மாத்தளையில் பெரும் சோகம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய நாய்!!

மாத்தளை,அம்போக்கா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்களை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். குறித்த பகுதி முழுமையாக மண் சரிவினால் மூடப்பட்டிருந்தது.

மண்ணில் மூழ்கியிருந்த வீட்டின் இடிபாடுகளைக் கூட கண்டுபிடிக்க முடியாது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களின் உடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த நாய் நிலத்தடியில் மறைந்திருந்த குடியிருப்பாளர்களைக் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அம்போக்கா கிராமத்தில் சுமார் எண்பது குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்போது ஒரு கோவிலிலும், அவர்களின் தனிப்பட்ட நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

இதற்கமைய, மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அம்போக்கா கிராமத்தில் உள்ள மலைத்தொடர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.

நிலச்சரிவுகள் காரணமாக வெளியேறுமாறு அதிகாரிகள் தொடர்ந்து தகவல் வழங்கும் நிலையில், முறையான அறிக்கை அல்லது ஆய்வு இல்லாமல் வீடுகளிலிருந்து வெளியேற கடினமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் உடனடியாக கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமை குறித்த அறிக்கையை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை மக்களின் வீடுகளை சுத்தம் செய்யும் வெளிநாட்டவர்கள்!!

டித்வா புயலால் பெரும்பேரழிவை சந்தித்த பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் பதுளையில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு பலர் வீகளை இழந்து நிர்க்கதிக்காகியுள்ளனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்திற்கு தொடர்ந்து அபாயம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் சேதமடையாத வீடுகளை மக்கள் சுத்தம் செய்து வரும் நிலையில், வெளிநாடவர்களும் மக்களுடன் இணைது வீடுகளை சுத்தம் செய்வதாக கூறப்படுகின்றது.

ஹிக்கடுவையில் ரயிலுடன் மோதி கார் விபத்து!!

காலி – ஹிக்கடுவை நாரிகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையின் வீதி வரைபடங்களை புதுப்பிக்கும் கூகுள்!!

வீதி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து Google Maps, இலங்கையின் A மற்றும் B சாலை வரைபடங்களை புதுப்பித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

 

இந்திய மாணவியை வேலைக்கமர்த்திய பிரித்தானிய அரசியல்வாதிக்கு அபராதம்!!

பிரித்தானியாவில் இந்திய மாணவி ஒருவரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்திய லேபர் கட்சி அரசியல்வாதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் மேற்கு வண்டனில் உள்ள லேபர் கட்சி கவுன்சிலர் ஹினா மீர் (Hina Mir), இந்திய மாணவி ஒருவரை குழந்தை பாதுகாவலராக (Nanny) வேலைக்கு அமர்த்தியதற்காக 40,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹினா மீர், 22 வயதான ஹிமான்ஷி காங்க்லேயை (Himanshi Gongley) மாதம் 1,200 பவுண்டு பணமாக வழங்கி, தன் இரு குழந்தைகளை கவனிக்க பணிக்கு அமர்த்தியுள்ளார்.

மாணவிக்கு சட்டப்படி வேலை செய்ய உரிமை இல்லை என்பதையும், விசா 2023 மார்ச் மாதத்தில் காலாவதியானதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மாணவி, 2024 ஓகஸ்டில் பொலிஸ் காரை நிறுத்தி உதவி கேட்டபோது, தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஸ்டீபன் ஹெல்மன், “மீர் சமூகத்தில் நல்ல பெயர் பெற்றவர். ஆனால், அவரது சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளதால் நம்ப முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மீர், மாணவியை “வீடியோ கேம்ஸ் விளையாட, டிவி பார்க்க, வீட்டில் சும்மா இருக்க வந்த விருந்தினர்(social visitor)” என விளக்கமளித்திருந்தார்.

ஆனால், நீதிமன்றம் மாணவியின் சாட்சியங்களை உண்மையானவை எனக் கருதி, மீர் மீது அபராதம் விதித்தது. ஹினா மீர், ஹவுன்ஸ்லோ பகுதியில் முன்னாள் துணை மேயர் ஆவார்.

உள்ளூர் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள், “இது சட்டத்தின் மிகப்பெரிய மீறல். அவர் கவுன்சிலர் பதவியில் தொடரக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.

மீர், 40,000 பவுண்டு அபராதத்துடன் 3,620 பவுண்டு நீதிமன்ற செலவையும் கட்ட வேண்டும். இந்த சம்பவம், பிரித்தானியாவின் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான கடுமையான நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

யாழில் பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி : பறிபோன உயிர்!!

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (09.12.2025) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை(9) அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.

இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

காட்டு யானை மீது மோதி லொறி விபத்து : இருவர் காயம்!!

