நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இத்தாலியிலுள்ள தேசிய பூங்காவில் பழமையான டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
210 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த கடைனோசரின் கால்தடங்களை நோக்கும் போது சிறிய தலை, நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது.
தாவர உண்ணி டைனோசர் வகையைச் சேர்ந்தவை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இனம் புரோ-சௌரோபாட் (prosauropods) என்று அழைக்கப்படுகிறது. கால்தடங்கள், விரல் மற்றும் நகத்தின் அடையாளங்கள் தெளிவாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டெல்வியோ தேசிய பூங்காவில் (Stelvio national park) உள்ள ஒரு மலைச் சரிவில் இந்த கால்தடங்கள் கடந்த செப்டெம்பரில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட ஒரு புகைப்படக் கலைஞரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 10 மீட்டர் உடல் நீளம் கொண்ட “ப்ரோ-சௌரோபாட்” (prosauropods) டைனோசர்கள், நீண்ட பயணங்களின் போது சோர்வைப் போக்க தங்கள் பின்னங்கால்களைப் நடக்கவும், மலைகளில் ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டைனோசர்கள் அழிந்து போவதற்கு முன்பு 160 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.
பலாங்கொட பகுதியில் தந்தையை கொலை செய்து ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட, ஹந்தகிரியவை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதற்கமைய கொல்லப்பட்டவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும், வீட்டிலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சகோதரியின் வீட்டிற்கு வந்த நபர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டிலிருந்து ஆவணங்களைத் திருடியதாகவும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மகன் எனவும் பெண் ஒருவர் வெலிகெபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 40 வயதான மகனை கைது செய்துள்ளனர்.
சடலம் பலாங்கொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகெபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று பதிவாகி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மழை நிலைமை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, உடுதும்பர, மடதும்பர மற்றும் மினிபே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வசந்த சேனாதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த இடங்கள் நிலச்சரிவு அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அந்த இடங்களைத் தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பதுளை, மடுல்சிம, பட்டவத்தை பகுதியில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அன்றையதினம் கடுமையான குளிரில், தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், அதிகாலை 4.00 மணியளவில் ஒரு பெரிய மண் சரிவில் புதைந்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆர். தியாகராஜா. அன்றைய தினம் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். இதன்போது அன்று நடந்த பெரிய சோகத்தைப் பற்றி அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
‘எனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் நான் வரவேற்பு அறையில் உறங்கினோம். ஏனைய மூன்று மகள்கள், மகளின் இரண்டு பிள்ளைகள் மற்றும் எனது மருமகள் ஆகியோர் அறையில் உறங்கினர். மருமகளுக்கு குழந்தை பிறக்கவிருந்தது.
இந்த நிலையில் திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் வெளியே ஓடியபோது, அதிகளவான தண்ணீர் வருவதினை கண்டேன். “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுகள்…” என்று மக்கள் கத்துவதைக்கேட்டேன், இருட்டில் எனக்கு எதுவும் தெரியவில்லை.
நான் திரும்பிப்பார்த்தபோது, ஒரு பெரிய பாறை வீட்டின் மீது மோதியது, வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. அறையில் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் அதன் கீழ் புதைந்திருந்தனர்.
அவர்களைக் காப்பாற்றுமாறு முடிந்தவரை சத்தமாகக் கத்தினேன். ஆனால் யாரும் வர முடியவில்லை. எப்படியோ, காலையில், பாறைகள் மற்றும் மண் அகற்றப்பட்டு, பிள்ளைகள் வெளியே இழுக்கப்பட்டனர்.
இராணுவ வீரர்கள் கடினமாக உழைத்தனர். பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வழி இல்லை. அதற்குள், அனைத்து பிள்ளைகளும் ஏற்கனவே இறந்துவிட்டனர். எனது பிள்ளைகள் என் கண் முன்னே உயிரிழந்து விட்டனர். இந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை.”
19, 27 மற்றும் 28 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மகள்கள், ஒரு மகளின் 7 வயது மகள் மற்றும் இரண்டரை வயது மகன், அதே போல் 26 வயது மருமகள் ஆகியோர் இந்த பயங்கர மண் சரிவில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து நாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அது நாள் முழுவதும் வீட்டைச் சுற்றித் திரியும். எங்கள் பிள்ளைகள் இந்த நாயை மிகவும் நேசித்தார்கள். நாயும் அப்படித்தான்.
அது பேரப்பிள்ளைகளின் புத்தகங்களை பார்த்து குரைக்கிறது. என்னால் அதனை தாங்க முடியவில்லை. குடும்பத்தினர் உயிரிழந்ததில் இருந்து நாய் சாப்பிட வருவதில்லை. நான் நாயை சாப்பிடுமாறு கூறினாலும் அது வராது.
அதனால் நான் உணவை எடுத்துக்கொண்டு நாய் தங்கியிருக்கும் உடைந்த வீடு அமைந்துள்ள இடத்திற்கு வர வேண்டும். அது எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக தியாகராஜா கூறினார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆலோசகராகப் பணிபுரியும் சுஜித் ஹேரத் என்பவரே இந்த மகத்தான சேவையை செய்து வருகிறார். வெள்ளத்தால் சேதமடைந்த பல்வேறு வகையான மின் சாதனங்களை எந்த சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் திருத்திக் கொடுக்கிறார்.
ஏதேனும் குழு அல்லது தன்னார்வ அமைப்பு முன்வந்தால், கிராமம் கிராமமாகச் சென்று மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களின் உதவியுடன் தனது சேவைகளை வழங்க முடியும் என்று சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வீடுகளில் உள்ள மின் சாதனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான் கற்றுக்கொண்டதைக் கொண்டு அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.
