எகிப்தில் மீண்டும் இராணுவப் புரட்சி: ஜனாதிபதி பதவி நீக்கம்..!

எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்‌ந்து அந்நாட்டு ஜனாதிபதி மோர்ஸியை இராணுவம் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து முபாரக் அதரடியாக நீக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முகம்மது கோர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மோர்ஸிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

இதனை அடுத்து ஜனாதிபதி மோர்ஸி அரசுக்கு ‌ சொந்தமான தொலைக்காட்சியில் மோர்ஸி பேசுகையில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பதவி விட்டு விலக மாட்டேன். நாட்டுக்காக தொடர்ந்து பாடு‌படுவேன் என் கூறினார். தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களினால் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

ஜனாதிபதியை நீக்க வலியுறுத்தி நடைபெறற போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து இராணுவம் மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது. இராணுவம் விடுத்திருந்த கெடு முடிந்தநிலையில் இராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது.

இதனை ‌தொடர்ந்து ஜனாதிபதி பதவி விலகியதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் இராணுவம் அதிரடியாக அறிவித்தது. மேலும் விரைவில் தேர்தல் நடைபெற நடவடிக்‌கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக எகிப்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபயான மகர் எல் பெஹய்ரி பதவி வகிப்பார் என இராணுவ தளபதி அபடெல் அல் சிசி தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோர்ஸியின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட மோர்ஸி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Egypt

ரஷ்ய ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 19 பேர் அதிர்ச்சி மரணம்..!

ரஷ்யாவின் வடக்கே இருக்கும் யாகுதியா பகுதியில் 11 குழந்தைகள் உள்பட 25 பயணிகள், 3விமான சிப்பந்திகளுடன் மிக் 8 ரக ஹெலிகாப்டர் சென்றது. அது திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது.

இதில் குழந்தைகள் உள்பட  19பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ரஷ்ய அதிகாரிகள் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் ஹெலிகாப்டர் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த யோகேஸ்வரன் மணிமாறனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

யோகேஸ்வரன் மணிமாறன் இலங்கையில் வங்கியொன்றில் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், லண்டன் காடிப் மைதானத்தில் நடைபெற்றபோதே இவர் புலிக் கொடியுடன் மைதானத்திற்குள் பிரவேசித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

85 வயது முதியவராக வரப்போகும் விக்ரம்!

vikram

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘ஐ’ படத்தின் போஸ்டர், டிரெய்லர் எப்போது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் பல காலம் ஆகும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

மிகவும் உடல் மெலிந்து காணப்பட்ட விக்ரம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே ‘ஐ’ படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக விக்ரமை எந்த பொது நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை.

அதுமட்டுமன்றி ஜி.வி.பிரகாஷின் திருமணத்தில் கூட விக்ரம் கலந்து கொள்ளவில்லை. தொலைபேசி மூலமாக தனது வாழ்த்தை தெரிவித்தார். விக்ரம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று விசாரித்ததில் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்தன.

‘ஐ’ படத்தில் 85 வயது முதியவர் வேடம் ஒன்று இருக்கிறதாம். அதுவும் அந்த வேடத்தில் உடம்பை ஏற்றி ஜிம் போய்(Gym Boy) மாதிரி இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறாராம் ஷங்கர்.

இதற்காக எந்த நேரம் பார்த்தாலும் ஜிம்மே கதி என்று இருக்கிறாராம் விக்ரம். ஜிம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் படப்பிடிப்பு என்று கடந்த 3 மாதங்களாக இருந்து வருகிறார் விக்ரம்.

இந்த உடலமைப்போடு எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கோ, குடும்ப நிகழ்ச்சிக்கோ செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறாராம் ஷங்கர்.

யானை கைத்தொலைபேசியை இயக்குவதை பார்த்ததுண்டா?? (வீடியோ இணைப்பு)

elephant

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுக்கு மட்டுமன்றி விலங்குளையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது இக்காணொளி மூலம் உங்களுக்கு புரியும்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் விரைவாகவும் பலரின் அபிமானங்களை பெற்று வருவது தைத் தொலைபேசியின் வளர்ச்சியாகும். பல நிறுவனங்கள் போட்டி தமது உற்பத்திகளை பெருக்க புது புது உத்திகளை பயன்படுத்தி வருகின்றன.

