அனர்த்தப் பேரழிவுகளால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு!!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 211 பேரை இதுவரை காணவில்லை. இன்று(12) 12 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை,26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,8138 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் நேற்றையதினம் (11.12.2025) இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் காரில் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ள நிலையில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்தப் பெண் கிரிபத்கொட மருத்துவமனையிலும், சிறு குழந்தை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய ஜீப், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் சிலர் விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டனர், ஆனால் விசாரணைகளில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சாலை விபத்துக்குப் பிறகு, அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும்நிலையில் கைது இடம்பெற்றுள்ளது.

நாட்டுக்கு வந்த பிரித்தானியா வாழ் இலங்கைப் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்!!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

திருமண நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்த பிரித்தானிய வாழ் 61 வயதான ஐரி பெரேரா என்ற பெண்ணே , நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளையில் தனக்கு சொந்தமான வீட்டில், வெள்ளத்தினால் வீடிழந்த 25 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பொருட்களை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். மக்கள் தண்ணீர், உணவு, உடைகள் மற்றும் மருந்துகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளார்

பலரின் அனைத்து உடமைகளும் வெள்ள நீரில் அடித்துச் சென்றுள்ளமையால், மக்கள் நிர்க்கதியாகி உள்ளனர். மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ள நிலையில், கம்பளை பகுதியில் நீண்டகாலமாக வசித்து வந்த பலர் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணங்களை சேகரிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் தானும் ஈடுபட்டுள்ளதாக ஐரி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் மாத இறுதியில் பிரித்தானியா செல்லும் அவர், மக்களுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் துயரத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம்!!

யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார். 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்அனுமதிககப்பட்டமேலதிகசிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிககப்பட்டார் , எனினும் இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியரின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் விவாகரத்தால் திருமணம் நடப்பதை நிறுத்திய பிரபல ஆலயம் : பக்தர்கள் அதிர்ச்சி!!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அலசூரில் வரலாற்று சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவிலில் திருமணங்கள் இனி நடபெறாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோமேஸ்வரா கோவிலில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திடீரென்று இந்த கோவில் நிர்வாகம் இனி எங்கள் கோவிலில் திருமணம் நடத்திவைக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,

எங்கள் கோவிலில் முகூர்த்த நாட்களில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இங்கு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்துள்ளது.

அவர்கள் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கு விசாரணைக்கு கோவிலில் பதிவு செய்த ஆவணங்களை கேட்டு அடிக்கடி பலரும் வருகிறார்கள். இதனால் எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

அத்துடன் விவாகரத்து வழக்குகளில் திருமணம் செய்து வைத்த பூசாரிகளையும் சிலர் கோர்ட்டு படிக்கட்டுகளை ஏற வைக்கிறார்கள். எங்களால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தான் நாங்கள் இனி எங்கள் கோவிலில் திருமணம் நடத்தமாட்டோம் என்ற முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.

சமீபத்தில் ஒருவர், சோமேஸ்வரா கோவிலில் திருமணம் நடத்த அனுமதிப்பதில்லை என கர்நாடக முதல்-மந்திரி அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : மூவர் காயம்!!

காலி – கொழும்பு பிரதான வீதியில் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (09.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

கார் – லொறி மோதி விபத்து : இருவர் காயம்!!

பாதுக்கை – லியன்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை (10.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று முன்னாள் பயணித்த சிறிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் வசிக்கும் கணவன் : இலங்கையில் மனைவியின் காதலனை கொலை செய்ய சதித்திட்டம்!!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நபரைத் தாக்கி கொலை செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்ட இரு சந்தேக நபர்கள், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராமவின் காவந்திஸ்சபுர பகுதியில் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் மீரிகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆகும்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர், தனது மனைவியின் காதலனை தாக்குவதற்கு மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தை வழங்கியதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரன்மிஹிதென்னவில் வசிக்கும் காதலனின் புகைப்படம், வட்ஸ்அப் மூலம் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி!!

அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நீதிமன்ற அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பல்பொருள் அங்காடி 100 விலை கொண்ட குடிநீர் போத்தலை 130 ரூபாய்க்கு விற்றுள்ளது.

இந்தநிலையில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒழுங்குபடுத்தப்பட்ட சில்லறை விலை நிர்ணயத்தை மீறியதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகமாக நிர்ணயித்ததற்காக நுவரெலிய மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதங்களில் ஒன்றாக, இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் உயிரிழந்த இளைஞனுக்கு இழப்பீடு!!

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிபோது உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் , முதல் கட்டமாக இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரண சான்றிதழ் வழங்கப்பட்டதும் மீதி 09 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேவேளை பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் , குறித்த இளைஞனின் தொலைபேசியில் இருந்தே , தகவல்கள் வெளியே சொல்லப்பட்டது.

