குடி வாவியில் நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த முதலை, இன்று (27.12.2025) அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
அத்துடன், மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனை உள்ளிட்ட விலங்குகளையும் இழுத்துச்சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இராட்சத முதலையைப் பிடிப்பதற்கு, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம், காத்தான்குடி நகர சபை உன்ன வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சித்த நிலையிலும் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
சுமார் 18 அடி நீளமுள்ள இந்த முதலையினால் வாவியோரத்தில் வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மூதூரில் அண்மையில் ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
நத்தார் தினமான கடந்த வியாழக்கிழமை (25) குறித்த கட்டிடம் திடீரென உடைந்து விழுந்துள்ளதுடன் ஆறு வகுப்பறைகளை கொண்ட இந்தக் கட்டிடத்தில், வழக்கமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்ததுள்ளனர்.
தப்பிய 200 மாணவர்கள்
இச்சம்பவத்தில் எந்தவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. குறிப்பாக, நத்தார் தினம் என்பதனால் 25ஆம் திகதி பாடசாலை விடுமுறை நாளாக இருந்ததனால் மாணவர்கள் பாடசாலைக்கு வராத நிலையில், அவர்களின் உயிர்கள் தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டதாக பாடசாலை சுற்றுவட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும், பாடசாலையின் மற்றொரு பிரதான கட்டிடம் முழுமையாக உடைந்து விழுந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தற்போது பாடசாலையில் கடுமையான வகுப்பறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
புதிய கல்வியாண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், மேலும் அதிகளவான புதிய மாணவர்கள் இந்த பாடசாலைக்கு வருகை தரவுள்ளதால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, உரிய அதிகாரிகள் இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில், மிக விரைவாக நிலையான மற்றும் தகுந்த தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் மற்றும் , மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த வேனின் சாரதியும் பெண் ஒருவரும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் விபத்தில் சிக்கிய காட்டு யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கவுடுல்ல தேசிய பூங்காவிலிருந்து ஹுருலு சூழலியல் பூங்கா நோக்கி பிரதான வீதியைக் குறுக்கறுத்துச் செல்ல முயன்ற போதே, இந்த யானை வேனுடன் மோதியுள்ளதாக கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 12 வயதுடையது எனவும், அது 5 அடி உயரமான விலங்கு எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹத்தரஸ்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் வைத்திருந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடையைச் சேர்ந்த 65 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஒரு பவுண் எடையுள்ள ஒரு சாதாரண தங்க நெக்லஸின் விலை ரூ. 325,000 லிருந்து சுமார் ரூ. 345,000 ஆகவும், ஒரு பவுண் எடையுள்ள திருமண தங்க நெக்லஸின் விலை ரூ. 380,000 லிருந்து சுமார் ரூ. 400,000 ஆகவும், ஒரு மோதிரத்தின் விலை ரூ. 360,000 லிருந்து சுமார் ரூ. 380,000 ஆகவும் அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு பவுண் எடையுள்ள சராசரி மோதிரத்தின் விலை சுமார் ரூ. 340,000 லிருந்து சுமார் ரூ. 360,000 ஆகவும், திருமண மோதிரத்தின் விலை சுமார் ரூ. 100,000 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
24 கரட் பவுண் ஒன்றின் விலை தற்போது ரூ. 354,000 ஆகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை ரூ. 327,500 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே போர் வெடிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
போர் வெடித்து பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் உலக சந்தையில் தங்க இருப்பு குவிவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 8.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது தனது சகோதருடன் இணைந்து கொத்து ரொட்டி சாட்பிட்டதாகவும், இரவு 10.30 மணியளவில், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக கல்பத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிப்படை சிகிச்சையின் பின்னர் அவர் ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்து ரொட்டியை சாப்பிட்ட சகோதரருக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான பிரேத பரிசோதனையை ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன நடத்த உள்ளார்.
அதன் பின்னரே அவரது மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் தம்மால் மனு கையளிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கு முன்னர் வினோதரன் வினோதா என்னும் பெண்ணினுடைய மரணம் தொடர்பிலும் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு கிடைக்கப்பற்ற முறைப்பாட்டிற்கமைவாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடனும், வைத்தியர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடியிருந்தேன்.
இதனையடுத்து, அந்தபெண்ணின் மரணம் தொடர்பிலே அவரது குடும்பத்தாரினால் என்னிடம் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், வினோதரன் வினோதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளேன்.
இந்த நிலையில், சபாநாயகராலும் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதேவேளை, குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பிலும் தற்போது என்னிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இத்தகைய மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கே பயமாக இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.
மேலும், குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவேன்.
