மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வவுனியாவில் நேற்று பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இறுதிப் போரின் போது எவ்வித உணவுப் பொருட்களும் இன்றி பட்டினியால் வாடிய தமிழ் மக்களுக்கு, கஞ்சி எவ்வாறு ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் இளைய தலைமுறைக்கும் உலகிற்கும் நினைவுபடுத்தும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் நேற்று (12.05) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வீதியால் சென்ற பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. போர்க்கால நினைவுகளைச் சுமந்தபடி பலரும் உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் இந்தக் ‘கஞ்சி’, தமிழர்களின் வரலாற்றில் ஒரு துயரமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அந்த வலிகளை மறக்காமல் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகவே வவுனியாவில் இன்று இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் மிகவும் உணர்வுப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா திருநாவற்குளம் 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
போர்க்காலத்தின் கொடூரமான வலிகளையும் பட்டினியால் மக்கள் துடித்த அந்தத் தியாக வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் நிகழ்வின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இந்தக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உணர்வெழுச்சி மிக்க நிகழ்வில் மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல்லா (23) என்பவருக்கும், ஊட்டி அருகே உள்ள மணி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமக்கள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். புதிய வாழ்க்கையைத் தொடங்கக் காத்திருந்த இவர்களது வாழ்வில் எதிர்பாராத விதமாக விதி விளையாடியது.
திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், மாப்பிள்ளை மணி இருசக்கர வாகன விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தான் மணக்க இருந்தவர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்ட பிரபல்லா, கடும் மனவேதனையில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த பிரபல்லா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த துக்கத்தில் இளம்பெண்ணும் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரபல்லாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீவீணா (28), அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் தனது கணவருடன் வசித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு திருமணமான இவர், தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காகப் புளோரிடா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மீட்புக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது மகளுக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை என ஸ்ரீவீணாவின் பெற்றோர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு திருமண விழாவிற்குச் சென்ற இடத்தில் இளம் பெண் பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த எல்.பி.நகர் சட்டமன்ற உறுப்பினர், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார்.
ஸ்ரீவீணாவின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும், விரைவில் உடல் ஐதராபாத் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் செம்மாண்டம்பட்டியைச் சேர்ந்த தனபால் (37), தனது மனைவி மேனகா, மகள், மகன் மற்றும் உறவினருடன் வால்பாறைக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் நெகமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே சோயா லோடு ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன், இன்பச் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு அதுவே கடைசிப் பயணமாக அமைந்தது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த தனபால், அவரது மனைவி மேனகா (35) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தனர்.
பலத்த காயமடைந்த மகள் அனுஷ்கா (17), மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்களது 12 வயது மகன் சுர்ஜித் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த நெகமம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணன் (39) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் யவதமால் மாவட்டத்தில் அன்வி என்ற சிறுமி கடந்த மே 1-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமிக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யாமல், குடும்பத்தினர் அவசரமாக உடலை அடக்கம் செய்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த உடனேயே எவ்வித அதிகாரப்பூர்வ மருத்துவ ஆய்வும் இன்றி உடல் புதைக்கப்பட்டதால், அவரது மரணத்திற்குப் பின்னால் மர்மம் இருப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன.
இது குறித்துப் போலீசாருக்கும் ரகசியத் தகவல்கள் மற்றும் புகார்கள் சென்றது. இதனால் மரணத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்திற்குப் புலனாய்வுத் துறையினர் தள்ளப்பட்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து மயானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
அங்கேயே தற்காலிக மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியான பிறகே சிறுமியின் மரணத்திற்கான உண்மைத் தகவல் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளப் புகழுக்காக போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளம் பெண்கள் உள்ளிட்ட நால்வர் புத்தளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல், அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் பயணித்து ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மூன்று பெண்களும் மற்றும் அவர்களுக்கு வீடியோ எடுத்துக் கொடுத்த மற்றொரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியமை, கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் பிற வீதிப் பயனாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளப் புகழுக்காக வீதிகளில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்திய மாநிலம் தெலங்கானாவில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி, ஒரே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டின் கொமுரவெல்லியைச் சேர்ந்தவர் டி.வினய். இவரும், 21 வயதான அஞ்சலி என்ற பெண்ணும் ஓர் ஆண்டாக காதலித்துள்ளனர்.
இருவரும் தங்களது காதலை தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களது சம்மதத்துடன் ஏப்ரல் 9ஆம் திகதி அன்று வினய், அஞ்சலி ஜோடி திருமணம் செய்துகொண்டது.
