கணவர் ஒருவர் முதலையுடன் சண்டையிட்டு மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய் சாலையில் பாத்திரங்களைக் கழுவும்போது எதிர்பாராத விதமாக முதலையால் பிடிக்கப்பட்டுள்ளார்.
அந்த நேரத்தில் உடனடியாகச் செயல்பட்ட அவரது கணவர், தனது உயிருக்கு ஆபத்தை மீறி முதலைகளுடன் போராடி தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனைவியை உயிரை காப்பாற்ற தனது உயிரை துச்சமாக எண்ணி செயற்பட்ட குறித்த நபரின் இந்த துணிச்சலான செயல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடல்நீரேரியில் நேற்று (22.12.2025) மீன் முடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போயுள்ளார்.
அதனை அவதானித்தவர்கள் கடல்நீரேரியில் இறங்கி இளைஞனை தேடிய நிலையில், நீண்ட போராட்டத்தின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
புனரமைப்புப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தற்போது முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ‘யாழ் தேவி’ தொடருந்து சேவை நாளை (புதன்கிழமை) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறுமார்க்கமாக, காங்கேசன்துறையிலிருந்து காலை 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்ய கோரி பொதுமக்களால் நேற்று (22.12.2025) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், கிரவல் அகழ்வால் எமது கிராமமே குன்றும் குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிரவல் அகழ்விற்கான அனுமதியை வழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அடக்கு முறை
அத்துடன் சுற்றுச் சூழலையும் வளங்களையும் அழித்து அதற்கு எதிராக குரல் எழுப்பும் மக்களின் மீது அடக்கு முறைகளை பிரயோகிக்க வேண்டாம்.
கிரவல் அகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யாதே. எமது கிராமத்தை காப்பாற்ற அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”இயற்கையை அழிக்காதீர்கள், சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு தடை விதியுங்கள், எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்கு மாத்திரமா’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
உரிய நடவடிக்கை
போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் போராட்டக்காரரின் கோரிக்கை தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களது மனுவையும் பெற்றுக் கொண்டார்.
அத்துடன் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் உறுதியளித்திருந்தார்.
புத்தளம், மாரவில பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவின் டங்கன்னாவ பகுதியில் நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் டங்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராகும்.
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் தொடர்பாக 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெதர்தலாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதான தம்பதியிடம் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியிடமிருந்து 500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் திருடிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுராதபுரம் மற்றும் திருகோணமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு 18 நெதர்லாந்து நாட்டவர்கள் பொலநறுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
ஹோட்டலில் தங்கியிருந்த 75 முதல் 85 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு தம்பதியினர், நேற்று முன்தினம் காலை தங்கள் சுற்றுலா வழிகாட்டிக்கு பணம் செலுத்துவதற்காக தங்கள் கைப்பைகளைத் திறந்த போது,
500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் காணாமல் போனதாக கண்டுபிடித்ததாக பொலன்னறுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
தங்கள் கைப்பைகளில் இருந்த டொலர்கள் மற்றும் யூரோக்கள் உள்ளிட்ட பணம் காணாமல் போனது தொடர்பாக தங்களுடன் வந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய சக வெளிநாட்டவர்களுடன் மேற்கொண்ட விசாரணையின் போது பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலன்னறுவை மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க மற்றும் பொலநறுவை பொலிஸ் கண்காணிப்பாளர் பிரகதி அபேசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருட்டு குறித்து முறைப்பாடு செய்தி வெளிநாட்டு தம்பதி முறைப்பாட்டின் நகலுடன் பொலன்னறுவை விட்டு வெளியேறியதாக விசாரணையை நடத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவை அதிகரிப்பதால் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளியும் இந்த ஏற்றத்தில் இணைந்து எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாட் கோல்ட் XAU ஒரு அவுன்ஸ் 4,391.92 டொலர் ஆக 1.2வீதம் உயர்ந்து 4,391.92 டொலர் ஆகவும், ஸ்பாட் சில்வர் XAG 2.7வீதமாக உயர்ந்து 69.23டொலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
1979 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய வருடாந்த இலாபத்தை இது அடையத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை, கடந்த ஆண்டை விட இன்றுவரை 138வீதமாக உயர்ந்துள்ளது. வலுவான முதலீட்டு வரவுகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கத்தை விட வெள்ளி மிகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலும் எதிர்பாராத அளவு
இதேவேளை, இலங்கையிலும் இன்றையதினம்(23.12.2025) தங்கவிலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025.12.09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையிலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையிலும் விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சகம் கூறுகிறது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை 2025 டிசம்பர் 22 திங்கள் கிழமையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையும் முடிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
2025.12.27 முதல் 2026.01.04 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை 11.09.2025 திகதியிட்ட பாடசாலை தவணை அட்டவணை – 2026 சுற்றறிக்கை எண். 30/2025 இன் படி செயல்படும் என அறிவித்துள்ளது.