இங்கு ஒரு யானை ஒன்று மிகவும் அலாதியாக கைத்தொலைபேசியை இயக்குகின்றது பாருங்கள்.

2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்..!

அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.

அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரது 5 வயது பேரனும், 2 வயது பேத்தியும் அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த தாத்தா, இடையில் வேறு வேலை காரணமாக உள் அறைக்குச் சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.

எதிர்பாராத விதமாக ட்ரிக்கரில் கை பட்டு விட, அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவனது தங்கையின் முகத்தில் பாயந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக பலியானாள்.

மேலை நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெரியவர்களின் அஜாக்கிரதையாலேயே இத்தகைய உயிர் பலிகள் ஏற்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை ஒழுங்கமைத்துள்ள பாரிய பேரணியொன்று தற்போது கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஹை லெவல் வீதி வழியாக கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கிசென்று கொண்டிருக்கிறது.

இதன்போது பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இலவசக் கல்வியை இலவசமாகப் பெறுவதற்காக போராடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கும் எதிர்ப்புத்தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பெருந்திரளானோர் பங்குபெற்றும் இவ் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொட மற்றும் ஹை லெவல் வீதி பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது.

university6

university1

university2

university3

university4

university5

 

வவுனியாவில் மதுபான விற்பனை நிலையமொன்றில் கொள்ளை..

robbery

வவுனியா நெடுங்கேணிப் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றிற்கு வந்த இருவர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது

நேற்று இரவு 9.10 மணியளவில் மதுபான நிலையம் பூட்டப்படும் வேளையில் இரு நபா்கள் வந்து தமக்கு சாராயம் வேண்டுமென்று கூறியுள்ளனர்.

அப்போது விற்பனையாளர்கள் உள்ளே சென்று சாராயம் எடுக்கும் வேளை சடுதியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள் உட்பக்கமாக வாயில் கதவை பூட்டியதுடன் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்த 3 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணிப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இம்மது விற்பனை நிலையத்தில் இரண்டாவது முறையாகவும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு சுசந்திக்கா தெரிவு!

susanthika

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தெரிவாகியுள்ளார்.இந்தியாவின் புனேயில் நடைபெற்ற சம்மேளனத்தின் தேர்தலில் அவர் தெரிவாகியுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஸ் கல்மாடியை தோற்கடித்து கட்டாரின் ஜெனரல் தலான் அல் ஹமாட் இம்முறை வெற்றிபெற்றுள்ளார். செயலாளராக மொரிஸ் நிக்கலஸ் தெரிவாகியுள்ளார்.

சம்மேளனத்தின் வீதியோட்டம் உப குழுவிற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவர் ஜீ.எல்.எஸ்.பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அதன் நிறைவேற்றுக் குழுவிற்கு போட்டியிட்ட இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் பின்னவலவிற்கு இம்முறை தேர்தலில் வெற்றிபெற முடியாமற் போனது.

 

அடுத்த வாரம் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்?

எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியிலான பஸ் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பஸ் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் உறுதியான பதில் எதுவும் அளிக்காவிட்டால் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண உயர்வு குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கனடாவில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்..!

நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனேடிய நேரப்படி மாலை 3 மணி முதல் 5 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

26வது ஆண்டாக இடம்பெறும் இப்பெருநிகழ்வானது, முதன்முறையாக கனேடிய மண்ணில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை இப்பெருநிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் ‘போர் தவிர்ப்பு வலையம்’ ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு, இயக்குனர் கலம் மக்றேவும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் அவர்கள் புலம்பெயர்ந்த தேசமொன்றில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு நிகழ்வுகளாக நடனக் கலைஞர் பிரேம் கோபாலின் நடனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சிறப்புரை என்பனவும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் பங்கேற்கவென இரா.சம்பந்தன் இலங்கையில் இருந்து கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேஷ் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் சம்மதித்தது எப்படி?

இங்க என்ன சொல்லுது படத்தில் விடிவி கணேஷின் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் கணேசுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படம் நடுத்தர வயதுடைய நபர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பற்றியது.

