முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
தோட்டக்காணியை உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது தடுமாறிக் கிடந்துள்ளது.
இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.
தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி – கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.
உடனடியாக இன்னொரு படகுமூலம் கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.
போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
2045ஆம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என பிரபல தொழிலதிபர் ஜெப் பெஜோஸ் தெரிவித்துள்ளார். இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஓரிரு தசாப்தங்களில் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள், இது வேகமாக நடக்கப்போகிறது.
இது தேவை காரணமாக நடக்காது. மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை நமது வளர்ச்சியை ஆதரிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரான்ஸில் இருந்து சுமார் 13 நாடுகளை சைக்கிளில் கடந்து சுமார் 10,000 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர் நேற்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
பாரிஸில் இருந்து யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸில் வசிக்கும் நல்லூரை சேர்ந்த, 28 வயது இளைஞர் சூரன் என்பவரால் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் வந்தடை பிரான்ஸ் வாழ் இளைஞனுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது. தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “கடந் செப்டம்பர் முதலாம் திகதியன்று பாரிஸிலிருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஒஸ்ரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகப் பயணம் செய்து, இன்று யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளேன். இதற்காக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் பயணித்தேன்.
எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதும் எனது நோக்கமாகும்.
யாழ்ப்பாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்துடன் வலுவான உணர்ச்சி மற்றும் கலாச்சார தொடர்புகளைப் பேணுவதற்கு ஊக்கமளிப்பதற்கும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை உருவாக்க விரும்புவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரும், பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் இன்று (23) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், இன்று சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில்உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
தேவாவின் சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை உதவி பணிகளையும் செய்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தனது சகோதரர் தேவா தேசிய விருது பெறாதது குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமான முதல் வருட தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமணப் பெண் ஒருவர், கணவர் வேலைக்கு புறப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (21).
கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
புதுமணத் தம்பதிகள் தீபாவளியைத் தலை தீபாவளியாக கொண்டாடும் நோக்கில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரூபிகாவின் ஊரான களத்துப்பட்டிக்கு வந்தனர்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து தலைதீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பின்னர், பாண்டி நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதாக கூறியதில், ரூபிகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“தலை தீபாவளிக்கு வந்தவுடனேயே ஏன் உடனே வேலைக்கு செல்ல வேண்டும்?” என்ற விவாதம் தம்பதியருக்குள் வாக்குவாதமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குவாதத்திற்குப் பிறகு பாண்டி வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரூபிகா, குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த புழுதிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபிகாவின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுமணத் தம்பதிகளின் மகிழ்ச்சி நிறைந்த தங்கள் தலைதீபாவளிக் கொண்டாட்டம், இப்படி துயரமாக மாறியிருப்பது கிராம மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் ஓசான் நகரில், 20 வயதுடைய ஒரு பெண் கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சித்ததில், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
கீழ்தள வணிக வளாகங்கள் மற்றும் மேல்தளங்களில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இந்த அடுக்குமாடியில், அந்த பெண் தற்காலிக ஃபிளேம்த்ரோவை பயன்படுத்தி பூச்சியை கொல்ல முயன்ற போது தீ விரைவாக பரவி குடியிருப்பை ஆழமாக பாதித்தது.
இந்த தீ விபத்தில், அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 30 வயது சீனப் பெண் ஒருவர் தீ மற்றும் அதிக புகை காரணமாக சிக்கி, மருத்துவமனையில் அனுப்பப்பட்டாலும் உயிரிழந்தார்.
குறைந்தபட்சம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்திற்கும் அலட்சியத்திற்கும் பொறுப்பாக அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில், வீடுகளில் பயன்படுத்தப்படும் தீவிர கரப்பான் பூச்சி கொல்லும் முறைகள் அதிகமாக பிரபலமாகி வருகின்றன.
இதேபோல் முன்னொரு சில சம்பவங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், 2023ஆம் ஆண்டு ஜப்பானில் அதேபோல் முயற்சிகள் தீ விபத்திற்கான காரணமாக இருந்ததாக பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூய்மைப் பணிகள் நடக்கும் போது, கனமழையால் வீட்டின் பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.