மேலும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள பாடசாலை பரீட்சைகளின் திகதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சகம் மேலும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23.12.2025) உத்தரவிட்டுள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைக்காக இன்று முன்னிலையாக தவறியமை காரணமாகவே கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இன்று (23) உத்தரவிட்டடுள்ளார்.
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.
பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காலநிலை அவதானிப்பு அறிக்கையில்,
வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்குத் திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவிற்கு அருகாக நிலை கொண்டுள்ளது.
இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்குக் கிடைத்து வரும் மழை இன்றிரவு முதல் படிப்படியாகக் குறைவடையும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மழை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால், இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும். இதேவேளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்கத் தொடங்கும்.
இந்த பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மீண்டும் எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது. விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில்கொண்டு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என்றுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக, கம்பளை-துனுகேஉல்ல பிரதான வீதியில் உள்ள இஹலகம மயானத்திலுள்ள சடலங்களின் எச்சங்கள் வெளி வந்துள்ளமையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் சிதைவுகள் சவப்பெட்டிகளுடன் பல நாட்களாக வீதியில் கிடப்பதால் அந்தப் பகுதி அச்சம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.
இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அதனை சரிசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுடன் இந்த மயானம் மண்சரிவால் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வீதி முடங்கியுள்ள காரணமாக துனுகேஉல்ல பகுதியில் சுமார் 2,000 பேர் வரையில் அந்த கிராமத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி குமாரி என்ற பெண் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். மயானத்தில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் உடல்கள் மண் சரிவில் இருந்து வெளியே வந்து வீதியில் கிடக்கின்றன.
கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. இது குறித்து உடபலத்த பிரதேச செயலாளரிடம் தெரிவித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இப்போது நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். அழுகி, சேற்றில் கலந்த இந்த உடல்கள் ஆபத்தான நோய்களைப் பரப்பும் என அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இலங்கையில் பல்வேறு நபர்கள் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி செய்ததாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்வதற்கு முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக மோசடிகள் நடப்பது குறித்து கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பண்டிகைக் காலத்தில் ஒன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பே பிரதேசத்தில் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியை கடத்த உதவிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மாதம்பே கலஹிடியாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறிய லொறியும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமி 10 ஆம் வகுப்பு மாணவி எனவும் 18 ஆம் திகதி காலை பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனாலும் குறித்த மாணவி, பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதை அவரது தாயார் அறிந்துள்ளார்.
அந்த சிறுமி மாதம்பே, பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த இளைஞனையும் தற்போது காணவில்லை எனவும் காணாமல் போன சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (2025.12.21) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ள நிலையில் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் அதிவேகமாக பயணித்த இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகினர். இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் ஃபரா ரூமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இம்மாதம் ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுகாதாரத் துறை சார்ந்த குழுக்களில் தீவிரமாகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஃபரா ரூமி (Farah Rumy), சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவர் எனப்படுவது சுவிட்சர்லாந்தில் உயரிய பதவியாகும்.
இவர் 1991 டிசம்பர் 28 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார். தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தார்.
2021 ஆம் ஆண்டு சோலோத்தர்ன் (Solothurn) மாகாண சபைக்கு முதல் முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது நாடாளுமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராக மிக உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஃபரா ரூமி எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வழி இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில், புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட ஒரு பெண் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய உச்சத்தை அடைந்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.