ஹயேஸ் வாகனமும் சிறிய ரக லொறியும் மோதி சிலாபம் – வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் நேற்று (21.10.2025) விபத்துகுள்ளாகியுள்ளன.
நாட்டில் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் பயணித்த ஹயேஸ் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நிலைதடுமாறி தேங்காய்களை ஏற்றிச்சென்ற லொறி மோதித் தள்ளியது.
இந்த விபத்தில் இரண்டு வாகன சாரதிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது பெய்துவரும் கனமழை நாளை (22) வரை தொடரும் வாய்ப்பிருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பீட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா நேற்று (21.10.2025) பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் கடந்த திங்கட்கிழமை தினம் உருவான தாழமுக்கம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இத்தாழமுக்கம் நேற்று (21) மாலை அல்லது இன்று(22) அதிகாலை வடக்கு மாகாணத்துக்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை நாளை வரை தொடரும் வாய்ப்பிருக்கிறது
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதிமுதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21.10.2025) உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சு.காண்டீபன், ஜனநாயக தேசியகூட்டணியின் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவில் வவுனியா மாகநரசபையின் முதல்வர் பிரதிமுதல்வர் தெரிவின் போது பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரனானவகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார்.
எனவே குறித்த இருவரும் அப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி இவ் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுமீதான விசாரணைகள் முடிவடையும்வரை முதல்வர், பிரதிமுதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவினை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆயராகியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் இன்று செவ்வாய்க்கிழமை (21.10.2025) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று களுதாவளை பொது நூலகத்திற்கு அருகாமையில் பிரதான வீதியை கடந்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 70வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திர சாரதி நேற்று திங்கட்கிழமை (20) வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றுள்ள நிலையில் இரவாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் உழவு இயந்திர சாரதியின் உறவிழனர்கள் அவரை தேடி இன்று செவ்வாய்க்கிழமை காலையில் வயலுக்கு சென்ற போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளதையும் சாரதி சடலமாக கிடப்பதையும் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (20.10.2025) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஒருவனால் ஓட்டிச் செல்லப்பட்ட கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலைத்தீவில் உள்ள மற்றொரு தீவுக்கு பேக்ஹோ இயந்திரம் மூலம் பயணித்த போது, அவர் பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், பண்டுவஸ்நுவர பகுதியை சேர்ந்த டி.எம். பிரதீப் சஞ்சீவ என்ற 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் மாலைத்தீவுக்குப் சென்றுள்ளார். அங்கு பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக வேலை செய்துள்ளார்.
அவர் 2 நாட்களாக மாலே பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு படகு அலைகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகில் 07 பேர் இருந்த நிலையில் நான்கு பேர் உயிர் தப்பினர், மீதமுள்ள மூவரில் இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விபத்தின் பின்னர் பிரதீப் சஞ்சீவா காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் நேற்று மதியம் மாலைத்தீவு மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சஞ்சீவவின் உடலை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, எதிவரும் வரும் நாட்களில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மானிங் சந்தை வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கடும் மழையால் பல பயிர்ச்செய்கைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது,” என குறிப்பிட்டுள்ளார்.
மழை பெய்யும் முன் விலைகள் குறைவாக இருந்ததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் ஆனால் தற்போதைய வானிலை மாற்றத்தால் விலை உயர்வு பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வானிலை மாற்றம் தற்போது மரக்கறி விலைகளில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பதுளை மாவட்டத்தின் கெப்பெட்டிப்பொல மற்றும் ஹபராகலா பகுதிகளில் உள்ள பல மரகதோட்டங்கள் கடும் மழையால் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானிலை மாற்றத்தினால் சந்தையில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் இதனால் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால்,
மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு மனைவி கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரக் கொலைக்குப் பின்னால் கள்ளக்காதல், பாலியல் தொழில் தொடர்புகள் மற்றும் மருந்து மாத்திரை மாபியா உள்ளிட்ட பல்வேறு பின்னணிகள் உள்ளன என்று போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.
கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) டிரைவராகப் பணியாற்றி வந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மவுனிகா (30)வைக் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒன்பது மாதங்களாக மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அறிமுகமான அஜயுடன் கள்ள உறவு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி நேரம் கழித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம் பண தொடர்பான காரணங்களால் சுரேஷ் தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா தனது கணவரை கொல்ல தீர்மானித்தார். தனது பாலியல் தொழில் உறவினரான ஜாவாவுக்கு இதை தெரிவித்துள்ளார். பின்னர் சந்தியா என்ற தொழிலாளி மூலமாக மருந்து முகவர் சிவகிருஷ்ணா அறிமுகமானார்.