இதில் ஹீரோயினாக மீராவை தவிர வேறு யார் நடித்தாலும் சிறப்பாக இருக்காது என கருதினோம்.

எனவே உடனடியாக கேரளாவில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்று கால்ஷீட் கேட்டோம்.

ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததுடன், திகதி இல்லை என கூறிவிட்டார்.

பின்பு முழுவதுமாக கதையை கூறியவுடன், நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார், அடுத்த நாளே படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா!

விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இவர் உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது விடுதலைப் புலிகளுக்குத் தாம் இராணுவத் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

2006இல் ரொரொன்ரோவில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, ஏற்கனவே சிறையில் இருந்து வருவதால், அவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட வாயப்புகள் உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர், தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து போராட்டத்தின் போது நடு வீதியில் வைத்து பெண் நிருபர் பலாத்காரம்..!

இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எகிப்தின் ஜனாதிபதி முகமது மொர்ஸிக்கு எதிரான போராட்டதின் போது, பெண் நிருபர் ஒருவர் ஐந்து நபர்களால் நடு வீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர செயல் மாபெரும் எழுச்சி போராட்டத்தில் நடந்திருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் ஜனாதிபதி முகமது மொர்ஸி பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மாபெரும் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தலைநகரின் மைய பகுதியான தாஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி பேரணிகள் ஞாயிற்றுகிழமை புறப்பட்டது. இந்த நிலையில் பேரணியின்போது டட்ச் நாட்டை சேர்ந்த பெண் நிருபர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இலட்சக்கணக்கானோர் சூழ்ந்த முக்கிய போராட்ட பகுதியில் அன்றிரவு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். தற்போது அந்த பெண் பலத்த காயமுற்று அதன் விளைவாக அறுவை சிகிச்சைகளை பெற்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் எகிப்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் பாலியில் தொந்தரவிற்கு எதிரான அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் ஐந்து நபர்களால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த ஞாயிறு இரவு மட்டும் 44 பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு தரப்பு போராட்டத்தின் எழுச்சியை குறைக்க மற்றும் பெண்களின் பங்கேற்பை தடுக்க இத்தகைய இரக்கமற்ற அநாகரீகம் செயல்களை நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மலசலகூட கதவென நினைத்து விமான நிலைய கதவை திறந்தவர் அமைச்சர் ரம்புக்வெலவின் மகன்!

லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இரண்டாவதாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.

இதனால் பயணிகள் பதற்றமடைந்ததுடன் சக வீரர்கள் அவரை கதவை திறக்க வேண்டாம் என சத்தமிட்டுள்ளதாக விமானத்தின் பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும் ரமித் ரம்புக்வெல மலசலகூட கதவு என நினைத்து விமான நிலைய கதவை திறந்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு மலசலகூட கதவு இனங்காட்டப்பட்ட பின் அவர் பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் மன்னிப்பு கோரியதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய கிரிக்கெட் வீரர் மீது ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை – 161 ஓட்டங்களால் அபார வெற்றி..!

CRICKET-JAM-IND-SRI

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றிகளை கண்டுள்ளது.

இந்த நிலையில் கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

உபாதை காரணமாக போட்டித்தொடரிலிருந்து டோனி விலகியதை அடுத்து நேற்றைய போட்டிக்கு விராத் கோஹ்லி தலைமை தாங்கினார். இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டுடை மாத்திரம் இழந்து 348 ஓட்டங்களை விளாசித்தள்ளி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 174 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தன 107 ஓட்டங்களையும் பெற்றுக்கெடுத்தனர்.

349 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்ளையும் இழந்து 187 ஓட்டங்ளை மட்டுமே எடுத்து படு தோல்வியைத் தழுவியது.

இலங்கை சார்பாக ஹேரத் 3 விக்கெட்களையும், சேனநாயக்க மற்றும் மலிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என அனைத்து துறைகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றை போட்டியில் பெற்ற அபார வெற்றி மூலம் ஒரு போனஸ் புள்ளியையும் சுவீகரித்துக்கொண்ட இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே அணித்தலைவர் தோனியை இழந்துவிட நிலையில் நேற்றைய படுதோல்வி மூலம் இனிவரும் போட்டிகளில் கடுமையாகப் போராடவேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.