கந்தளாய் – சேருநுவர பிரதான வீதியில், கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்பாக வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (17.12.2025) காலை 8.00 மணியளவில் கந்தளாயில் இருந்து ஆடைத்தொழிற்சாலை யுவதிகளை வான்-எல பகுதிக்கு ஏற்றச்சென்ற வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகிய வான், வீதியோரத்திலிருந்த இரண்டு மின்கம்பங்களை பலமாக மோதி உடைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது வானில் பயணித்த சாரதி உட்பட இரண்டு யுவதிகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை இரவு முதல் (18.12.2025) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல்(17.12.2025) எதிர்வரும் 19.12.2025 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19ம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
எனினும் நாளை (18.12.2025) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது
அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் முதல் (19.12.2025) அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
புதிய இணைப்பு : கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அதன் விமானி சாமர்த்தியமாக கையாண்டுள்ளார்.
பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் (Landing Gear) சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார்.
அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார்.
இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது.
அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக நடுவானிலேயே பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் விமானம் தரையிறங்கியுள்ளது.
ஆபத்தான நேரத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் இவ்விடத்தில் பாராட்டத்தக்கது.
இரண்டாம் இணைப்பு : கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு : துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விமானம், தரையிறங்கும் கியரில் செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்கத் தயாராக உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்தான்புல்லுக்குச் செல்லவிருந்த TK 733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றி கொண்டு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.
மேலும், விமானம் இன்று நள்ளிரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்துச் சம்பவம் நேற்று (15) பிற்பகல் கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில். மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருந்த கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு வடலிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (16) குறித்த நபர் காயங்களுடன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பற்றாஇக்குள் கிடந்த நிலையில், மக்கள் சென்ற போது குற்றுயிரும் குலையுயிருமாக இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டபோது உடலில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளது.
வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி பனை மரத்தின் கீழ் குறித்த நபர் போடப்பட்ட நிலையில் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹொரணை திக்கென்புர பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொறியில் மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாயும், உயிரிழந்த சிறுமியின் நான்கு வயது சகோதரியும் விபத்தில் காயமடைந்து ஹொரணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ஹொரணை இலிம்பாவை சேர்ந்த சந்தலி இமாயா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹொரணை டொம்பெட்ரிக் கல்லூரியில் 4ஆம் வகுப்பில் படித்து வந்தார்.
நேற்று காலை, ஹொரணையிலிருந்து இங்கிரிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஹொரணை நகர சபைக்குச் சொந்தமான குப்பைகளை ஏற்றிச் செல்லும் டிராக்டரைக் கடக்க முயன்ற போது, டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் டிப்பர் லொறியின் பின்புற வலது சக்கரத்தில் மோதியதால், மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததாகவும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிறுமி டிப்பர் லொறியால் நசுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குப் பிறகு சிறுமி உட்பட காயமடைந்தவர்கள் ஹொரன மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறுமி உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குப் பிறகு டிப்பர் லொறியின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தச் சம்பவம் உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது, கணவர் கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்க முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து மனைவி தற்காப்புக்காகப் பதிலுக்குத் தாக்கியதில் அவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக இரவு வீட்டை விட்டு வெளியேறி, நேற்று காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார்.
அதன்பின்னர் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழைச்சனை, வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வாழைச்சனை வைத்தியசாலை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு வாழைச்சனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டியில் அனர்த்தம் காரணமாக வீடொன்றில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று சிறப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீமுர பகுதியில் வீட்டில் சிக்கியிருந்த மூன்று மாதக் குழந்தையை மீட்டு, அவரது தாயாரிடம் ஒப்படைக்க சிறப்பு கொமாண்டோ நடவடிக்கையை முன்னெடுத்தது.
குழந்தையை மீட்க இராணுவத்தின் 2வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு களத்தில் இறங்கியது.
கடந்த 3 ஆம் திகதி கரம்பகெட்டிய கிராமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினர், வீட்டில் 3 மாதக் குழந்தையுடன் பாட்டி தனியாக இருப்பதை கண்டனர்.
அவரது தாயார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அனர்த்தம் காரணமாக வேறு பகுதியில் சிக்கியிருந்தார்.
