மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தளர்வான கொள்கைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டமும் 16 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும், மேலும் அதை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடருக்கு பிறகு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் எனவும், இருப்பினும், மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 147 பாடசாலைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் மணலுடன் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (10.12.2025) பகல் இடம்பெற்றுள்ளது
திருவையாறு பகுதியில் இருந்து இரணைமடு சந்தி நோக்கி மணலுடன் சென்று கொண்ந்த டிப்பர் வாகனம் அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
எனவே அருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கோ அல்லது 1911 என்ற குறுந்தகவல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து மாகாணங்களிலும் சுமார் ஒரு இலட்சம் (101,000) மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.
இவர்களில் திடீர் பேரழிவு காரணமாக இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலர் பாதுகாப்பு மையங்களில் உள்ளதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் தகவல்களும் உடனடியாகக் கண்டறியப்படும் என்றும், பின்னர் மீதமுள்ள உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நிச்சயமாக நடைபெறும் என்றும்,
எனவே, திகதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல், ஜனவரி மாதத்தை இலக்காகக் கொண்டு பரீட்சைக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் விண்ணப்பதாரர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த அவர்களின் தகவல் மற்றும் அடையாள எண்ணுடன் 1911 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை நடைபெற்ற திகதிகளில் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆரம்ப மதிப்பீடு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பலர் உயிரிழந்த நிலையில், நாயொன்றினால் கிராமம் ஒன்று காப்பாற்றப்ட சம்பவம் பதிவாகி உள்ளது.
பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட சூட்டி என்ற பெயர் கொண்ட நாய் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தமையினால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த 28ஆம் திகதி பாரிய மழை பெய்து கொண்டிருந்த போது, குறித்த நாய் தொடர்ச்சி ஊளையிட்டு, உரிமையாளரை எச்சரித்துள்ளது.
நாயின் செயற்பாட்டினை உணர்ந்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்த்த போது, மோசமான நிலைமை குறித்து அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
உடனடியாக குழந்தைகள் உட்பட அந்தப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். காலையில் அவர்கள் வாழ்ந்த இடத்தில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உவபரணகமவின் மஸ்பன்ன எனப்படும் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி டி.எம். தென்னகோன், தான் அனுபவித்த அனுபவத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.
“செப்டம்பர் மாதம் முதல் எங்கள் கிராமங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 27 ஆம் திகதி மதியம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. மாலையில், எங்கள் கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
பின்னர், கிராமத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிந்தேன். இரவில் மிகவும் சிரமப்பட்டு நாங்கள் இரவு உணவு சமைத்து, சமையலறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம்.
எங்கள் நாய் சமையலறைக் கதவை முன் பாதங்களில் மோதி, விசித்திரமாக சிணுங்கி, ஊளையிட்டுக் கொண்டிருந்தது. முதலில், மழையில் திருடன் வந்திருப்பார் என்று நினைத்தோம்.
பின்னர் மழையால் ஏற்பட்ட குளிரால் வீட்டிற்குள் வர முயற்சித்திருக்கலாம் என நினைத்தோம். கதவைத் திறந்தபோது, எங்கள் நாய் குரைத்துக் கொண்டே முன்னோக்கி ஓடுவதைக் கண்டோம்.
அதே நேரத்தில், மலையிலிருந்து பெரிய பாறைகள் உருண்டு விழும் சத்தம் கேட்டது. ஒரு நிலச்சரிவு எங்கள் வீட்டை மூடும் என்று நினைத்தேன். காப்பாற்ற வாருங்கள் என கத்திக்கொண்டு வீட்டிற்குள் ஓடினேன்.
என் மனைவி மற்றும் மனைவியின் தாயையும் அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். நிலச்சரிவு வரும் என்று நினைத்து சுமார் 100-200 மீட்டர் ஓடினோம்.
எங்கள் அலறல் பக்கத்து வீடுகளில் வசிக்கும் 11 பேரின் உயிரைக் காப்பாற்றியது. எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. சூட்டியால், நாங்கள் 14 பேரும் காப்பாற்றப்பட்டோம். இல்லையெனில் நாங்கள் மண்ணில் புதைந்திருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
டித்வா புயலால் இலங்கையில் 25 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது.
‘டித்வா’ சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட வெள்ல அனர்த்தத்தில் சிக்கி கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள் நிகழ்ந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள நீர் அதிகரிக்கும் ஒரு மணி நேர காலப்பகுதிக்குள், டைட்டானிக் கப்பலின் சோகம் இந்தக் கட்டிடத்தினுள் அரங்கேறி இருக்க வேண்டும். அதிலும் Jack, Rose போன்ற பாத்திரங்கள் இருந்திருக்கலாம்.