இந்த இடிபாட்டில் பவானி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பவானி உயிரிழந்தார். திருத்தங்கல் காவல்துறை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் மாணவியின் குடும்பத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணி பேர்த்த பதக்கம் வழங்கும் விழாவானது சுவிட்சர்லாந்து- பேர்ண் மேற்குப்பகுதியில் Bienzgut, Heuboden என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் பதக்கம் வழங்கும் நிகழ்வானது தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. 2025 ஆம் ஆண்டு இந்தப் பதக்கமானது இருவருக்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில், இணையர் நந்தினி முருகவேள். சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரசபையின் சமுதாய அரசபணியாளர்களில் ஈழத்தமிழரான பேர்ண் வள்ளுவன் பள்ளி ஆசிரியை நந்தினி முர்கவேளுக்கு பேர்ண் நகரின் 2025 ஆம் ஆண்டிற்கான முடியரசி (இராணி) என்ற பட்டம் வழங்கி நகரசபை மதிப்பளித்துள்ளது.
இவர் பேர்ண் நகரப்பகுதியிலும், பேரண்மேற்குப்பகுதியிலும், தனது சமுகாயத்தின் ஒருங்கிணைப்புக்காக அவர் அயராது பாடுபடுகிறார்.
சமூக-பண்பாட்டு நடவடிக்கைகளில் ஓர் பாலமாக தனது சமுதாயத்துடன் இருக்கின்றார்.பெண்களுக்கான பல திட்டங்களுக்கு பொறுப்பாகக் கடமையாற்றகின்றார். வயோதிபர்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகின்றார்.
பொதுவாக பேர்ண் நகரப்பதியிலும் பேர்ண் மேற்குப்பகுதியிலும் அவர் ஓர் முக்கியமான ஆளாக தமிழ்மக்களுக்கும்,ஏனையோருக்கும் கடமையாற்றுகின்ற ஓர் சிறந்த சமூகசேவையாளராகவும், காணப்படுகின்றார்.
இதற்கு அப்பால் தேவைப்படும் இடங்களில் மகிழ்ச்சியாக இலவசமாக தனது சேவையை தமிழ்மக்களுக்கு ஆற்றி வருகின்றார். தனது கணவருடன் பேர்ண் வள்ளுவன் பள்ளியையும் நடத்தி வருகின்றார்.
இவ்வாறான பல செயற்பாடுகளையும் திறமையாக செயற்படுத்தி வருவதால் அவரை இந்த ஆண்டு நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம் என்று இவ் விழாவினை ஏற்பாடு செய்திருந்த நகரசபை அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, பீட்டர் பிளேசர் என்பவர் பல ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களில் அயராது தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார்.
இவர் SP கட்சியின் ஓர் முக்கியமான உறுப்பினர்.இவரின் பிரதான பணிகளாக முக்கியமான திட்டங்களை உருவாக்குதல்,அவற்றை நடைமுறைப்படுத்தல். இவை போன்ற மக்களுக்குத் தேவையான திட்டங்களை நீண்டகாலமாக விருப்புடன் செயற்படுத்தி வருகின்றார்.
இவ்வாறான மக்களுக்குத் தேவையான ஓர் சிறந்த மனிதரையும் தெரிவு செய்திருக்கின்றோம் என நகரசபை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பேர்ண் மேற்குப்பகுதியில் அனைத்து சமூகசேவையாளர்களுக்கும் பொறுப்பாகக் கடமையாற்றும் VBG அரச அமைப்பின் மேலதிகாரி ஸ்டெபானி ஷார் (Steffi) தனது உரையில் 2000 ஆம் ஆண்டு சுவிசிற்கு வருகைதந்த நந்தினி மிக விரைவாக யேர்மன்மொழியைக் கற்று ஏனைய கற்கை நெறிகளையும் யேர்மன் மொழியில் கற்று முடித்தார்.
2006 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அரசாங்க பல்பண்பாட்டு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றகின்றார்.இவர் பாடசாலை வைத்தியசாலை, நீதிமன்றம், பொலிஸ்துறை பெண்கள் பாதுகாப்பு விடுதி எனப் பல்வேறு அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பை மேற்கொள்கின்றார்.
அத்துடன் ஓர் கணக்காய்வாளராகவும் கடமையாற்றுகின்றார். 2010 ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேற்றுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வகுப்புக்களுக்கான ஓர் ஒருங்கிணைப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.
அதே ஆண்டில் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான கலந்துரையாடல் என்னும் திட்டத்திற்கு பொறுப்பாக கடமையாற்றவதுடன் வயோதிபர்களுக்கான பல திட்டங்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகின்றார்.அத்துடன் பேர்ண் மேற்குப் பகுதியின் சமூகசேவையாளராகவும்,ஆலோசகராகவும், செயலாளராகவும் என்னுடன் கடமையாற்றுகின்றார்.