வெள்ளம் காரணமாக வீடு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடும் மழையிலும் தாய்ப்பால் இல்லாமல் பலவீனமாக இருந்த குழந்தையையும் அவரது பாட்டியையும் இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் விமானம் மூலம் இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்று, பாதுகாப்பாக தனது தாயாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய் வேறொரு இடத்தில் சிக்கியிருந்த நிலையில் அவரை கண்டுபிடிக்கும் வரையில், குழந்தை இராணுவ முகாமில் பாதுகாப்பாக பாட்டியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் குழந்தையை அவரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, சொத்து மற்றும் பொருளாதார சேதத்தை குறித்த நாடுகள் கடுமையாக எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில், பாபா வங்கா, உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் பேசுபொருளாகியுள்ளதுடன் அவரின் கணிப்பின் படி தான் அனைத்தும் நடக்கின்றனவா என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா பார்வையற்ற பெண்ணொருவர், எதிர்காலம் குறித்து பல நிகழ்வுகளை கணித்துள்ளதாகவும் அவரின் கணிப்புக்களில் ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, அவர் மேற்கொண்ட பல நிகழ்வுகள் அதேபோல நடக்காவிடினும் அதற்கு ஒத்த அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையே அவரின் கணிப்புக்களை ஆராய தூண்டுகின்றது.
அந்தவகையில், 1996 ஆம் ஆண்டு உயிர்நீத்த பார்வையற்ற பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகளை கணித்தார் என கேட்கும் போது நமக்கு அவநம்பிக்கை ஏற்படும் அதேவேளை, சந்தேகத்தையும் எழுப்புகின்றது.
எனவே, அவரின் கணிப்பை ஆராயும் போது, குறித்த பெண், 2025ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மோசமான அழிவு ஏற்படும் என கணித்துள்ளார்.
அதன்படி, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து சுனாமி வரக்கூடும் அபாயம் உள்ளது என அவரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், ஆசிய நாடான ஜப்பானில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதன்போது, கிட்டத்தட்ட 90,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நில அதிர்வு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.
அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் போது குறைந்தது 23–33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டன. அதேசமயம், இலங்கை மற்றுமு் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டிட்வா புயலும் பதிவாகியிருந்தது.
இலங்கை காலநிலை வரலாற்றிலேயே சுனாமிக்கு பிறகு மிகப் பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது பதிவு செய்யப்பட்டது.
2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவு இந்த டிட்வா புயல்.
இத்தகைய, அனர்த்தங்கள் பதிவாகியிருக்கும் நிலையிலேயே பாபா வங்கா ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என கணித்திருந்ததாக கூறப்படும் செய்தி பேசுபொருளாகியுள்ளது.
அத்துடன், மேலும், அவர் 5079 ஆம் ஆண்டு வரை நடக்க போகும் என மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுடன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வரைபடத்தில் இருந்து காணாமல் போனதாக பேசப்பட்டு வந்த, பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மஸ்பன்ன கிராமத்தின் ஒரு பகுதி தற்போது மீண்டும் தென்பட்டுள்ளது.
அண்மையில் பேரிடரினால் மூழ்கிப் போன மஸ்பன்ன கிராமம் சர்வதேச ரீதியில் பேசும் பொருளாக மாறியிருந்தது.
தற்போது அங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், கிராமத்தில் புதைந்த வீடுகள், பேருந்துகள் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 26ஆம் திகதி மதியம் மஸ்பன்ன நகரில் பேருந்து நிலையத்திற்கு மேல் ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்தது.
பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல பேருந்துகள் மீது மண்மேடு சரிந்தது. தெய்வாதீனமாக அந்த நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலும், பேருந்து நிலையத்திலும் எவரும் இருக்கவில்லை.
மேலும் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மஸ்பன்ன கிராம மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இரவு வேளையில் மண் மேடுகள் படிப்படியாக இடிந்து வீழ்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள நாயொன்று அனர்த்தம் தொடர்பில் எச்சரித்து பலரை காப்பாற்றியது.