அதனால்தான் இந்த சேவையை வழங்க முடிவு செய்தேன். ஏற்கனவே பல்வேறு மின் சாதனங்களை தான் இலவசமாக சரி செய்து கொடுத்துள்ளதாக சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, சொத்து மற்றும் பொருளாதார சேதத்தை குறித்த நாடுகள் கடுமையாக எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில், பாபா வங்கா, உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் பேசுபொருளாகியுள்ளதுடன் அவரின் கணிப்பின் படி தான் அனைத்தும் நடக்கின்றனவா என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
எனவே, ஆசியாவிற்கு பேரழிவுகள் ஏற்படும் என அவர் கணித்திருந்தமை, தற்போது வரை பதிவாகியுள்ள அனர்த்தங்கள் மாத்திரமா அல்லது மேலும் பல காத்திருக்கின்றனவா என்றும் ஒரு அச்சம் எழுகின்றது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா பார்வையற்ற பெண்ணொருவர், எதிர்காலம் குறித்து பல நிகழ்வுகளை கணித்துள்ளதாகவும் அவரின் கணிப்புக்களில் ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, அவர் மேற்கொண்ட பல நிகழ்வுகள் அதேபோல நடக்காவிடினும் அதற்கு ஒத்த அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையே அவரின் கணிப்புக்களை ஆராய தூண்டுகின்றது.
அந்தவகையில், 1996 ஆம் ஆண்டு உயிர்நீத்த பார்வையற்ற பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகளை கணித்தார் என கேட்கும் போது நமக்கு அவநம்பிக்கை ஏற்படும் அதேவேளை, சந்தேகத்தையும் எழுப்புகின்றது.
எனவே, அவரின் கணிப்பை ஆராயும் போது, குறித்த பெண், 2025ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மோசமான அழிவு ஏற்படும் என கணித்துள்ளார்.
அதன்படி, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து சுனாமி வரக்கூடும் அபாயம் உள்ளது என அவரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், ஆசிய நாடான ஜப்பானில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதன்போது, கிட்டத்தட்ட 90,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நில அதிர்வு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.
அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் போது குறைந்தது 23–33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டன. அதேசமயம், இலங்கை மற்றுமு் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டிட்வா புயலும் பதிவாகியிருந்தது.
இலங்கை காலநிலை வரலாற்றிலேயே சுனாமிக்கு பிறகு மிகப் பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது பதிவு செய்யப்பட்டது.
2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவு இந்த டிட்வா புயல்.
இத்தகைய, அனர்த்தங்கள் பதிவாகியிருக்கும் நிலையிலேயே பாபா வங்கா ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என கணித்திருந்ததாக கூறப்படும் செய்தி பேசுபொருளாகியுள்ளது.
அத்துடன், மேலும், அவர் 5079 ஆம் ஆண்டு வரை நடக்க போகும் என மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுடன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 45 வயதுடைய நபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 39 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேற்படி இருவரும் தம்பதி என்று பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும், காரின் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணித்த மேற்படி தம்பதியரின் உறவினர்கள் மூவர் (ஆண் ஒருவர், இரு பெண்கள்) காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் மாவட்டத்தில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கு இளைஞர் கும்பலை சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட குழு அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
கல்கமுவ, தம்புள்ள, அலவ்வ, கிரியுல்ல மற்றும் குளியாபிட்டிய போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து குருநாகலுக்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தி மிரட்டி, அவர்களிடமிருந்து 100 முதல் 1000 ரூபாய் வரை பலவந்தமாக பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகேவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை குருநாகல் பகுதிக்கு வருகை தரும் இளம் காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் இளைஞர் கும்பலை சேர்ந்த ஒரு குழுவும் இதே முறையில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் வழிப்பறிகள் தொடர்பில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடர் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அந்த மாவட்டத்தில் இவ்வாறான 21 சிறுவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனர்த்தம் காரணமாக பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி மேற்கொள்ளப்படும் கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறித்து பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்துள்ளார்.
பணத் தாள்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பெரும்பாலான போலி பணத் தாள்கள் 5000 ரூபாய் நாணயத்தாள்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் பிரிவினால் போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 596 கைப்பற்றப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 535 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி பணத்தாள்கள் அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, காட்டுப்பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், மல்லிப்பு சந்திக்கு அருகில் நேற்று (16.12.2025) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேனை பகுதியிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி அதிக வேகத்தில் பயணித்துள்ளதாகவும், இதன்போது வீதியின் குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றியின் மீது மோதியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களைப் பொலிஸாரும், வீதியில் பயணித்தவர்களும் இணைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் அண்மையில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழரின் கடைக்குள் நுழைந்த நபர் அங்கு கொள்ளையிட முயற்சித்ததுடன், கடைக்கு தீவைக்க முயற்சித்துள்ளார். இதன் போது கடையில் இருந்த நபர், கொள்ளையன் மீது தாக்குதலை மேற்கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.
அத்துடன் தீவைக்க முயன்ற நபர் கடையில் நின்றவரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து அங்கு பல துன்பங்களை அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறி வரும்போது கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் கலக்கத்தை ஏற்படுத்துயுள்ளது.
அண்மைக்காலமாக லண்டனின் தமிழர்களை இலங்கு வைத்து அரங்கேறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் லண்டன் வாழ் தமிழர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய்யுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (17.12.2025) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,307 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் நேற்று (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,277 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இதேவேளை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்க பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுவனை கடந்த 29ஆம் திகதி அன்று முதல் காணவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியினை சொந்த முகவரியாக கொண்ட குறித்த சிறுவன், கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 28.11.2025ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறுவன், காணாமல் போனமை தொடர்பில் எந்த தகவலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உறவினர்கள் இருந்துள்ளார்கள்.
அதனைதொடர்ந்து, இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சிறுவனை காண்பவர்கள் உடனடியாக 768459796 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.