பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை : தலைமறைவான சந்தேகநபர் அதிரடியாக கைது!!

புதிய இணைப்பு : டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர உறுதிபடுத்தியுள்ளார்.

குறித்த நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு : டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையொட்டி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர் விசாரணைக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் மரணம்!!

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடுகடத்தப்பட்ட நபர் தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி கோரிக்கையை விடுத்திருந்தார். 2010 ஆகஸ்ட் 13 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை mv sun sea கப்பல் சென்றடைந்தது.

mv sun sea கப்பலில் சென்ற 492 இலங்கை தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோரி இருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு போரின் காரணமாக இலங்கை அரசாங்கத்தால் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 தமிழ் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, எம்.வி. சன் சீ என்ற கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் எஸ்கிமால்ட் துறைமுகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

டிக்கோயா தம்பதி கொலை : பொதுமக்களின் உதவி கோரும் பொலிசார்!!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்து நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதன்போது சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.

18 பவுண் தங்க ஆபரணம் கொள்ளை
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி, பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்துள்ளார்.

பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொலையைச் செய்துவிட்டு மாலை 5:30 மணியளவிலேயே கடையை விட்டு வெளியேறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலையைச் செய்த சந்தேகநபரை விரைவில் கைது செய்வதற்காக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர: 071-8591114

ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர்: 071-8591117

ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி: 071-8593163

பாடசாலை மாணவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மூளைக்காய்ச்சல் நோய்கள் பரவி வருவதாகவும், இதுகுறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் வைத்திய நிபுணர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார்.

தெனியாயவில் முதலில் பதிவான இந்த மூளைக்காய்ச்சல் பரவல், தற்போது பல பகுதிகளில் இருந்தும் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தியதலாவவில் 28 நோயாளிகளும், வெலிமடையில் 13 நோயாளிகளும், கண்டியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகவும் ஊடகங்களிடம் அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு வைரஸ் மூளைக்காய்ச்சல் பரவல் என்றும், இது தொடர்பாக நோய்ப்பரவலியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் முறையான விசாரணையையும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய் அதிகமாகப் பரவியுள்ளதாகவும், இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும் என்றும் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், முறையான சிகிச்சையின் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்றும், சிகிச்சையின் மூலம் இந்த நோய் 5-7 நாட்களுக்குள் குணமாகிவிடும். இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம். இந்த நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழையும், வெசாக் பண்டிகைக்காலத்தில் நடைபெறும் தானசாலைகளையும் கருத்தில் கொண்டு, அனைவரும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் இந்த நோய் பரவுவதால், கவனமாக இருக்குமாறும், முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கையில் தாயை தேடும் மகள்!!

பிரித்தானிய தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி ஒருவர், தற்போது தனது பெற்ற தாயை தேடி தனது கணவருடன் இலங்கை வர தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

36 வருடங்களுக்கு முன்னர் அவர் பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இலங்கையில் தனது தாயை தேடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அவரது பிறப்புச் சான்றிதழில் கேமா என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1990ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி களுபோவிலை பொது மருத்துவமனையில் பிறந்துள்ளார். அவரது தாயாரின் பெயர் விஜிதா கல்யாணி ஏகநாயக்க எனப் பதியப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவத்திற்காக விஜிதா என்ற தாயார் தெஹிவளை, ஹில் ஸ்ட்ரீட், இலக்கம் 15/3, சுதர்சனாராம மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரவசத்தின் பின்னர் 38 நாட்களான இந்த பெண் குழந்தை, சத்தியக்கடதாசி மற்றும் நீதிமன்ற உத்தரவு மூலம் பிரித்தானியாவை சேர்ந்த பிரீமன் பஸ்க் மற்றும் சூசன் ஆர்.பிரீமன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது இளம் வயதில் இருக்கும் அவர், தனது பிரித்தானிய கணவருடன் இலங்கை வர எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடத்தப்பட்டிருந்த இலங்கையர் விடுவிப்பு!!

இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்த சமீரா மஹ்பூப்தீன் நேற்று முன்தினம் (21.05.2026) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி பௌசர் பாரூக் உறுதிப்படுத்தியுள்ளார்.

பலஸ்தீனத்தின் காசா மக்கள் எதிர்நோக்கும் பட்டினிச் சாவு முற்றுகை தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச தன்னார்வலர்கள் சிலர் கப்பல் மூலமாக காசா பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது இலங்கையரான சமீராவும் ஒரு துணை மருத்துவப் பணியாளராக அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தார்.

அவர்கள் பயணித்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய ராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கப்பலில் பயணித்த அனைவரும் முகம் குப்புற கவிழ்க்கப்பட்ட நிலையில் விலங்கிடப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்வதேசத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தன.

இஸ்ரேலிய இராணுவத்தினரிடம் சிறைப்பட்டுள்ள சமீராவை விடுவிப்பதில் தலையிடுமாறு உள்நாட்டில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் சமீரா மஹ்பூப்தீன் இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் அவர் துருக்கியில் இருந்து நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பர்கள் ஒழுங்கு செய்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பொலிஸ் காவலில் இருந்த இலங்கை இளைஞன் மர்ம மரணம்!!

ஜப்பானின் Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tsuchiura பொலிஸ் நிலைய தகவலுக்கமைய, இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

தடுப்புக் காவல் மையத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞன் குறட்டை விடுவதை நிறுத்தியதை கவனித்துள்ளார்.

உடனடியாக அவரது அறைக்குள் சென்று சோதித்தபோது, அந்த இளைஞர் எவ்வித அசைவுமின்றியும், சுவாசம் இல்லாமலும் இருப்பதைக் பொலிஸ் அதிகாரி கண்டறிந்துள்ளார்.

அவரது சுவாசப்பாதையைச் சீரமைக்க முயற்சித்த பின்னர், பொலிஸ் அதிகாரி உடனடியாக அம்பிலன்ஸை அழைத்துள்ளார்.

அந்த இளைஞன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவரது உடலில் வெளியில் தெரியக்கூடிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் உயிரை மாய்க்க வாய்ப்பில்லை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற பிரேத பரிசோதனை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

நாங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டோம் என்று நம்புகிறோம் என அவசர மருத்துவச் சூழலை கையாண்ட விதம் குறித்து Tsuchiura பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளிக்கமாட்டேன் : ஜனாதிபதி உறுதி!!

2022ஆம் ஆண்டைப் போன்ற ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

நேற்று காலை (22.05.2026) நிந்தவூர் கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 2022ஆம் ஆண்டைப் போன்ற ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும் அத்தகைய ஒரு நிலைமை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது.

மத்திய கிழக்கில் போர் மூண்டாலும், அது ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கும் வலிமை அரசாங்கத்திற்கு உள்ளது.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது, இனவாதத்தை அனுமதிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளைத் தண்டிப்பது, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் ஒரு நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகைகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவையே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு வழங்கப்பட்ட ஆணையாகும்.

அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகை
இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே கணிசமான அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளது.

அனைவருக்கும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டை உருவாக்கும் பொறுப்பு எனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், அது வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் நிறைவேற்றப்படாது.

இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், ஓய்வூதியங்கள் உட்பட அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகைகளை ஒழித்து, அரசியல்வாதிகளை மக்களுக்காக உழைக்கும் நபர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு : இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!!

இலங்கையில் அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலை உயர்வு, மின்சாரம், நீர் கட்டணங்கள் உயர்வு மற்றும் ஏற்றுமதிக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்யும் செலவு கணிசமான அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு இணையாக பணவீக்கமும் கணிசமான அளவில் உயரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு டொலர் மூலமே இறக்குமதி செய்யப்படுகின்றது.

இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் வேகமாக உயரும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வானது போக்குவரத்து கட்டணங்கள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் மற்றும் பொதுச் சேவைகளின் விலை உயர்வுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலைமையின் கீழ், சாதாரண மக்களின் மாதாந்திரச் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, முன்பை விட அதிகளவிலான ரூபாய் தொகையை செலவிட வேண்டியிருக்கும்.

டொலரின் மதிப்பு அதிகரிப்பால் சில ஏற்றுமதியாளர்கள் பயனடைந்தாலும், உற்பத்திக்குத் தேவையான இறக்குமதி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அவர்களின் இலாப வரம்பு மற்றும் உற்பத்திப் போட்டித்தன்மை கடுமையான சவாலுக்கு உள்ளாகலாம் என மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 345 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது.

இதேவேளை, டொலரின் மதிப்பு உயர்வு என்பது தேவை அதிகரிப்பால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சூழ்நிலை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவதானத்துடன் செயற்படவும் : அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!!

களுகங்கையின் ஆற்றுப்படுகையில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், களுகங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : சீரற்ற வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சியை கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான மழைவீழ்ச்சி களனி கங்கை ஆற்றுப் படுகையிலேயே பதிவாகியுள்ளது.

அத்துடன் களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை சூழவுள்ள இடங்களில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆறுகளின் உயர்வடைந்த நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அதில் பெரியளவிலான அதிகரிப்பு எதுவும் காட்டவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களனி கங்கையின் நாகலகம வீதிப் பகுதியின் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், அதில் மேலும் அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எல்லகாவ மற்றும் மில்லகந்த ஆகிய இடங்களின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக அறிவிக்கப்பட்ட இலங்கை ரூபா!!

இந்த மாதம் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி வர்த்தக இணையத்தளமான ப்ளூம்பெர்க் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் செயல்திறன் தொடர்பில் ப்ளூம்பெர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சில நாட்களாக டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றது. இனிவரும் நாட்களிலும் கூட ரூபாவின் பெறுமதி சரிவைச் சந்திக்கக் கூடும்.

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால், இந்த பெறுமதி வீழ்ச்சியை இலங்கை ரூபா எதிர்கொண்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவனுடன் வாக்குவாதம் : இளம் பெண் எடுத்த முடிவு!!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் பகுதியில் நேற்று முன் தினம் 22 வயது இளம் குடும்ப பெண் உயிரிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளை தமிழர் பகுதிகளின் அண்மைகாலமாக் இளையோர் உயிரிழப்புக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை விவகாரம் : நீதிமன்றில் அம்பலமான தகவல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் நேற்று(20.05.2026) நடைபெற்றது.

மரண விசாரணையின் போது விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர்.

இதன்போது சாட்சியமளித்த பொலிஸார், உயிரிழந்த விரிவுரையாளரின் இறப்புக்கு காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

இருவரது மரண விசாரணைகளுக்கு பின்னர் வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 3ஆம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை அன்றையதினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகினர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினத்திற்கான (21.05.2026) அதிகாரப்பூர்வ நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 354.03 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 342.63 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், இலங்கை ரூபாய் மேலும் பலவீனமடைந்து வருவதாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.

 

ஆசியாவின் மிக மோசமான பெறுமதி வீழ்ச்சி : இலங்கை ரூபா குறித்து சர்வதேச ஊடகம் செய்தி!!

ஆசிய நாணயங்களில் மிக அண்மைக்காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான ப்ளூம்பெர்க் செய்திச்சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் மிகப் பிரபலமான செய்தி இணையத்தளமான ப்ளூம்பெர்க் செய்திச் சேவையானது, இலங்கை ரூபாவின் வீழ்ச்சி குறித்து தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டொலருக்கு எதிராக மிக வேகமான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இலங்கை ரூபாவானது, இம்மாதத்தின் மிக மேசாமான நாணயப் பெறுமதி வீழ்ச்சியைக் கொண்ட நாணய அலகாக பெயரிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி எதிர்வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்னும் வீழ்ச்சியடையும் சாத்தியம் இருப்பதாகவும் குறித்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 

கோர விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குராகொட பகுதியை சேர்ந்த 62வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சிரிய ரக பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து வந்த பட்டா ரக வாகனமும் திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.