பேர்ண் வள்ளுவன் பள்ளியின் ஆசிரியையாகவும் கடமையாற்றுகின்றார்.இவர் எந்த வேலையை செய்தாலும் முழுமனதுடன், நம்பிக்கையுடன்,மேற்கொள்ளார்.
இவர் அதிகளவு மணித்தியாலங்களை தன்னுடைய நாட்டு மக்களுக்காக இலவசமாக ஆற்றுவார். இவரின் சேவை பெருமைக்குரியதும், பாராட்டுக்குமுரியதாகும். இவருடைய குடும்பம் மிக அழகானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,செந்தமிழ் அருட்சுனையரும், சமய உளவள ஆற்றுப்படுத்துநருமாகிய தர்மலிங்கம் சசிக்குமார் கருத்துத் தெரிவிக்கையில், இணையர் நந்தினி முருகவேள் எங்களுடன் நீண்டகாலமாக இணைந்து பல திட்டங்களில் கடமையாற்றுகின்றார்.
எங்களுடைய ஓர் முக்கியமான திட்டமாக எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலம் வாழும் தமிழர்கள் முதுமையில் இணக்கமாக மகிழ்வுடன் வாழக்கூடிய ஓர் மூதாளர் இல்லம் அமைப்பது தமிழ்க்குடில் தொடர்பானதாகும்.
இணயர் நந்தினி முருகவேள் தனது உரையில், இன்று நான் பேர்ண் நகரசபையால் மதிப்பளிப்பினைப் பெற்றுக்கொள்கின்றேன். என்றால் அதற்கு பலர் காரணம். முதலில் என்னுடைய பெற்றோர்கள். என்னுடைய தந்தை கிருஸ்ணசாமி,என்னுடைய தாயார் அன்னலட்சுமி.
இலங்கையில் சிறுவயதிலிருந்து என்னுடைய பல்கலைக்கழக கற்கைநெறி வரை என்னுடன் அயராது பாடுபட்டவர்கள். என்னுடைய அப்பாவும் ஓர் சிறந்த சமுதாயப்பணியாளர்.
என்னுடைய 5 சகோதரிகளும் அன்றும்,இன்றும், என்றும் எனக்கு ஊக்குவிப்பாக,ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்.அடுத்து என்னுடைய கணவரும்,இரண்டு பிள்ளைகளும், என்னுடன் கடமையாற்றும் எனது தோழி Steffi என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், எனது வேலையிலும் மிகவும் உதவியாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், பாணந்துறை – பன்னமபுர வீதியில் ஒரு கார் சறுக்கி கால்வாயில் கவிழ்ந்து விபத்துள்ளாகி உள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். எனினும் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த பகுதி மக்கள் கயிறுகளின் உதவியுடன் காரை மீட்க இணைந்து பணியாற்றினர்.
முன்னால் வாகனம் வந்தபோது காரின் ஓட்டுநர் பிரேக் போட்டதாகவும், மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், கார் வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் இவ்வாறு விபத்து சம்பவம் இடம்பெறுவதாகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் வரை ரூ.60,000 குறைந்துள்ளதாககூறுப்படுகின்றது.
அதன்படி, இன்று (22.10.2025) காலை கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 322,000 ஆக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, 379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.350,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். சபைத் தலைவருக்குரிய தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவரை மாத்தறை பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள், பிரதேச சபைத் தலைவரிடம் ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சபைக்குள் நுழைந்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச சபை கட்டிடத்தில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பல்கலைக்கழக மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய மீட்டியாகொடவில் வசிக்கும் 25 வயது பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வேளையில் மீட்டியாகொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசாரணையின் போது, தனக்குத் தெரிந்த பிரேசிலிய நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு அமைய பணத்தைப் பெற முயன்றதாக மாணவன் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பபட்ட பெண் டெலிகிராம் செயலி மூலம் சுமார் நான்கு மாதங்களாக பிரேசில் நாட்டு இளைஞருடன் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த உறவு பின்னர் காதல் உறவாக வளர்ந்துள்ளது. குறித்த பெண்ணை திருமணம் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக, குறித்த பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களில் குறித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் கோரியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவனிடம் பணத்தை வழங்குமாறு வெளிநாட்டவர் கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கப்பல்துறை சமுர்த்தி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (21.10.2025) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நடராஜ் என்ற 43 வயதான நபர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நாய் குரைக்கின்ற சத்தம் கேட்டு குறித்த நபர் வெளியே வந்து வீட்டின் முன்னால் உள்ள கடைப்பகுதியை பார்த்தபோது இருவர் அவர் மீது தடியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட நகைகளை அபகரித்து சென்றதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த இரு மர்ம நபர்களும் கடையை உடைத்து திருட வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.