தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் கைது!!

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சலியா டி. ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முன்னர் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதில் அவர் பெயர் பெற்றவராக இருந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில், அமைச்சகத்தில் இது தொடர்பான பாராட்டு விழா நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம், கண்டுபிடிப்பாளர்கள் ஆணையகம் மற்றும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களின் AI அடிப்படையிலான ரோபோவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிறுவன ஆதரவை உறுதியளித்தனர்.

அத்துடன் அமைச்சின் செயலாளர் முகமது நவவி, அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கோர விபத்து குறைந்தது 15 பேர் பலி!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடி மாவட்டத்தின் மடோடா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததால் அங்கிருந்த பலர் உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்தவர்கள், அப்பிரதேச மக்களுடன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அத்துடன், பலத்த காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்தில் அவசரகால வெளியேறும் கதவு இல்லாததே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற Cake competition இல் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்!!

2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் 02.11.2025 இன்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

Cake International competition (Cake and bake) இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.

Cakes பிரிவில் 35 பிரிவுகளும், Bake பிரிவில் 23 பிரிவுகளுமாக இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair Ltd என்ற நிறுவனம் Cake Established என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1996ஆம் ஆண்டு Cake International (CI) ஆக சர்வதேச அளவில் விரிவாக்கியது.

பின்னர் அது 2000 ஆண்டளவில் சர்வதேசப் புகழ் வாய்ந்த கேக் போட்டியாக இது மாறியது.

2017இல் இது மேலும் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு “CAKE BIRMINGHAM”, “CAKE LONDON” என கேக் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. 2020, 2021 காலப்பகுதியில் COVID‑19 தொற்று காரணமாக “Virtual Edition” என்ற பெயரில் நடைபெற்றது.

2024 ஆண்டு Cake International competition தொடங்கப்பட்ட 30ஆவது ஆண்டு விழா (30 Years of CI) பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

2025 ஆம் ஆண்டு இந்த Cake International competition நிகழ்வானது 31ஆவது வருடமாக நடப்பதுடன் அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “Cake International and Bake International Awards” என இரு பிரிவுகளாக முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இன்று பல பிரிவுகளாக பல பெயர்களில் ஜப்பான், டுபாய், அமெரிக்கா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் Head of Cake International Shows” என்று இந்த போட்டி அழைக்கப்படுகின்றது. சர்வதேச புகழ்வாய்ந்த Cake International competition நிகழ்வாக இந்நிகழ்வு திகழ்கிறது.

1996 இல் இந்த Cake International competition சர்வதேச மயப்பட்டதனால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் 1997ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கலந்து கொண்ட Mr.R.Climent என்பவர் பல கோல்ட் மெடல்களை பெற்றுக்கொண்டார்.

இவரே பிரித்தானியா தவிர்ந்த வெளி நாடுகளிலிருந்து கலந்து கொண்டு கோல்ட் மெடல் பெற்ற முதலாவது போட்டியாளராவார்.

மதிவதனி மயூரன்

1997 இலிருந்து 2004 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக கோல் பல மெடல்களை வென்று கேக் இன்ரநசனல் பதிவுப் புத்தகத்தில் உலகச் சாதனையாளராக பதியப்பட்டதுடன் அந்தக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த ரொனி பிளேயரிடம் பாராட்டும் நினைவுப் பரிசும் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்து.

சில காலங்கள் பிரித்தானிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த நபராக D.R.Climent இருந்தாரென்பதும். இவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரென்பதும் மேலதிக தகவல்களாகும்.

இவரின் பின் பல சிங்கள, முஸ்லிம் போட்டியாளர்கள் இன்றுவரை பங்குபற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் ஈழத்தமிழர்கள் இதன் கடந்த 30 வருட வரலாற்றில் பங்குபற்றியிருக்கவில்லை.

31ஆவது வருடமாக நடைபெறும் Cake International competition show 2025இல் லண்டனைச் சேர்ந்த மதிவதனி மயூரன் பங்குபற்றி கோல்ட் உட்பட 5 மெடல்களையும் பெற்றுக்கொண்டார்.

31வது வருட Cake International போட்டியில் பங்குபற்றி போட்டியிட்ட முதலாவதாக ஈழத்தமிழர் இவராவார். இவர், கேக் வரலாற்றில் முதலாவது உலக சம்பியனான Mr.R.Climentஇன் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் : நகை வாங்குபவர்கள் அவதானம்!!

எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் அண்மைய நாட்களாக திடீர் அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து வருவதுடன், ஒரு பவுண் தங்கத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாயை விட குறைவடைந்துள்ளது.

