காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (18) இரவு வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த காதலி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதலனுக்கும் காதலிக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேரிடரால் சேதமடைந்த தொடருந்து பாதைகள் வெகுவாகப் புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான தொடருந்து சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும்.
2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, மலையகத்துக்கான தொடருந்து சேவையை ஆரம்பிக்கும் பணிகளும் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் நேற்று(18) வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “டித்வா சூறாவளி தாக்கத்தால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள், தொடருந்து வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.
அண்ணவளாக 1450 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே நாடு இன்று எதிர்கொண்டுள்ளது.
வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி தாக்கத்தால் தொடருந்து திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
தொடருந்து பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக தொடருந்து பாதையில் தொடருந்து வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.
தொடருந்து பாலங்களைப் புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த தொடருந்து பாதைகளை விரைவாகப் புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
வடக்கு மற்றும் கிழக்குக்கான தொடருந்து சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான தொடருந்து சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும்.
மலையகத்துக்கான தொடருந்து சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகின்றது.
இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அண்மையில் யானை ஒன்று எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாக சர்வதேச ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
“யானையை எரித்துக் கொலை செய்த இலங்கையர்கள்” என தலைப்பிட்டு பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. காணொளி வெளியான நிலையில் சம்பவம் தொடர்பில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனுராதபுரத்தில் 42 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் விரைவாக வைரலான இந்த கவலையளிக்கும் வீடியோவில், மூன்று ஆண்கள் யானையின் வாலில் தீ வைத்துள்ளனர்.
யானை அதன் முன் காலில் காயம் அடைந்ததால் வேதனையில் தரையில் துடிக்கும் காட்சியை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், மூன்று பேரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இலங்கையில் யானைகள் புனிதமாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் விவசாயிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்கள் சில நேரங்களில் பயிர்களை அழிக்கும் காட்டு யானைகளைத் தாக்குகிறார்கள்.
இலங்கை சட்டத்தின் கீழ் யானைகள் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் வேட்டையாடுபவர்கள் ஒன்றைக் கொன்றதற்காக மரண தண்டனையை எதிர்கொள்ளலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையிலுள்ள யானைகளை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மத்திய நிலையங்களில், கடந்த சில நாட்களாக மிளகாய் வகைகள் அதிக விலையில் விற்பனையாகியுள்ளன.
பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார வர்த்தக மையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் யு.பி. ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒருகிலோ ஆயிரம் ரூபாய்க்கும் குடைமிளகாய் ஒருகிலோ 850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில், பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோ ஆயிரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.
தினமும் சுமார் 8-10 இலட்சம் கிலோ கிராம் காய்கறிகளைப் பெறும் தம்புள்ளை மொத்த சந்தை நேற்று சுமார் 3-4 லட்சம் கிலோ கிராம் காய்கறிகள் கிடைத்துள்ளன. மேலும் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து காய்கறிகளின் விநியோகம் மிக குறைந்த மட்டத்தில் இருந்ததாகவும் ஏகநாயக்க கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒரு கிலோ கிராம் போஞ்சி மொத்த விலை ரூ.450-500 க்கும், ஒரு கிலோ தக்காளி, கத்தரிக்காய் மற்றும் பீட்ரூட் ரூ.450-500 க்கும் விற்பனையாகியுள்ளது.
ஒரு கிலோ கிராம் கரட் மற்றும் லீக்ஸ் ரூ.220 க்கும், ஒரு கிலோ கிராம் முட்டைக்கோஸ் ரூ.180 க்கும், ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.80 -100 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வடமேற்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
கம்பஹா, ராகம பகுதியில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட குழு நடத்திய பேஸ்புக் போதைப்பொருள் விருந்து பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இளம் பெண் உட்பட 13 பேர் ஐஸ் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மிகவும் மயக்கமான மற்றும் சுயநினைவற்ற நிலையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் இருந்த 20 வயதுடைய இளம் பெண்ணால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த விருந்து ராகம பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணையின் போது, அந்த இளம் பெண் ராகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் ஜா-எல, கம்பஹா, கிரிபத்கொட, களனி மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (19.12.2025) அதிகாலை 12.45 மணிக்கு டுபாயிலிருந்து ஃப்ளை டுபாய் FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து “கிரீன் சேனல்” வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இவரிடமிருந்து சுமார் 354,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இன்று (19.12.2025) அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் கருவேப்பன்குளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரால் இந்தக் பெண் கொலை செய்யப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும், காயங்களுடன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் ஒன்டான்செட்ரான் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.
அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை.
பின்னர், நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்தார். பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சந்தமினி திவ்யாஞ்சலி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மத்திய வித்யாலயா தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவராகும். அவர் உயிரிழக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை கடுமையாக வலியுறுத்துகின்றனர்.
மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17.12.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயணித்த வேன் மற்றும் லொறி
இந்த நடவடிக்கையானது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, அந்த கால் பகுதி மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், 21 பேரை இதுவரை காணவில்லை எனவும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஒன்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலையை விட மறுத்த மனைவியை ஆத்திரத்தில், பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இத்தனை பயங்கர முடிவுக்கு வந்தது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது.
மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை மற்றும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
போர்ச்சுகல் நாட்டுக்கு புலம்பெயர முயன்ற ஒரு இந்திய தம்பதியரும், அவர்களுடைய மூன்று வயதுக் குழந்தையும் லிபியா நாட்டில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Mehsana மாவட்டத்தில் அமைந்துள்ள Badalpura கிராமத்தைச் சேர்ந்த கிஸ்மத்சிங் (Kismatsingh Chavda),
அவரது மனைவியான ஹீனாபென் (Heenaben) மற்றும் தம்பதியரின் மகளான தேவன்ஷி என்னும் மூன்று வயது சிறுமி ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக, (Devanshi). Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
லிபியா நாட்டில் அவர்களைக் கடத்தி வைத்துள்ள கும்பல், அவர்களிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிஸ்மத்தின் சகோதரர் போர்ச்சுகல் நாட்டில் வாழும் நிலையில், அங்கு புலம்பெயர கிஸ்மத் குடும்பம் முடிவு செய்துள்ளது.
கிஸ்மத் குடும்பம், நவம்பர் மாதம் 29ஆம் திகதி குஜராத்திலிருந்து துபாய்க்கும், பின் துபாயிலிருந்து லிபியாவுக்கும் சென்ற நிலையில், Benghazi என்னுமிடத்தில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.
குஜராத் அரசுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் இந்த கடத்தல் தொடர்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரை கொன்று உடலை மகன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் அம்பேஷ் என்ற பொறியாளர் தனது வீட்டை எதிர்த்து மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அம்பேஷ் திருமணத்தை அவரது பெற்றோர்கள் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை, அத்துடன் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் குடும்ப தகராறு அதிகரித்துள்ளது, இறுதியில் விவாகரத்து சம்மதித்த அந்த பெண் ஜீவனாம்சமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.
இந்த பணத்தை திரட்டுவதற்காக அம்பேஷ் தந்தையிடம் உதவி கோரியுள்ளார்.
பெற்றோரை கொன்று ஆற்றில் வீசிய மகன்
ஆனால் ரூ.5 லட்சம் தந்து உதவ தந்தை மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த அரவை கல்லை எடுத்து தாய் பபிதா(60)வை முதலில் தாக்கியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை ஷியாம் பகதூரையும்(62) அதே கல்லால் அடித்து கொன்றுள்ளார். மேலும் தன்னுடைய தவறை மறைக்க வீட்டில் கேரேஜில் இருந்த வாளை(Saw) கொண்டு பெற்றோர் இருவரையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் கட்டில் அதிகாலை நேரத்தில் ஆற்றில் வீசியுள்ளார்.
பின்னர் சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெற்றோர் கோபத்தில் வீட்டை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சகோதரி வந்தனா பொலிஸாரில் புகார் அளிக்கவே, அம்பேஷிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் இறுதியில் இருவரையும் அடித்து கொன்ற விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பகுதியில் மீட்பு பணிகளின் போது இராணுவ மீட்பு படையினர் 30 இலட்சம் பணம் மற்றும் 50 இலட்சம் ரூபாபெறுமதியானநகைகளையும் மீட்டுள்ளனர் .
டித்வா ப்ய்ரலால் இலங்கையில் ஏற்பட்ட மணசரிவில் வீடு முற்றாக அழிந்திருந்த நிலையில் இடிபாடுகளை சீரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீடொன்று மண்ணில் புதைத்து அழிவடைந்த நிலையில் , புதைந்திருந்த புதைந்திருந்த பணம் , நகை மீட்கப்பட்டு பாதுகாப்பாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இன்று (18.12.2025) இடம்பெற்றுள்ளது.
எனினும் இளைஞன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள நிலையில் இளைஞன் அமரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது.
யாழ் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தின் போது குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.