அம்பாறை – மகாஓயா வீதியில் சமகிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் இருந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு யானை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதி கார் விபத்து!!

காலி – பியதிகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம் : கதறும் குடும்பம்!!

 

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பேரிடரிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

பேரிடருக்கு மத்தியில் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டை விட 2.14 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3வீத அதிகரிப்பை காட்டியுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் இலங்கையின் சுற்றுலாவிற்காக இந்தியா மிகப் பாரிய பங்களிப்பை வகித்துள்ளது. இதில் 8,890 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

ரஷ்யா 4,735, ஜெர்மனி 4,399, இங்கிலாந்து 3,053, சீனா 2,571 என்ற எண்ணிக்கையில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, போலந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் 344,309 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கையை கட்டியெழுப்ப இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!!

பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீள கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் இந்த நிதி கிடைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சரின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தித்வா புயலினால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அனர்த்த நிலையால் சேதமடைந்த வர்த்தகங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறையை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

இந்த திட்டத்தின்படி,சொத்துக்களுக்கு ஏற்பட்ட சிறிய சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்த பின்னர் இழப்பீடு வழங்கவும், முதற்கட்டாக ஒரு தொகையை வழங்கவும் காப்புறுதி நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளன.

தந்தை திட்டியதால் உயிரை மாய்த்த பதின்ம வயது மாணவி!!

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கினிகஹவெல 14 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி தனது தந்தை தந்தை , தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த சிறுமி 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன் திங்கட்கிழமை (08) அன்று ஆடைகளை தைப்பதற்கு நகரத்திற்கு சென்று, வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக அவளுடைய தந்தை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி விஷம் அருந்தியுள்ளதுடன் பின்னர், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புதன்கிழமை (10) அன்று மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

திருமண போட்டோ சூட்டில் பெரும் சோகம் : மோட்டார் சைக்கிள் மோதி மணமக்கள் பலி!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர்.

வருகிற 20-ந் தேதி இருவரின் குடும்பங்களின் கூட்டுத் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு முன்னதாக, ‘போட்டோ சூட்’ செய்ய இருவரும் முடிவு செய்தனர்; குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர்.

முந்தைய நாட்களில் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்தனர். அதன்பிறகு, கங்காவதி அருகே சிக்கபெனகல் கிராமம் வழியாக வருகை தரும் போது,

நடுரோட்டில் நின்றிருந்த லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார்; கரியப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். கங்காவதி புறநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்து, இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

லாரி டிரைவரைத் தேடும் முயற்சிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணமக்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது,

இன்று(10.12.2025) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,303,574 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 45,990 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 367,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,160 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 337,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,250 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 321,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கரட்டின் விலை 3000 ரூபா, நுவரெலியாவில் 190 ரூபா!!

இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதற்கமைய நுவரெலியாவில் 190 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் கரட், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒரு கிலோ கரட் 2900-3000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து நேற்று கொழும்புக்கு ஏராளமான மரக்கறிகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் கொழும்பில் அது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொருளாதார நிலைய மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபா, கரட் 190 ரூபா, லீக்ஸ் 190 ரூபா, முள்ளங்கி 160 ரூபா, பீட்ரூட் 230 ரூபா, உருளைக்கிழங்கு 260 ரூபா, சிவப்பு உருளைக்கிழங்கு 280 ரூபா விலையிலும் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதுடன் சீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மரக்கறிகள் உட்பட 73,000 கிலோ காய்கறிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் போஞ்சி விலை கிலோவின் விலை 1,000 ரூபாயை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் கேரட்டின் விலையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.

மீகொட மற்றும் வெலிசரை பொருளாதார மையங்களிலும் இதேபோன்ற நிலையே காணப்படுகிறது.

விதிவிலக்காக அதிக விலைகளிலிருந்து சில மரக்கறி வகைகள் தளர்ந்து வருகின்றன, மீகொட பொருளாதார மையத்தில், டிசம்பர் 8 அன்று காட்டப்பட்ட மொத்த விலைப் பட்டியல் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தைக் குறிக்கிறது.

ஒரு கிலோ போஞ்சி 1,100 முதல் 1200 வரை விற்பனையானது, இது விலையில் தொடர்ச்சியான உயர்வை பிரதிபலிக்கிறது. கோவாவின் விலை கிலோ ஒன்று 200 முதல் 250 வரை பதிவாகியுள்ளது. கரட்டின் விலை குறைந்து 200-250 ரூபாயாக ஆக இருந்தது.

இதற்கிடையில், கத்திரிக்காயின் விலை ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது,

இலங்கையில் மீண்டும் மண்சரிவு : இரவு வேளையில் தப்பியோடிய மக்கள்!!

இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.

எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ச்சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.