பின்னர் வினய் கூலி வேலையும், அஞ்சலி தையல்காரராகவும் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணமான சில நாட்களிலேயே புதுமணத் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவி மீது எழுந்த சந்தேகத்தினால் வினய அவருடன் சண்டையிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஞ்சலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் மனைவி இறந்த செய்தியை அறிந்த வினய், மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவர்களது உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் தொடருந்து பாதை சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களினால் நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி கடுகதி தொடருந்து நேற்று (11.05.2026) தனது சேவையை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, நேற்று(11) காலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து சேவையை ஆரம்பித்த குறித்த தொடருந்து, பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய தொடருந்து நிலையத்தை சென்றடைந்துள்ளது.
பல்வேறு காரணங்களினால் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று தனது சேவையை இடைநிறுத்தியிருந்த யாழ்தேவி கடுகதி தொடருந்து, சுமார் 100 நாட்களின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளது.
இது குறித்து யாழ் தொடருந்து நிலைய அதிபர் பிரதீபன் கூறுகையில், தொடருந்து பாதை சீரமைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை தொடருந்து நிலையம் வரை பயணிக்கும் அதேவேளை,
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ்தேவி தொடருந்து சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, இந்த யாழ்தேவி தொடருந்தானது, குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளது.
அத்துடன், தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட தொடருந்து நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த குறைந்த அழுத்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகல-சியம்பலாண்டுவ வீதியில் ஏற்பட்ட விபத்தில் வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்தார். கடந்த 10ஆம் திகதி காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், பிபில நகரைச் சேர்ந்த, அத்திமலை தோட்ட நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணியாற்றிய ஜி.சி. பிரியசாந்த என்ற 31 வயதுடைய இளைஞராகும்.
அவர் சியம்பலாண்டுவவில் இருந்து பிபில நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம், மொனராகலவில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் வாகன ஓட்டுநரும், அதில் இருந்த மற்றொரு நபரும் மொனராகல மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரேத பரிசோதனை
எனினும் ஓட்டுநர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
லொறி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் மரணம் குறித்து மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
நாடு முழுவதும் 42 அதிக அபாயமுள்ள டெங்கு மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 27,465 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு நோயால் 14 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கன்னங்கரா எச்சரித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 5,930 வழக்குகளும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 4,465 வழக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 1,572 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை முழுமையாக நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், QR முறை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக இந்த முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தேவையற்ற முறையில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே எமக்கு QR முறையின் தேவை ஏற்பட்டது.
அதேபோல், எரிபொருள் சிக்கல் காரணமாக தேவையற்ற கொள்வனவுகளைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற வரிசைகள் உருவாவதைத் தடுக்கவும் எமக்கு QR தேவைப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது எரிபொருள் தொடர்பில் எமக்கு பெரிய பிரச்சினை இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், தேவையற்ற டொலர் தொகை நாட்டிற்கு வெளியே செல்வதைத் தவிர்ப்பதற்காக எரிபொருள் நுகர்வில் எல்லையை நாம் வகுக்க வேண்டும்.
எனவே, தற்போது QR முறையை இல்லாது செய்ய எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய இணைப்பு : 2025 ஆம் ஆண்டு மாமடல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து மூவரை படுகொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபரே திங்கட்கிழமை (11) இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் இரவு மாமடல பகுதியில் உள்ள உயிரிழந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரது தலையை துண்டித்து மாமடல சந்தியில் வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, உயிரிழந்தவரின் மாமனார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலத்த காயமடைந்த அவர் தற்போது அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடலிலிருந்து தலை துண்டிப்பு
குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலையை துண்டித்து மாமடல சந்தியில் உள்ள சிலைக்கு அடியில் மறைத்து வைத்து விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி அம்பலாந்தோட்டை, அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட நபர், கடந்த மார்ச் 30 ஆம் திகதி பிணையில் வெளியே வந்துள்ளார்.
முக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளால் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் அவ்விடத்தில் விட்டுச்சென்ற நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பர் சுவாமிகள் எனப் போற்றப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பொதுமக்களுக்கு தாகசாந்தி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரின் முக்தி தினத்தை (குருபூசை) நினைவுகூறும் முகமாக வீதியால் பயணித்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் தாகத்தைத் தணிக்கும் நோக்கில் இந்த அறப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தாகசாந்தி நிலையத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் உடல் நலத்திற்கு உகந்த மோர், குளிர்ச்சியான குளிர்பானங்கள் ஆகியன பரிமாறப்பட்டன.
வவுனியா நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இந்தச் செயற்திட்டத்திற்குப் பொதுமக்கள் தமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
குருபூசை தினத்தில் இவ்வாறான தர்ம காரியங்களை முன்னெடுப்பது நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் ஒரு ஆன்மீக மரபு என்பது குறிப்பிடத்தக்கது.