மேலும், இவ்வாண்டில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து குறைவடையும் என குறித்த ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தங்க நகைகளை வாங்குபவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, தங்கத்தின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தங்கத்தின் விலைகள் எதிர்வரும் ஆண்டில் அதிகரிக்கும் அபாயம் உள்ளமையினால் மக்கள் தங்கத்தில் தங்களது முதலீகளை மேற்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 லட்சம் மதிப்புள்ள வீட்டை வென்ற 10 மாத குழந்தை : மகிழ்ச்சியில் பெற்றோர்!!

ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கி 10 மாத குழந்தை சொந்த வீடு வாங்கிய சம்பவம் ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். எனினும் இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை.

இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் ராம பிரம்மம் பேனர் வைத்தார்.

ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர். சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.

இந்நிலையில் நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெறும் 500 ரூபாவில் ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

வவுனியா பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விடுதியில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மாணவன் உயிரிழக்கும் போது அவரது உடலில் கணிசமான அளவு மது இருந்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தனது சகோதரனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும், 31 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர் விருந்தில் மூத்த மாணவர்கள் தனது சகோதரனை மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது சகோதரருக்கு வேறு எந்த மருத்துவ பிரச்சினைகளும் இல்லை என்றும், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அர்ச்சுனாவின் காரில் இருக்கும் ஆபத்தான ஆயுதம் : பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா!!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் தனக்கு பாதுகாப்பு வழங்காததால், தனது சொந்த பாதுகாப்பிற்காக வாளை ஏந்தி வருவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.

இது குறித்து சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தான் அறிவித்துள்ளதாக அர்ச்சுனா குறிப்பிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், இதற்கு முன்னர் இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு கோரிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது சொந்தப் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியைக் கோரிய போதிலும், அதற்கும் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஸ்ப்ரே துப்பாக்கியைக் கோரிய போதிலும், அதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தனது சொந்த பாதுகாப்பிற்காக ஒரு வாளை தன்னுடன் வைத்திருப்பதாகவும், அதை எப்போதும் தனது காரில் வைத்திருப்பதாகவும்,

இது குறித்து சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அர்ச்சுனா தெரிவித்ததாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக பலி!!

இந்தியா ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்தத் தடை!!

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் : சர்வதேசத்தில் திடீர் போர்ப்பதற்றம்!!

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த பொது ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் இந்த கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, வெனிசுலாவை தாக்குவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அறிவித்துள்ள போதிலும் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் வெனிசுலா கடற்கரைக்கு அருகே ஒரு பெரிய அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.

இது அமெரிக்கா வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்களை மேற்கொள்ள தயாராக இருப்பதை காட்டுகின்றது.

அதேநேரம், வெனிசுலாவின் அரச தரப்பில் இருந்தும் தாங்கள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை போர் பதற்றத்தை அதிகரிப்பதை காட்டுவசதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் அணிந்தால் 50000 அபராதம் விதிக்கும் அதிசய கிராமம்!!

வெளிநாட்டவரைவிட தங்கத்திற்கு இந்தியர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை பெற்றோர்கள் ஆரம்பம் முதலே சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

இந்நிலையில், உத்தரகாண்டில் சக்ராதா என்கிற கிராமத்தில் பெண்கள் அதிகம் தங்கம் அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு உள்ளது.

இந்த கிராமத்தில் நடந்த உள்ளூர் பஞ்சாயத்தில்தான் வித்தியாசமான இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்க்கதான், இந்த உத்தரவை கிராமத்தின் பெரியவர்கள் வழங்கி இருக்கின்றனர்.

இதன்படி, பெண்கள் வெளியில் வரும் போது தாலி, மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தவிர்த்த வேறு நகைகள் எதையாவது வெளியில் வரும் போது அணிந்தால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரகாண்ட் கிராமத்தில், கடந்த 15-20 வருடங்களாக அதிக நகை போட்டுக்கொள்வது புது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால், நகை இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இவ்வழக்கம் சமூக அழுத்தத்தை கொடுத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அதிக தங்க நகைகளை அணிந்தால் அபராதம் என்கிற உத்தரவு, கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

விடிந்தால் திருமணம் : புதுமணப்பெண் மர்ம மரணம் : கதறும் பெற்றோர்!!

விடிஞ்சா கல்யாணம் சொந்த பந்தம், உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்து, அவர்களும் மண்டபத்தில் திரண்டிருந்த நிலையில், புதுமணப்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சித்தூரை சேர்ந்த பாண்டுரங்கன் – வனிதா தம்பதியின் மகள் சந்தியா (21), பி.காம். படிப்பு முடித்தவர். இவர்கள் தற்போது திருவள்ளூர் அருகே மணவாளநகரில் வசித்து வந்தனர்.