குறிப்பாக இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் மனுவினைக் கையளிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதன் போது பதிலளிக்கையில், “வினோதரன் வினோதாவினுடைய சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் மாகாண சுகாதார பணிமனையினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரால் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தற்போது எம்மால் குறித்த சிறுமியினுடைய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருதி, சிறுநீர் மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மருந்தின் அளவு கூடுதலாகச் செலுத்தப்பட்டதால்தான் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாக பரிசோதனை அறிக்கை வெளிவந்தால், உரிய தரப்பினருக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் தொம்மைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோரும் இந்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணையினைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் குழுந்தையொன்றின் நினைவாக பேருந்து நிழற்குடை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறப்பு விழா நிகழ்வு நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் (25.12.2024) அன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப்பணிமனை அருகில் A9 வீதியில் இந்த விபத்து சம்பவத்திருந்தது.
கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மது போதையில் தவறாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து, மற்றைய மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாயாரும் உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்து சம்பவத்தினை நினைவு கூறுவதாக குறித்த பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. விபத்தின் போது உயிர் தப்பிய மற்றைய சிறுமியினால் பேருந்து நிழற்குடை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் முதன்முறையாக,சுனாமி அலை உருவாகும் தருணத்திலிருந்து அவை கடலில் எவ்வாறு பரவுகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகக் அவதானிக்க முடிந்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் கடலில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சுனாமி அலை விண்வெளியில் இருந்து நேரடியாக நாசாவால் அவதானிக்கப்பட்டுள்ளது.
120 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த சுனாமி அலை, நாசாவின் SWOT (Surface Water and Ocean Topography) செயற்கைக்கோளால் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 29, 2025 அன்று ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையில் உள்ள குரில்-கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சுனாமி அலைகளை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடிந்தது.
‘நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 70 நிமிடங்களுக்குப் பிறகு சுனாமி அலைகள் எழுந்தன.நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக கடற்பரப்பின் சில பகுதிகள் 13 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பு மண்டலம் 402 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கண்டுபிடிப்புகள் நவம்பர் 2025 இல் சீஸ்மிக் ரெக்கார்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக குறித்த அதிகாரசபையின் துணைப் பணிப்பாளர் இந்திக பண்டார கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தற்போது 357,000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. இருப்பினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.
நேற்று (25.12.2025) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,479 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸுக்குப் பிறகு தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா – வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யோ.அபிசாந் என்ற இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த செட்டிகுளம் பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
தொலைபேசி கலந்துரையாடலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து இந்த கொலை நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஷெஹான் விதானபதிரண என்ற இயற்பியல் ஆசிரியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இளைஞனின் கடைக்கு முன்னால் மோட்டார் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞனின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஷெஹானுக்கு சொந்தமான வெள்ளை நிற ஹோண்டா வெசல் கலல்கொட, பன்னிபிட்டி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.
கடை உரிமையாளர் அதை அகற்றுமாறு கேட்டதில் கோபமடைந்த காரின் உரிமையாளரான ஆசிரியர் ஒரு இளைஞரை தூக்கி தரையில் வீசியதை சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதலுக்குள்ளானவர் பிரபல திருமண திட்டமிடுபவரான லசந்தா என்ற இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 2 டொலருக்கு வாங்கிய ‘பவர்போல்’ லொத்தரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் அடித்துள்ளது.
கிருஸ்துமஸ் நாளில் குறித்த நபருக்கு (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 55,728 கோடி ரூபாய்) அதிஸ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல ‘பவர்போல்’ லொத்தரின் நேற்றைய (டிசம்பர் 25) குலுக்கலில், ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
வெறும் 2 டொலர் விலையுள்ள இந்த லொத்தர் சீட்டில், 4, 25, 31, 52, 59 ஆகிய எண்களும், சிவப்பு நிறத்தில் 19 என்ற எண்ணும் என மொத்தம் 6 எண்களும் சரியாகப் பொருந்தியுள்ளன.
அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வென்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவாகும். 2022 ஆம் ஆண்டு வெல்லப்பட்ட 2.04 பில்லியன் டொலர் பரிசே இதுவரை உலக சாதனையுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் வெற்றி பெற்ற நபர் தனது 1.8 பில்லியன் டொலர் பரிசைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
பெரும்பாலான வெற்றியாளர்கள் இந்த முறையையே தேர்வு செய்கின்றனர் (வரி பிடித்தங்கள் போக ஒரு குறிப்பிட்ட தொகை உடனடியாக வழங்கப்படும்).
அடுத்த 29 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையாக பிரித்துப் பெற்றுக் கொள்ளலாம். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பவர்போல் லொத்தர் குலுக்கல் முறை, தற்போது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் 45 மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.
சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் அடங்கலாக 06 பேர் கொண்ட குழு, இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம்.உமாசங்கர் தெரிவித்தார்.
குறித்த குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்.
விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உணவு ஒவ்வாமைக் காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார்.
உரிய முறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமையாலேயே சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ள துடன், சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைய, விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டைத் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 4 ஆம் திகதி முதல் அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்: