யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.
குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 17 ஆம் திகதி அன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது.
இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,000 ரூபாவாக ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்த சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.
இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.
இந்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும், தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்க முன்மொழிந்த நிலையில், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.
எனவே, பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும், என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்களுக்கு எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என்று நம்புவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் ஆதரவுடன் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதன்படி, பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வசதியாக தேவையான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த 8,547 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான ஆட்சேர்ப்பு தொடர்பில் ஆராயும் குழு கடந்த 2 ஆம் திகதியன்று சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் கீழ் 5,198 வெற்றிடங்கள் (காவல்துறை ஆட்சேர்ப்புக்கள் உட்பட) நிரப்பப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு (1,261), மேல் மாகாண சபை (414), இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு (355), மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (310) ஆகியவற்றிலும் கணிசமான எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறவுள்ளன.
இந்த ஆட்சேர்ப்புகள் அரச சேவையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், மதுரையில் இருந்து துபாய் கிளம்பி சென்றுக் கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 173 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு சில மணி நேரத்தில், நடுவானில் பறந்துக் கொட்னிருந்த போதே இயந்திர கோளாறு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
உடனே விமானி மதுரை மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தார். அப்போது விமானம் சென்னை வான்வெளியில் இருந்ததால், சென்னையில் அவசரமாக தரையிறங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி, விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு பொறியாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
இயந்திர கோளாறு சீர்செய்வதற்காக நீண்ட நேரம் பிடித்ததால், பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு,
அதே விமானம் இரவு நேரத்தில் 173 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற இரு வாலிபர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.
ராணிப்பேட்டை பனப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த அருண் (24) ஆகியோர் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.
விடுமுறை நாளாக இருந்ததால், இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு மதியம் குளிக்கச் சென்ற மணிகண்டனும் அருணும் திடீரென அதிகரித்த நீர்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை அவர்களை காண முடியவில்லை.
நேற்று காலை மீண்டும் தொடங்கிய தேடுதல் பணியில், சம்பவ இடத்திலிருந்து சில தூரத்தில் மணிகண்டனும் அருணும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் நவீன் கண்ணா (42). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றிவந்தார்.
இவரது மனைவி நிவேதிதா(30). இவர் பெரம்பூர் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் லவின்கண்ணன் (7).
நேற்று நவீன்குமார் தனது தாய் புவனேஸ்வரியிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றவுடன் சிறிது நேரம் கழித்து புதிய எண்ணில் இருந்து தாய்க்கு நவீன்கண்ணா பேசும்போது, ‘’மனைவி, மகன் இருவரும் வீட்டில் நீண்ட நேரம் தூங்குவார்கள்.
எனவே, அவர்களை இரவு 11 மணி வரை எந்த தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்று தெரிவித்துவிட்டு உடனடியாக போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் தாய், ‘’ ஏன் இப்படி கூறுகிறார்’ என்று தெரியாமல் தவித்துள்ளார். இதன்பிறகு மாமியார் சென்று படுக்கை அறை கதவை தட்டிய போது திறக்காததால் சந்தேகம் அடைந்து கூச்சல் போட்டுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது சிறுவன் லவின்கண்ணா கழுத்து துணியால் இறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக இறந்துகிடந்தான்.
நிவேதிதா கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திருமங்கலம் போலீசார் சென்று சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, சென்னை வில்லிவாக்கம் ரயில்நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து நவீன் கண்ணா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
நவீன் கண்ணா, தான் பணியாற்றிவந்த மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை கையாடல் செய்து அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பயத்தில் குடும்பத்துடன் தற்கொலை முடிவு எடுத்து முதலில் குழந்தையை கழுத்து நெரித்து கொன்றுவிட்டு பின்னர் மனைவி கழுத்தை கத்தியால் அறுத்து தானும் தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.
மழை காலத்தை தொடர்ந்து நீர் மூலங்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் டெங்கு, எலிக்காய்ச்சல், ஹெபடைடிஸ் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்று உடல் நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் பல தொற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, டெங்கு காய்ச்சல் ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
வெள்ளம் மற்றும் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாகியுள்ளன.அதே நேரத்தில், வெள்ளம் காரணமாக, விலங்குகளின் சிறுநீர் நீரில் கலப்பதால் ‘எலிக்காய்ச்சல்’ பரவுவதற்கும் வாய்ப்புள்ளது என விஜேவிக்ரம விளக்கியுள்ளார்.
வெள்ளம் அல்லது சேற்றுப் பகுதிகளில் வேலை செய்யும் அல்லது நடக்கும் விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றவர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்தகையவர்கள் காலணிகள், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும், மேலும் காய்ச்சல், தலைவலி, சளி அல்லது தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ள காலங்களில், மக்கள் பெரும்பாலும் கிணறுகள் அல்லது ஓடைகளில் இருந்து மாசுபட்ட தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், இது தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவுதல், சுடு தண்ணீரைக் குடித்தல், உணவை மூடுதல், சேற்று அல்லது தேங்கி நிற்கும் தண்ணீரைத் தவிர்ப்பது போன்ற எளிய வழிமுறைகள் நோய் அபாயத்தைக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குருணாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரியாத்தில் வசிக்கும் 63 வயதான இலங்கை வங்கியாளரான மொஹமட் நளீம் என்பவர் பிரபலமான பிக் டிக்கெட் அபுதாபி வாராந்த இலத்திரனியல் குலுக்கலில் 250 கிராம் 24 கரட் தங்கக் கட்டியை வென்றுள்ளார்.
சுமார் இருபது ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வசித்து வரும் இவர், பல வருட விடாமுயற்சிக்குப் பிறகு, 173160 என்ற இலக்கத்தைக் கொண்ட டிக்கெட் மூலம் தனது கனவை நனவாக்கிக் கொண்டார்.
ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி வங்கியில் பணிபுரியும் நளீம், ஒரு பாகிஸ்தானிய சக ஊழியர் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிக் டிக்கெட் குலுக்கலைப் பற்றி அறிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டுகளை வாங்கி வந்த அவர், இடையில் வாங்குவதை நிறுத்தினார். பின்னர், யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பார்த்த பிறகு, தனிப்பட்ட முறையில் மீண்டும் முயற்சிக்கத் தொடங்கியதாக அவர் கூறினார்.
வெற்றி அழைப்பு வந்தபோது முதலில் தான் நம்பவில்லை என்று தெரிவித்த அவர்,ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது பெயர் அழைக்கப்பட்டது அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்ததாகக் கூறினார்.
தாம், “ஒரு நாள் நான் வெற்றி பெறுவேன் என்று தனது மனதின் ஆழத்தில் எப்போதும் நம்பியதாக” அவர் கூறியுள்ளார்.
தான் வென்ற 24 கரட் தங்கக் கட்டியை இலங்கையில் உள்ள தனது மனைவிக்கு பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதை தனது மகளுக்காக நகைகளாக மாற்றவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி தனக்கு மட்டுமல்ல, தனது முழு குடும்பத்திற்கும் ஒரு வரம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தனது மகளின் 34வது பிறந்தநாளைக் கொண்டாட வந்த பிரித்தானியர் ஒருவர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் Oak Path பகுதியை சேர்ந்த சுற்றுலாப் பயணியான பிரட் மெக்லீன் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது மகளாக நடாலியின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் 16 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். தந்தையும் மகளும் மாத்தறையில் உள்ள வெலிகம பகுதிக்குச் சென்று, பின்னர் 23 ஆம் திகதி எல்ல நகரத்திற்கு சென்றுள்ளனர்.
தனது மகளுடன் எல்ல மலைகளைப் பார்வையிடச் சென்ற போது திடீரென மலை உச்சியில் இருந்து பிரட் மெக்லீன் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு பண்டாரவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலை அனுப்பி, அங்குள்ள சிறப்பு மருத்துவ அதிகாரியால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர எல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்தியாவின் ராஞ்சியில் நேற்று முடிவடைந்த 4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்சிப் 2025இல், தெற்காசியாவின் வேகமான ஆண் மற்றும் பெண் வீரர்களாக இலங்கை தடகள வீரர்கள் சாமோத் யோத்சிங்க மற்றும் சஃபியா யாமிக் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தானை தவிர ஆறு தெற்காசிய நாடுகள் பங்கேற்ற மூன்று நாள் செம்பியன்சிப்பில், இலங்கை வீரர்கள் தமது அதீத திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் யோத்சிங்க 10.30 வினாடிகளில் இலக்கை எட்டினார், அதே நேரத்தில் யாமிக் பெண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 11.53 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
இதன்படி இருவரும் பிராந்தியத்தின் வேகமான தடகள வீரர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர். இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் 4 தர 100 மீட்டர் அஞ்சலோட்ட அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றன.
பிரமுதித் சில்வா, சந்துன் தியாலவத்த, இந்துசர விதுசன் மற்றும் சாமோத் யோத்சிங்க ஆகியோர் அடங்கிய ஆண்கள் 4தர100 மீட்டர் அஞ்சலோட்ட அணி 39.99 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றது.
இதற்கிடையில், தனஞ்சனா பெர்னாண்டோ, அமாசா டி சில்வா, ருமேசிகா ரத்நாயக்க மற்றும் சாஃபியா யாமிக் ஆகியோர் அடங்கிய பெண்கள் 4தர100 மீட்டர் அஞ்சலோட்ட அணி 44.70 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றது.
சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தய வீரரான கலிங்க குமாரகே ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் 46.21 வினாடிகளில் ஓடி வெற்றி பெற்றதன் மூலம் இலங்கையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
இதனடிப்படையில் இந்த செம்பியன்சிப் போட்டிகளில் இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் இலங்கை பதக்கங்களை பெற்றுக்கொண்டது இந்தியா 20 தங்கம் உட்பட 58 பதங்களை பெற்றது.
இலங்கை 16 தங்கம் உட்பட 40 பதக்கங்களை வெற்றி கொண்டது. இதேவேளை இந்தப்போட்டிகளில் பங்கேற்ற இரண்டு தமிழ் வீரர்களும் பதக்கங்களை பெற்றனர் குண்டு எறிதல் போட்டியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையின் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தலவாக்கலை மிட்ல்டன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
2026ஆம் ஆண்டில் உலகில் சென்று பார்க்க வேண்டிய சிறந்த 25 சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” அறிவித்துள்ளது.
கலாசார சுற்றுலாத் தலமாக அறியப்படும் யாழ்ப்பாணம் அண்மைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையின் வளமான கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,
அத்துடன், நாட்டை மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலமாக அமைப்பதற்கு அதிகாரிகளின் உந்துதலுக்கு இது உதவும்.
யாழ்ப்பாணம் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை, இலங்கையின் செழுமையான கலாசார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
இதன் மூலம், நாட்டை சர்வதேச ரீதியில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தளமாக நிலைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் ஆண்டுக்கான சிறந்த பயண இடங்கள் மற்றும் அனுபவங்களின் பட்டியலை Lonely Planet’s Best in Travel 2026 எனும் புதிய வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டு, லோன்லி பிளானட் அறிவித்துள்ளது.
இந்த புதிய வழிகாட்டியில், 2026ஆம் ஆண்டில் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை பயண நிபுணர் குழு வழங்கியுள்ளது.
உலகின் பல பகுதிகளில் உள்ள முக்கியமாக சென்று பார்க்க வேண்டிய 25 சுற்றுலாத்தலங்களும் , 25 முக்கிய சுற்றுலா அனுபவங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு இடத்திற்கும் வண்ணமிகு புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் அங்குள்ளவர்களின் பயண ஆலோசனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லோன்லி பிளானெட், உலகின் மிக நம்பிக்கைக்குரிய பயண ஊடக நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பயண வழிகாட்டி புத்தகங்களை விற்பனை செய்திருப்பதுடன், விரிந்த டிஜிட்டல் சூழலிலும் அதன் அணுகல் பரவி உள்ளது.
1. பெரு, தென் அமெரிக்கா
2. யாழ்ப்பாணம், இலங்கை
3. மைனே, அமெரிக்கா
4. காடிஸ், ஸ்பெயின்
5. ரீயூனியன், ஆபிரிக்கா
6. போட்ஸ்வானா, ஆபிரிக்கா
7. கார்டகேனா, கொலம்பியா
8. பின்லாந்து, ஐரோப்பா
9. டிப்பரரி, அயர்லாந்து
10. மெக்சிகோ நகரம்
11. குவெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா
12. பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
13. சார்டினியா, இத்தாலி
14. லிபர்டேட், சாவோ பாலோ
15. உட்ரெக்ட், நெதர்லாந்து
16. பார்படாஸ், கரீபியன்
17. ஜெஜு-டோ, தென் கொரியா
18. வடக்கு தீவு, நியூசிலாந்து
19. தியோடர் ரூஸ்வெல்ட் தேசிய பூங்கா, வடக்கு டகோட்டா
20. குய் நோன், வியட்நாம்
21. சீம் ரீப், கம்போடியா
22. புகெட், தாய்லாந்து
23. இக்ரா-ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடர்கள் மற்றும் வெளிப்புறத் தீவு, தெற்கு அவுஸ்திரேலியா
24. துனிசியா, ஆபிரிக்கா
25. சொலமன் தீவுகள், ஓசியானியா
இந்தியாவின் ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
பல்வேறு போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் சவால் விடுத்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டது. இந்த போட்டி தொடரில் இலங்கை அணி 16 தங்கம் 14 வெள்ளி 10 வெண்கலம் உள்டங்களாக 40 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
இதேவேளை, 20 தங்கம் 20 வெள்ளி 18 வெண்கலம் என்ற அடிப்படையில் இந்தியா முதல் இடத்தை பெற்றுக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நான்கு தங்கப்பதக்கங்கள் மட்டுமே இடைவெளி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்தியா தவிர்ந்த வேறு எந்த ஒரு நாடும் இந்த போட்டி தொடரில் தங்கப்பதக்கம் வென்றெடுக்கவில்லை.
இந்த போட்டி தொடரில் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.
இலங்கையின் சார்பில் சுமார் 60 வீர வீராங்கனைகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.