அவர்களின் யோசனையின்படி புதிய திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி 15 வயாகரா மாத்திரைகள் வாங்கி மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு கொடுக்க முயன்ற போது மட்டன் குழம்பில் அசாதாரண வாசனை இருந்ததால் அவர் மட்டன் குழம்பைத் தவிர்த்து விட்டார். இதனால் முதல் முயற்சி தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி சிவகிருஷ்ணாவின் ஆலோசனையின்படி, தூக்க மாத்திரைகள் அதிகளவில் மதுவில் கலந்து கொடுக்கப்பட்டது. மயக்கமடைந்த சுரேஷை புடவையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு மவுனிகா கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி, உல்லாசத்தின் போது மயங்கி விழுந்ததாக தனது தாயாரிடம் நாடகம் ஆடியுள்ளார். மருத்துவமனையில் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்ததும், போலீசார் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் திட்டமிட்டு கள்ளக்காதலனும் பாலியல் தொழிலாளிகளும் மருந்து முகவரும் சேர்ந்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மவுனிகா, அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில்,
செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து வெளியான தகவலின்படி, 10வது மாடியில் குறுக்கு மின்சாரம் காரணமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த தீ வேகமாக 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவி அபார்ட்மெண்ட் குடியிருப்பாளர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்:வேதிகா சுந்தர் பாலகிருஷ்ணன் (6), கமலா ஹிரால் ஜெயின் (84), சுந்தர் பாலகிருஷ்ணன் (44), பூஜா ராஜன் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்த தகவலறிந்ததும், தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதே நேரத்தில், இதற்கு முன் மும்பை கஃப் பேரேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களில் மும்பை கடற்கரை சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது,
கந்திவாலியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 பேர் இறந்தது போன்ற தொடர் நிகழ்வுகள் மாநிலத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ. 356,000 ஆக குறைந்துள்ளது.
சனிக்கிழமை, இது ரூ. 360,800 என மதிப்பிடப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை ரூ. 390,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 385,000 ஆகக் குறைந்துள்ளது.
அதன்படி கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்திற்கான தேவை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த எச்சரிக்கை இன்று காலை 9 மணி முதல் அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கு மேல் மிக கனமழை பெய்யும்.
தொடர்ந்து காலநிலை தொடர்பான அறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவீடனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு பெண், தனது விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
அவரிடம் பணம் இல்லாமல் கதிர்காமம் பகுதியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த அமிரா இங்கா மேரி டேவி என்ற பெண், கதிர்காம ஆலயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் வழங்கும் பழங்கள் மற்றும் உணவுகளை உண்டு வாழ்வதாக தெரியவந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் நபர்களால் பாதிக்கப்பட்டு அவர் தனது பணத்தை இழந்துள்ளார்.
சுவீடனில் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தப் பெண், தன்னிடம் பணம் அல்லது கையடக்க தொலைபேசி இல்லாததால், நாடு திரும்ப உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்கள், அதனை புதுப்பித்து மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிதி நிறுவனங்களை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்புடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைப்பதற்கு கிடைக்கும் கட்டணமும் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கான முன்பணம் 250,000 முதல் 260,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 22 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு செலுத்தப்பட்ட தொகை 220,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, 24 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு சுமார் 210,000 ரூபாய் வழங்கப்பட்டது.
அடகு வைப்பதற்கான முற்பணம் அதிகரித்ததால், சில வாடிக்கையாளர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தற்போது அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு அதிக விலை பெற தங்கள் அடமானங்களை புதுப்பித்துள்ளதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்க நகைகள் இவ்வளவு அதிக விலையில் அடகு வைக்கப்படுவதால், அவற்றை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பால், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 400,000 ரூபாயைத் தாண்டியது, ஆனால் நேற்று முன்தினம் 390,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்ளூர் நகைச் சந்தையில் தங்கத்திற்கான தேவை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக நகைக்கடைகளில் பணியாற்றுவோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடாவில் நேற்றையதினம்(20.10.2025) உருவான தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த தாழமுக்கம் இன்று மாலை அல்லது நாளை அதிகாலை வடக்கு மாகாணத்திற்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை எதிர்வரும் 23.10.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.