நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவர் இன்று வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வடமாகணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மாகாண அமைச்சர்களை நியமனம் செய்தல் தொடர்பாக பங்காளிக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக கடந்த 11 ம் திகதி யாழில் நடந்த பதவிப்பிரமாண நிகழ்வினை ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் பகிஸ்கரித்தனர்.
இவர்களில் கடந்த 14 ஆம் திகதி ரெலோவின் கே.சிவாஜிலிங்கம் முள்ளியவாய்க்காலிலும், புளொட்டின் த.சித்தார்த்தன், ரி.லிங்கநாதன் ஆகியோர் யாழிலும், ஈபிஆர்எல்எப் து.ரவிகரன் மற்றும் ரெலோவின் எஸ்.குணசீலன் ஆகியோர் கொழும்பில் சிவி முன்னிலையிலும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மற்றைய நான்கு உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஈபிஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்ட க.சர்வேஸ்வரன், ம.தியாகராஜா, க.சிவமோகன் ஆகியோர் இன்று தமது பதவிப்பிரமாணத்தைச் செய்து கொண்டனர். வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் சட்டத்தரணி கே.தயாபரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