சூட்டி என்ற பெயர் கொண்ட நாய், உரிமையாளரை எச்சரித்த நிலையில், அவரினால் பலர் காப்பாற்றப்பட்டிருந்தனர். இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தப் பகுதி மக்கள் அவசரமாக வெளியேறி நிலையில் பாரிய மண்மேடு வீழ்ந்து கிராமம் மூழ்கிப் போனது. எனினும் அந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.
அன்றிலிருந்து, மஸ்பன்ன நகரம் இலங்கையின் வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியுடன், மஸ்பன்ன கிராமம் இப்போது மீளெழுந்து வருகிறது.
தற்போது பேருந்து நிலையத்தில் புதையுண்ட பேருந்துகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன.
மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது.
மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது.
குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும் , பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும்,
இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வேனின் சாரதியும் பின்னால் பயணித்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகளே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்தது.
தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்திருந்த மதீஷா பத்திரனா, அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு விற்கப்பட்டார்.
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மதீஷா பத்திரனாவை விடுவித்தது.
வித்தியாசமான பந்துவீச்சு பாணியைக் கொண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பத்திரனா, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சீருடையை அணிந்து, 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் அறிமுகமானார்.
அதேவேளை மதீஷா பத்திரனாவை வாங்க சென்னை – கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ.18 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இன்று (16) முன்னதாக நடைபெற்ற ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான கெமரூன் கிரீன், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் ஒரு சாதனையாக 252 மில்லியன் இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டார்.
கெமரூன் கிரீன், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் சாதனை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அவுஸ்திரேலிய வீரருக்காக தீவிர போட்டி நிலவிய போதிலும், ஷாருக் கான் உரிமையாளராக உள்ள KKR அணி, கிரீனைத் தன்வசப்படுத்தியது.
இதன் மூலம், அவர் தனது நாட்டு வீரரான மிட்செல் ஸ்டார்க்கின் (IPL 2024, KKR, 247.5 மில்லியன் இந்திய ரூபாய்) சாதனையை முறியடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைபோன வெளிநாட்டு வீரர் ஆனார்.
2026ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கிறது. நாமும் மிகவும் ஆவலுடன் அடுத்த ஆண்டை நோக்கி காத்திருக்கின்றோம். ஒவ்வொரு அண்டும் ஒவ்வொருவருக்கும் சில பலன்களை அளிக்கும்.
2026 தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு அரிய சக்தி வாய்ந்த 5 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியவை சனி பகவானின் சொந்த வீடான மகர ராசியில் இணைகின்றன. இது பஞ்சகிரக என்ற யோகத்தை உருவாக்குகிறது.
யோகம் கிடைக்கும் ராசிகள்
இந்த யோகத்தின் தாக்கமானது ஜனவரி மாதம் நடுப்பகுதியில் 13 முதல் 20ஆம் தேதி வரை சுமார் ஒரு வாரம் இருக்கும். இது பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக 4 ராசிகளில் இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேஷம் : பஞ்சகிரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் பல நன்மைகளைபெற இருக்கின்றனர். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். முக்கிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமுகத்தில் உங்களில் மதிப்பு அந்தஸ்து உயரும்.
ரிஷபம் : ஜனவரி மாதம் நீங்கள் கொடிகட்டி பறப்பீர்கள். பண வரவுகள் அதிகரிக்கும். இதனால் வங்கி இருப்பும் அதிகரிக்கும். நிலம் வாங்குவீர்கள். காய் வாங்கும் யோகமும் இருக்கிறது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புள் உள்ளன. தந்தை வழியில் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்ப்வர்களுக்கு நல்ல செய்தி வரும்.
கன்னி : நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப பிரச்சனைகள் தீரும். குழந்தைகளுக்கு வரன் தேடி வரும். அதேபோல் குழந்தைகளிடம் இருந்து நல்ல மகிழ்ச்சியான செய்திகள் வரும். நீங்கள் செய்திருந்த முதலீடுகள் லாபத்தை தரும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். கடன்கள் இருந்தால் தீரும்.
மகரம் : சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். அதேபோல் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அமையும். வீடு வாங்கும் யோகமும் உள்ளது. மொத்தத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் இருக்கிறது.
இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக திர்ச்சித தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். ஆண் – பெண் விகிதாசாரம் 6:1 எனும் விகிதத்தில் உள்ளது.
மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.