லண்டன் மாணவியின் திருமணம் “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க..” : கண்ணீர்விட்டு கதறிய தந்தை!!

லண்டனில் படித்து வந்த இளம்பெண்ணை, நெல்லையைச் சேர்ந்த அவரது காதலன் கோவைக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று நெல்லையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் காதலனின் தந்தை, சித்தப்பா ஆகிய 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் இசக்கி பாண்டி. இவரும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணின் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணின் குடும்பத்தினர், அவரை மேல்படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும், இசக்கி பாண்டியும் அந்தப் பெண்ணும் செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இதனிடையே, பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இதை அடுத்து, காதலனின் திட்டப்படி அந்தப் பெண் லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, அங்கிருந்து கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார்.

அங்கு காத்திருந்த இசக்கி பாண்டியின் உறவினர்கள், காதல் ஜோடியை காரில் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது, பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது.

பெண்ணின் உறவினர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததால், கோவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் காதல் ஜோடியை அவர்களது சொந்த ஊரான நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இன்று நெல்லையில் அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக இசக்கி பாண்டி தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் வீட்டாருக்கும், இசக்கி பாண்டி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தகராறு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த இசக்கி பாண்டியின் தந்தை செல்வம் மற்றும் அவரது சித்தப்பா மணிகண்டன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதும் இசக்கி பாண்டியன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வந்த நிலையில் 18 வயது முடிந்த மூன்று நாட்களே ஆன நிலையில் அவரை இந்தியா வரவழைத்து திருமணம் செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் என அந்த பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி : தமிழர் பகுதியில் சம்பவம்!!

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் அதிரடியாக கைதான பாண் வியாபாரி : அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர்கள் சுடப்பட்டு உயிரிழப்பு!!

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர் இருவர், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், நேற்றையதினம் (30.10.2025) பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இதன்போது, பெலாரஸ் இராணுவத்தினரால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தவறான முடிவெடுத்த நிலையில் யுவதி ஒருவரின் சடலம் நேற்று (31.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை!!

காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவின் பாத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் பெண்ணை கல்லால் தாக்கியுள்ளார்.

அதனால் பலத்த காயமடைந்த பெண், பலபிட்டிய மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பாத்தேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையின் பின்னர் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : விலைகளில் மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில்,

இன்று (01.11.2025) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி,

அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 294,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

பொலித்தீன் பைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலில்!!

வர்த்தக நிலையங்களில் இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 01ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

பொலித்தீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையும் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான தகவல்!!

இந்தியப் பெருங்கடலில் இன்று(01.10.2025) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

எனினும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்பிராந்தியங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முழுமையாக உறுதி செய்துள்ளது.

மேலும் தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும். எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை.

இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

17 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள் : தமிழர் பகுதியில் சோகம்!!

அம்பாறை – வீரகொட பகுதியில் நேற்று (30.10.2025) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உஹன, திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

பலாங்கொட, பின்னவல பொலிஸ் பிரிவின் வளவே அத்தர பகுதியில் சுரங்கத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய கே.ஜி. நதீக சாரதா குணதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை பலாங்கொட ஆதார மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக தெரிவித்தார்.

இளைஞனின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை சந்தித்து விட்டு திரும்பிய இளைஞன் பரிதாபமாக பலி!!

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுவில, கண்டிரிப்புவ பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சிக்கடை, மனவேரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத செவன் எடம்பேல என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இறந்த இளைஞர் காதல் உறவில் இருந்ததாகவும், தனது காதலியைச் சந்தித்துவிட்டு திரும்பி சென்ற போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயிலில் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞன், 119 சுவசேரிய அம்புலன்ஸில் லுனுவில பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி நிரோஷன் குணசேகர நடத்த உள்ளார்.

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக மாறிய இலங்கை!!

இலங்கை , தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.

Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும்.

அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2024’ சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது.

இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று வியாழக்கிழமை (30.10.2025) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் – பேரூந்து மோதி விபத்து!!

அநுராதபுரம் – கற்குளம் வீதியில் 120ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (30.10.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் ஒருவர் பலி : கார் சாரதி கைது!!

கம்பஹாவில் உடுகம்பொல – கொட்டுகொட வீதியில் கெஹெல்பத்தர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் இருந்த பாதசாரி மோதி பின்னர் அருகிலிருந்த கடை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காரின் சாரதியான இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்தின் போது காரில் இருந்த சாரதியின் தாயும் சாகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.