அதனாலேயே , பேருந்தில் பயணித்த 69 பேரில் 67 பேரின் உயிரினை காப்பாற்ற முடிந்தது. யாழ் இளைஞன் கூரையில் இருந்து வெள்ளத்தினுள் விழுந்த நிலையில் , தவறுதலாக மீட்கப்படாததால் , இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை மீட்கப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் வைத்தியசாலையில் , சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பெற்றோர் : இலங்கையில் பர்தாவுடன் மாணவனின் செயலால் அதிர்ச்சியில் பொலிசார்!!

பண்டாரவளையில் வணிக வளாகத்திற்கு அருகில் பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் நேற்று முன்தினம் மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர் பண்டாரவளை, அத்தலப்பிட்டியவை சேர்ந்த 15 வயதானவர் என தெரியவந்துள்ளது. அவர் பண்டாரவளையில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பாடசாலையில் நாடகம் மற்றும் நடிப்பு பயிலும் மாணவன் எனவும் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பரதநாட்டியத்திலும் ஆடியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் பரத நாடகங்களில் இளம் பெண்ணாக தோன்றியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் தனது சகோதரியுடன் தனது பாட்டியின் வீட்டில் தங்கியுள்ளார்.

மாணவனின் பாட்டி உளவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. தனது தாயார் அனுப்பிய பணத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பர்தாவை வாங்கியதாகவும் மாணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தனக்கு பர்தா அணிய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தனது சகோதரி மேலதிக வகுப்புகளுக்கு சென்ற போது, ​​அவரது உடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை மறைவான இடமொன்றில் அணிந்து கொண்டதுடன், நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாகவும் அந்த மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

தங்கத்தின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதி முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று இந்த சிறியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911 அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் தெரிவிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 0112784422 என்ற தொலைநகல் எண் மூலமாகவோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் http://gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரியப்படுத்த முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது.

மேலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாரிய மண் சரிவில் காணாமல் போன மகளை தேடும் தாய் – தப்பியோடும் போது நேர்ந்த துயரம்!!

பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை தாய் தேடி வருகிறார்.

21 வயதான காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்றயுவதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த கிராமத்தில் மண் சரிவில் சிக்கி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன யுவதியின் உறவினர்கள் மூவரும் இதில் அடங்குவர்.

மண் சரிவு ஏற்படும் தப்பியோடும் போது மகள் அதில் சிக்கிக் கொண்டதாக மகள் தெரிவித்துள்ளார்.

தனது மகள் இந்த மண்மேட்டிற்குள் இரண்டடி அல்லது மூன்றடி ஆழத்தில் எங்கோ இருக்கிறார் என உறுதியாக நம்புவதாகவும், தினமும் 20, 30 தடவைகள் வந்து மகளை தேடுவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயற்சித்த போது மகள் தோட்டப் பக்கம் பாய்ந்ததாகவும், மகள் கை நழுவியதாகவும், இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தாய் தெரிவித்தார்.

அவரது மகன் அருகில் உள்ள வயலில் இருந்து ஓடிவந்து தன் தாயைக் காப்பாற்றினார். எனினும் மகளைக் காப்பாற்ற முடியவில்லை. மகள் மிகத் திறமையானவர் எனவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை தூய்மைப்படுத்திய பௌத்த தேரர்!!

அண்மையில் ஏற்பட்ட இயற்கை சீரழிவுகளால் நாட்டு மக்கள் பலர் நிர்க்கதியான நிலையை சந்தித்திருக்கின்றனர்.

உயிர், உடமை சேதம் என்று சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்துள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஒன்று திரள்வதை கண்கூடாக காண முடிகின்றது.

இதன்படி, பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மத குருக்கள் பலர் பொதுமக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அண்டாவளை சுமண ஜோதி என்ற தேரர் தலைமையிலான குழுவினர், ஒரு இடத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள், ஆலயம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குறித்த பௌத்த தேரர் தலைமையிலான 100 பேர், இணைந்து ஆறு வீடுகள், ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திக் கொடுத்துள்ளனர்.

குறித்த வீடுகளில், 4 வீடுகள் கத்தோலிக்கர்களது வீடுகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த தேரர் ஒரு மாதா சொரூபத்தினை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

இலங்கையை உலுக்கிய அனர்த்தங்கள், இப்படி மன நிம்மதியைத் தரும் சாதகமான மாற்றங்களையும் வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றது.

மிகப்பெரிய அனர்தம் ஒன்று நேர்ந்த பின்னர், இன, மத பேதமற்று இலங்கையர்கள் என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து எமக்காக நாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள, விகாரைகளும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் என்று அனைத்து மத ஸ்தலங்களின் கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன.

யாரும் உணவுக்காக பசித்திருக்கா வண்ணம், சமைத்த உணவுகள் உடனுக்குடன் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது போன்ற பணிகள் வரவேற்கப்பட வேண்டியவை.