இதன்போது வீட்டின் மேல் மாடியின் கூரை. ஒருவர் தலையால் அடித்து கூரையை உடைத்துக்கொண்டு வெளியேற சந்தர்ப்பம் கிடைத்து உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் தாய், தந்தை, மகள் மற்றும் அத்தை, இந்த அறைக்குள்ளேயே மரணமடைந்துள்ள நிலையில், இரண்டு மாடி கொண்ட முழு கட்டிடமும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாகவும் கூறப்ப்படுகின்றது.
குழந்தையின் தந்தை என நிரூபிக்க , இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி செவ்வந்தி சேனாதிவீர எனும் பெண் விமானி ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சாமிக்க கருணாரத்ன DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் உள்ள ஒரு ஆடையகத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலங்கம பொலிஸாரின் கூற்றுப்படி, நேற்று கடையின் ஆடை மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபருக்குச் சொந்தமான ஒரு கையடக்கத்தொலைபேசியை பரிசோதிக்கப்பட்டபோது, அறைக்குள் பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில்,பெண்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள்; ஆடை மாற்றும் காணொளிகள் மற்றும் ஒரு வீட்டின் குளியலறையில் ஒரு பெண் குளிக்கும் தனி காணொளி ஆகியவை இந்த காட்சிகளில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளிகள் இணையங்களில் பதிவேற்றப்பட்டதா அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டு வலைத்தளங்களுக்கு விற்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
கொழும்பை அண்மித்த தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 7 ஆம் திகதி அதிகப்படியான மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்ததாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கொழும்புக்கு அருகிலுள்ள மீகொட என்ற தேசியப் பாடசாலையை சேர்ந்த 18 வயது மாணவி என தெரியவந்துள்ளது.
மாணவி கடந்த 7 ஆம் திகதி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அடிப்படை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் மாணவி உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான மருத்துவ பரிசோதனையில் மாணவி சுமார் 65 மாத்திரைகளை உட்கொண்டதாகவும், இதுவே அவர் மரணத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மீகொட பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, ஆரம்பகட்ட விசாரணையில், இந்த மாணவி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று உயர்தரம் படிக்க தகுதி பெற்றவர் என தெரியவந்துள்ளது.
திறமையான மாணவியின் திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பணத் தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 6 குளங்களினுடைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை மற்றும் புயலின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 114 குளங்கள் உடைப்பெடுத்திருந்தன.
உடைப்பெடுத்த குளங்களை புனரமைப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கமக்கார அமைப்பினரின் உதவியுடன் 24 குளங்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், 6 குளங்களினுடைய புனரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஏனைய குளங்களையும் புனரமைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் இயற்கை பேரழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை என இயற்கை சீற்றங்கள் தாண்டவம் ஆடி வருகின்றன.
இது தொடர்பில் தற்போது பாபா வாங்காவின் கணிப்புக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான வாங்காவின் கணிப்புகளில் இயற்கை சீற்றங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.
பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர காலநிலை மாற்றங்கள் போன்ற பல பேரழிவு நிகழ்வுகளை அவர் முன்னறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்தக் catastrophic நிகழ்வுகள் பூமியின் நிலப்பரப்பை ஏழு தொடக்கம் எட்டு வீதம் வரை அழிக்கக்கூடும் என பாபா வங்காவின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சூழலியல் அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவரது கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர காலநிலை மாற்றங்களையும் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மழைப்பொழிவு, கடுமையானதாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவலைகளைத் தூண்டும் என கூறப்படுகின்றது.
வெப்பமண்டல சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தாக்க மதிப்பீட்டிற்காக நீர்ப்பாசனத் துறை, மகாவேலி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ஆகியவற்றை திணைக்களம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
அதேவேளை வங்காள விரிகுடாவில் மேகங்கள் புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து, தீவிர மழையை ஏற்படுத்தும் என்றும் பிபிசி தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், நீர்ப்பாசனத் துறை மற்றும் மகாவேலி மேம்பாட்டு ஆணையம் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களை நிர்வகிப்பதற்கு தயாராக இருப்பதாக நிலம் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
அதேவேளை தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து பெரும்பாலான முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கசிவு மட்டத்தில் உள்ளன என்றார். மீண்டும் 150-200 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அது ஆபத்தானது.
அதிகப்படியான நீரை வெளியேற்றவும் நிலைமையை நிர்வகிக்கவும் நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
சமீபத்திய வெள்ளத்தால் சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலம் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கூறினார்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது. மேலும், 191 பேரை இதுவரை காணவில்லை.
இன்று முற்பகல் 10 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.