சந்தியாவின் திருமணம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த மணி என்ற இளைஞருடன் பெரியோர்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) பலிஜகண்டிகை கிராமத்தில் நடைபெறவிருந்தது. இதற்காக மணமகள் குடும்பம் இரண்டு நாட்களுக்கு முன் மணமகன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

நேற்று காலை சந்தியா குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆன பின்னும் அவர் வெளியே வராததால், உறவினர்கள் கவலைப்பட்டனர். பலமுறை சத்தம் போட்டும் பதில் வராத நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது, சந்தியா மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.

உடனடியாக அவரை அத்திமாஞ்சேரி பேட்டை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் மரணம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பொதட்டூர்பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்குப் பதிவு செய்து,

சந்தியா விஷம் குடித்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் துயர அலைவையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்காக தாயைக் கொலை செய்த பள்ளி மாணவி : காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது அம்பலம்!!

காதலுக்காக பள்ளி மாணவி தன்னுடைய தாயை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூரின் சுப்பிரமண்யபுரா பகுதியில் நடந்துள்ளது. சுப்பிரமண்யபுரா பகுதியில் வசித்து வந்த நேத்ராவதி என்ற பெண், கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடுமையான உழைப்பில் மகளை வளர்த்த நேத்ராவதி, தன் மகளின் நலனுக்காக அனைத்தையும் தாங்கி வந்தார். ஆனால், மகள் அடிக்கடி தாயுடன் வாக்குவாதம் செய்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டது. இச்சிறுவன் அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கியதும், நேத்ராவதி சந்தேகப்பட்டார்.

பின்னர், இருவரும் காதலிப்பது தெரியவந்ததால் தாய் கடுமையாக கண்டித்தார். “பள்ளியில் கவனம் செலுத்து; இவன் இங்கே வரக்கூடாது” என எச்சரித்தார்.

இதனால் கோபமடைந்த மாணவி, தாயை அகற்றிவிட்டால் தடை இருக்காது என்று எண்ணியுள்ளார். கடந்த அக்டோபர் 25ம் தேதி இரவு தாய் மது அருந்தி தூங்குவார் என்று காதலனுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி சிறுவனும், அவனது நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது நேத்ராவதி எழுந்து அவர்களைப் பார்த்து கடிந்துக்கொண்டார். சிறுவனின் செல்போனை பிடித்து போலீசில் புகார் அளிப்பேன் என கூறியதும், அவர்கள் மூவரும் சேர்ந்து நேத்ராவதியின் கழுத்தில் துணியை சுற்றி நெரித்துள்ளனர்.

நேத்ராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தற்கொலை போல காட்டுவதற்காக அவரது உடலை புடவையால் சுவரில் தொங்க விட்டனர்.

சம்பவத்திற்குப் பிறகு மாணவி காணாமல் போனதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்தனர். ஐந்து நாட்கள் கழித்து மாணவி வீடு திரும்பிய போது, போலீசார் விசாரித்ததில் கொலை சம்பவத்தின் முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து 13 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தாயை கொலை செய்து, பெற்ற மகளே தற்கொலை போல நாடகமாடிய சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொதிக்கும் மீன் குழம்பை மனைவியின் முகத்தில் ஊற்றிய கணவன்!!

கேரள மாநிலம் கொள்ளத்தில், கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை மனைவியின் முகத்தில் கணவன் ஊற்றிய நிலையில், இது குறித்த காரணம் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளம் மாவட்டம் சடையமங்கலம் அருகே வைகல் பகுதியைச் சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரஜிலா கஃபூர் (36). மனைவி. நேற்று காலை வீட்டில் இருந்த சஜீர், தனது மனைவியிடம் “முடியைத் தளர்த்திவிட்டு, தனது முன்னால் உட்காரச்சொல்லி,

மாந்திரீகர் ஒருவர் கொடுத்த ஆபரணத்தை அணிந்துக் கொள்ள வேண்டும் என்றும், சாம்பலை முகத்தில் பூச வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இதற்கு ரஜிலா மறுப்பு தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக தனது கணவர் மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தனது பேச்சுக்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சஜீர், சமையலறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை சட்டியுடன் தூக்கி வந்து ரஜிலாவின் முகத்தில் ஊற்றி தாக்கியுள்ளார்.

ரஜிலாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “சஜீர் பலமுறை தனது மனைவியை “பிசாசு பிடித்திருக்கிறாள்” என்ற நம்பிக்கையில் தாக்கி வந்ததாகவும், இது குறித்து ஏற்கெனவே ரஜிலா போலீசில் புகார் அளித்ததாகவும் கூறினர்.

அப்போது சஜீரை அழைத்து எச்சரித்த போதிலும், பின்னர் அவர் மாந்திரீகர்களை அணுகி, மனைவிக்கு சூனியம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 118(1) (அபாயகரமான பொருளை பயன்படுத்தி காயப்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சஜீரை பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.