சூழல் மாசடைவதற்கு எடுத்துக்காட்டாக மாறிவரும் வவுனியா குளம்!!

1393

vavuniya kulam

சூழல் மாசடைதல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர்பான தெளிவின்மை தொடர்ந்தும் காணப்பட்டே வருகின்றது . அந்த வகையில் சூழல் மாசடைவதில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையாக உள்ளது .

இவ்வாறு பிளாஸ்டிக் பொரு ட்களின் பாவனையால் இன்று ரம்மியமான பல இடங்களும் அசுத்தமாகிப் போகும் துர்ப்பாக்கிய நிலை உள்ளது . இவ்வாறான ஓர் நிலையிலேயே வவுனியா மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 120 ஏக்கர் வயல் காணிகளை தன்னகத்தே கொண்டமைந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான வவுனியா குளம் காணப்படுகின்றது .

வவுனியாவில் உள்ள பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இக் குளத்தின் நீரேந்து பிரதேசங்கள் உட்பட குளத்தின் நீர் பகுதியிலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்கள் அதிகளவில் காணப்படுவதனால் இப்பகுதி அழகற்றுக் காணப்படுவதுடன் இக் குளத்தினை நம்பி ஜீவனோபாயத்தை நடத்தும் பலரும் பெரும் அசெளகரியத்தை எதிர்கொள்கின்றனர் .

வவுனியா நகரசபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பன நகர்ப்பகுதியில் இருந்து வரும் கழிவான நீரை சுத்திகரித்து குளத்தில் விடுவிக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள பகுதியை சூழ அழகுபடுத்தும் செயற்றிட்டத்தை உள்வாங்கி எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று இக்குளம் நகர்ப்பகுதியில் சூழல் மாசடைவதற்கு எடுத்துக்காட்டான பிரதேசமாக மாறியிருக்கின்றது .

இங்கு அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நீர்த் தொட்டிகளினுள் நீண்ட காலமாக சுத்திகரிக்கப்படாது தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் இதனுள் காணப்படும் பொருட்கள் நீர்ப்பாசன குளத்திற்கு செல்வதனால் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் தமது விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .

இத்துடன் இப்பகுதியில் உள்ள கால்நடைகள் பெலித்தீன்களை உண்பதனால் இறக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர் . குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களினால் மீன்கள் இறப்பு வீதம் அதிகரித்துள்ளமையும் நீர்ப்பாசனம் செய்யும் போது வயல் நிலங்களுக்குள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் என்பன நீருடன் வருவதனாலும் விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு ஒவ்வாத நிலங்களாக மாறி வருவதாகவும் விவசாயிகளும் மீன்வர்களும் கவலை தெரிவிக்கின்றனர் .

இதேவேளை இக் குளத்தின் அயலில் உள்ளவர்களால் இக் குளத்தினுள் கொட்டப்படும் குப்பைகளினால் அதிகளவில் இக்குளம் மாசடைந்து வருவதாக தெரிவிக்கும் விவசாயிகள் இப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கவனம் செலுத்தாத காரணத்தால் மழைக் காலங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் சுகாதார வைத்திய அதிகாரி இவ் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுடன் வவுனியா நீர்ப்பாசன திணைக்களமும் வவுனியா நகரசபையும் தம் பராமரிப்பிலுள்ள இக்குளத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் .