
அவரு திருந்த மாட்டாரும்மா என்று தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தனது இரட்டைக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு சாய் லட்சுமி தானும் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) என்பவர், ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் அனில் குமார் (30) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மகன் சேதன் கார்த்திகேயா மற்றும் மகள் லாஸ்யத வள்ளி (2) என்று இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இதில் மகனுக்கு பேச்சு தெளிவாக வராததால், அதை மனைவியின் ஜீன் பிரச்சினையாக கூறி, கணவர் அடிக்கடி தனது மனைவி சாய் லட்சுமியுடன் தகராறு செய்து துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மகனுக்கு சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளில் சாய் லட்சுமி சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. இதனால் தம்பதியரிடையே விரக்தி ஏற்பட்டு உறவில் விரிசல் விழுந்தது.மாதக்கணக்கில் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் கணவர் விசாகப்பட்டினம் சென்றிருந்த சமயத்தில், மனமுடைந்த சாய் லட்சுமி தன் இரு குழந்தைகளின் முகத்தில் தலையணை வைத்து மூச்சுத்திணறச் செய்து கொலை செய்து விட்டு, பின்னர் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன் பெற்றோருக்காக ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதில் “அவர் மாற மாட்டார். என் பிள்ளைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை. மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு, சாய் லட்சுமியின் கணவர் அனில் குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

























